Monday 7 March 2016

மலரும் நம் வாழ்வு!


''இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்'' (யோவான் 4:47).

இயேசு அதிசய செயல்களைச் செய்தார் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனால் ஏன் அவர் அச்செயல்களைச் செய்தார் என்று கேட்டால் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, மனமுவந்து அவர்களுக்கு உதவினார் என நாம் பதிலிறுக்கலாம்.

இயேசுவின் உதவியை நாடிச்சென்ற மனிதரிடம் அவர் எதிர்பார்த்தது ஆழ்ந்த நம்பிக்கை ஆகும். கானா என்னும் ஊரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அதே ஊருக்கு இன்னொருமுறை சென்றபோது அவரைத் தேடி வருகிறார் அரச அலுவலர் ஒருவர். அவருடைய மகன் சாகும் தறுவாயிலிருக்கிறார்.

 அம்மகனைக் குணமாக்க வேண்டும் என அவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். ''உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என இயேசு கூறிய சொல்லை நம்பி அரச அலுவலர் புறப்படுகிறார் (யோவா 4:49-50).

அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய மகன் பிழைத்துக்கொண்டான் என்னும் நல்ல செய்தி அவருடைய காதுகளை எட்டுகிறது. இந்த அதிசய செயலைக் கண்டு அந்த அரச அலுவலரும் அவருடைய வீட்டாரும் இயேசுவை ''நம்புகின்றனர்'' (யோவா 4:53). அதிசயமான இந்நிகழ்ச்சியை இயேசு தம் சொல்லால் நிகழ்த்தினார் என யோவான் விவரித்துள்ளார் (யோவா 4:50).

இயேசு கடவுளின் வல்லமையோடு செயல்படுகிறார் என்பதை அந்த அரச அலுவலர் முதலிலேயே மனதார ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத் தக்கது. தம் மகன் பிழைத்துக்கொண்டது இயேசுவின் வல்லமையாலேயே என உணர்ந்ததும் அந்த அரச அலுவலர் மீண்டும் ''இயேசுவை நம்பினார்'' (யோவா 4:53). எனவே ''நம்பிக்கை'' என்பது கடவுளின் செயலை நாம்
அடையாளம் காண நமக்குத் துணையாகிறது என்பதை நாம் அறிகிறோம்.


இயேசுவிடத்தில் நம்பிக்கை இல்லாத மனிதருக்கு அவர் புரிந்த செயல்கள் ஆழ்ந்த பொருளுள்ளவையாகத் தெரியாது. ஆனால் இயேசுவிடத்தில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்றும், அவர் இரக்கம் கொண்டால் அதிசயங்கள் நிகழும் என்றும் நாம் ''நம்பிக்கை'' கொண்டால் நம் வாழ்வில் புதுமை மலரும் என்பது உறுதி.

No comments:

Post a Comment