Friday 15 April 2016

நம் வார்த்தை வாழ வைக்கிறதா?

நாளைய  நற்செய்தி சற்று வித்தியாசமான ஒரு செய்தியை நமக்குத்தருகிறது. இதுவரை இயேசுவைச்சாராத மற்றவர்கள் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்வது கடினமென்றும், அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும் சொல்லி வந்தனர்.

 ஆனால், இன்றைய பகுதியில் இயேசுவோடு உடனிருந்த சீடர்களே, இயேசுவின் போதனையைக்கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்: இப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று சொல்லிக்கொள்கிறார்கள். இயேசுவின் போதனை சீடர்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது.

கிறிஸ்தவ மறையைப்பொறுத்தவரையில், இரண்டு கடினமான காரியங்களை நாம் பார்க்கலாம்.
1. நம்மை முழுவதும் இயேசுவிடம் சரணடையச் செய்ய வேண்டும்.

2. இயேசு சொல்கிற வார்த்தைகளை செயல்படுத்த வேண்டும். இதில் முதல் காரியம் அனைவரும் செய்கிற எளிதான ஒன்று. இயேசுவிடம் நம்மைச் சரணடையச்செய்வது அனைவரும் விருப்பத்தோடு செய்கிற செயல்பாடுகளுள் ஒன்று.

ஆனால், இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை வாழ்வாக்குவது எல்லோராலும் முடிகின்ற ஒன்று அல்ல. ஏனென்றால், அது ஒரு சவாலான வாழ்வு. நம்மையே ஒறுத்து வாழ்கிற வாழ்வு. உடலின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆள்கிற வாழ்வு.

 சுயத்தை விடுத்து பொதுநலனில் அக்கறை கொள்கிற வாழ்வு. ஆனால், அத்தகைய வாழ்வுதான் உன்னதமான வாழ்வு. இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற வாழ்வு.

அத்தகைய உன்னதமான வாழ்வை வாழத்தான் கிறிஸ்தவர்களாக நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அது கடினமான, சவாலான ஒன்றாக இருந்தாலும், முடியாத ஒன்றல்ல. ஆண்டவரின் துணைகொண்டு நம்மால் எதையும் செய்ய முடியும். எனவே, அப்படிப்பட்ட ஒரு சாட்சிய வாழ்வு வாழ, இறைத்துணையை நாம் நாடுவோம்.

No comments:

Post a Comment