Sunday 13 March 2016

ஒளியாக மாறி உண்மை நிலையைக் காண்போம்!

''மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, 'உலகின் ஒளி நானே;
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்;
வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்றார்'' (யோவான் 8:12)


ஒளியும் இருளும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒளி என்பது கடவுளின் உடனிருப்பு என்றால் இருள் என்பது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் இயேசு வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதையும் ஏற்க மறுப்பதைக் குறிக்கும்.

 இயேசுவை எதிர்த்தவர்கள் ஒருவிதத்தில் இருளில் இருந்தார்கள். கடவுள் பற்றிய உண்மையை இயேசு வெளிப்படுத்தியதை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். எனவே அவர்கள் இயேசு உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதுபற்றி என்ன சான்று உள்ளது எனக் கேட்கிறார்கள்.

யூத வழக்கப்படி, ஒருவர் உண்மை பேசுகிறார் என்பதை நிலைநாட்ட இரு சாட்சிகள் தேவைப்பட்டனர். இங்கேயோ இயேசு அத்தகைய இரு சாட்சிகள் பற்றிப் பேசுகிறார். ''என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்'' (யோவா 8:18) என இயேசு கூறுகிறார்.

 ஆனால் இயேசுவின் எதிரிகள் இயேசுவுக்கும் அவரை அனுப்பிய தந்தையாம் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

இயேசு கடவுளைப் பற்றிய உண்மையை நமக்கு அறிவிக்கிறார் எனவும், கடவுளைக் காண வேண்டும் என்றால் நாம் இயேசுவில் அவரைக் காண வேண்டும் எனவும் நாம் நம்பாவிட்டால் நாமும் ''இருளில் நடப்போருக்கு'' ஒப்பாவோம்.

இயேசு காட்டுகின்ற ஒளியில் நடப்போர் பிறருக்கும் ஒளியாக மாறுவார்கள். ஏனென்றால் ''உலகின் ஒளி நானே'' (யோவா 8:12) என்று கூறிய இயேசு ''நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'' எனவும் தம் சீடர்களை நோக்கிக் கூறுகிறார் (காண்க: மத் 5:14).

இன்றைய உலகில் நாம் ஒளியாய் விளங்க வேண்டும் என்றால் இருள்நிறைந்த மனித உள்ளங்களில் இயேசுவின் ஒளியை நாம் பாய்ச்ச வேண்டும்; இருள்நிறைந்த உலகப் போக்குகளையும் மன நிலைகளையும் மாற்றியமைக்க நாம் செயல்பட வேண்டும்;

கடவுள் பற்றிய உண்மையைக் கண்டுகொள்ள மறுத்து, தீக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் போக்கு மறைந்திட நாம் உழைக்க வேண்டும். இருளில் நடப்போருக்கு ஒளி துணையாவதுபோல நாமும் கிறிஸ்து என்னும் ஒளியை நம்மில் கொண்டிருந்தால் பிறருக்கும் ஒளியாக மாறுவோம்.

No comments:

Post a Comment