Saturday 19 March 2016

இறைத்திருவுளம்!

இன்றைக்கு தாய்த்திருச்சபை தூய யோசேப்பின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. யோசேப்பைப்பற்றி வெகுஅரிதாகத்தான் நற்செய்தியிலே நாம் பார்க்க முடியும். அவர் தாவீதின் வழிவந்தவர். நேர்மையாளர்.

குழந்தைக்கு நல்ல பாதுகாப்பான தந்தையாய் இருந்தார். பலவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, தனது வாழ்வை அமைத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நம்மால் பதில் கண்டுபிடிக்க முடியாது. அவற்றிற்கு விளக்கங்களும் நம்மால் சொல்ல முடியாது. யோசேப்பின் வாழ்விலும் கூட பல கேள்விகளுக்கு அவரால் பதில் கண்டுபிடித்திருக்க முடியாது.
எதற்காக தான் மரியாளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் அவருக்கு கிடைக்கக்கூடிய அவப்பெயர் என்ன? மரியாள் எப்படி தூய ஆவியினால் கருத்தரித்திருக்க முடியும்? இதை நம்ப முடியுமா? இந்த உலகம் தன்னை எப்படிப்பார்க்கும்?

எதற்காக தான் வாழ்க்கை முழுவதும், இந்த குடும்பத்திற்கு காவலாக இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் அவருடைய உள்ளத்தைத்துளைத்திருந்தாலும், அந்த கேள்விகளுக்கான பதில் அவருக்கு தெரியவில்லை என்றாலும், அதைப்பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்.

அதற்கு, நிச்சயம், அவர் கடவுள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை தான் காரணம். நம்பிக்கையாளராக இல்லாமல், யோசேப்பால் இத்தகைய வாழ்வு வாழ்ந்திருக்க முடியாது.

நமது வாழ்வில் நாம் யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர்களாய் இருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வோடு வாழ வேண்டும்.

வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகள் நம்மை வாட்டுகிறபோது, அவற்றைப் பொறுமையாக நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். நமது நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

இன்று புனித சூசையப்பரின் திருவிழா. அவரின் பெயரைக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் செபங்களும். புனித வளனாரிடம் இருந்த ஒரு நற்குணம் பொருப்பில் உள்ள அனைவருக்கும் அவசியம்.

அந்த நற்குணம் சரியான முடிவு எடுப்பது என்பது. இக்கட்டான நேரங்களில் சரியான பொருத்தமான முடிவு எடுப்பது குடும்ப தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கண்காணிப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணம். சிறந்த ஞானமும் நிதானமும் உள்ளவர்கள்தான் சரியான, நல்ல முடிவை உடனே எடுக்க முடியும்.

சூசையப்பரின் வாழ்வில் மனைவி ஒரு பிரச்சனை (மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது மத்1:18) பொருளாதாரம் ஒரு பிரச்சனை(இவர் தச்சருடைய மகன் அல்லவா? மத் 13:55). வீடு ஒரு பிரச்சனை(எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார் மத் 2:14) பிள்ளை ஒரு பிரச்சனை ("நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?

 நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?"லூக் 1:49) ஒவ்வொரு கட்டத்திலும் சரியான முடிவெடுத்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்.

அதற்குக் காரணம் அவரிடமிருந்த ஆன்மீகம். கடவுள் பக்தி. இறை நம்பிக்கை. அதில் கிடைத்த ஞானம்.அதனால் அவரிடம் இருந்த நிதானம்.அந்த நிதானம் வழங்கிய நிறைவு.அந்த நிறைவில் ஒரு நிம்மதி.நம் வாழ்விலும் இந்த ஆன்மீகத்கத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment