Saturday 5 March 2016

மனமாற்றம்!

உண்மையான மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நாளைய  நற்செய்தியில் வரும், இளைய மகன் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறான்.

மனமாற்றம் என்பது, ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவம்.

இறந்து, மீண்டும் உயிர்த்த அனுபவம். வாழ்க்கை முடிந்து விட்டது, என்ற நம்பிக்கையிழந்த சூழலில், மீண்டும் ஒருமுறை வாழ்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு. தவறுகள் கொடுத்த பாடங்களை அனுபவமாக ஏற்று, சிறப்பாக வாழ வேண்டும் என துடிக்கும் ஒரு வேட்கை. அது தான் உண்மையான மனமாற்றம்.

தன்னை மகனாக ஏற்க வேண்டும் என்று, அவன் நினைக்கவில்லை. தன்னுடைய தந்தையின் பணியாட்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டாலே போதும், என்பதுதான் அவனின் எண்ணம். தன்னுடைய தகுதியின்மையை, இளைய மகன் உணர்கிறான்.

தந்தை அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவன் ஒருபோதும் எண்ணவில்லை. தான் செய்தது தவறு. அதற்கு விமோசனமே கிடையாது என்பதுதான், இளைய மகனின் மனநிலை. அந்த மனநிலையோடு தான் அவன் தந்தையிடம் திரும்பி வருகிறான்.

இன்றைக்கு மனமாற்றம் என்கிற பெயரில், மற்றவர்களின் மனதை மாற்ற, பல கேலிக்கூத்துக்கள் இந்த சமுதாயத்தில் அரங்கேறுகின்றன. தவறு செய்து விட்டேன் என்கிற உணர்வு அறவே இல்லாமல், மன்னிப்பு என்கிற மிக உயர்ந்த விழுமியத்தை, குறுக்கு வழியில் பெறத்துடிக்கும் கர்வம், ஆணவம் இன்றைக்கும் நம்மில் பலரிடம் உள்ளது.

 மன்னிப்பு என்கிற தியாக விழுமியத்தை, சூறையாடுவதற்கும், களங்கப்படுத்துவதற்கும், சிதைப்பதற்கும், தங்களுடைய சுயநலத்திற்காக நியாயப்படுத்துவதற்கும் பல மனிதர்கள், நல்லவர்கள் என்கிற போர்வையில், இந்த சமுதாயத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

மனமாற்றத்தின் அடிநாதம் உணரப்படவில்லையெனில், மனமாற்றத்திற்கான செயல்பாடுகள் அனைத்துமே அர்த்தமற்றதாகத்தான் இருக்கும். போலி மனமாற்றம் கடவுள் முன்னிலையில் நிச்சயம் அருவருக்கத்தக்கதாகவும், தண்டனைக்கு ஏற்புடையதாகவும் தான் இருக்கும்.

No comments:

Post a Comment