Monday, 26 October 2015

ஜெபமாலையும் நானும் - 1(மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்)

நான் சிறுவயதில் இருக்கும் போதே கற்றுக்கொண்ட முதல் ஜெபம்   இயேசுநாதர் சுவாமி படிப்பித்த ஜெபமும்,அருள் நிறைந்த  மரியே ஜெபமும் தான். நான் ஜெபமாலையை ஒரு உன்னதமான பொக்கிஷமாக கருதினேன். அன்றும், இன்றும், என்றும்  அதே நிலை தான். 
உறங்கும் நேரத்தில் கூட ஜெபமாலை இல்லாமல் தூங்கியதே இல்லை.  அந்த ஜெபமாலையின் அருமை, பெருமையை  நம் தாயாம் திருச்சபை ஆனது அக்டோபர் மாதத்தை ஜெபமாலை சொல்லி அன்னையின் புண்ணியங்களை நம் வாழ்வில் கொண்டு வாழ்வை மாற்றிக்கொள்ள நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுகின்றது.
இதை  பின்பற்றி நாமும் இந்த மாதத்தில் ஜெபமாலை பண்ணியிருப்போம்.நான் பண்ணினேன் நீங்களும் பண்ணியிருப்பிர்கள் என்று நம்புகிறேன்.     

நாம் இப்போது அக்டோபர் மாதத்தின் கடைசியில் இருக்கிறோம். இந்த மாதம் முடிய இன்னும் ஐந்தே நாட்கள் உள்ளன. அன்னையிடம் நாம் கொண்டுள்ள பக்தி இந்த மாதத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து ஜெபமாலையை ஜெபித்து நமக்காக இயேசுவிடம் பரிந்துரைக்க அன்னையை வேண்டுவோம்.
இப்பொழுது நான் மகிழ்ச்சி நிறை உண்மைகளை பற்றி ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:
    1.   கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை                    தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
2.   கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
3.   இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
4.   இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
5.   காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
மேலே குறிப்பிட்டிருக்கும் மகிழ்ச்சி நிறை உண்மைகளை நம் வாழ்வில்  ஒப்பிட்டு தியானித்து  பார்த்தோம் என்றால் நமக்கு புலப்படுவது இதுதான். அதாவது ,  
1.தாழ்ச்சி
 2.பிறரன்பு 
3. எளிமை 
4.இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடத்தல் 
5. நாம் அவரை எந்நாளும் தேடுதல்.
 இவைகளைத்தான் நாம் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு விவிலியங்களும் நமக்கு உரைப்பது.  
விவிலியத்தில்  இறைவனால் அழைக்கப்பட்ட  ஒவ்வொருவரையும் பார்த்தோம் என்றால் மேற்ச்சொன்ன புண்ணியங்களின் அடிப்படையிலே வாழ  அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த புண்ணியங்களை கொண்டே அந்த புண்ணியவான்களும் வாழ்ந்தார்கள்.   அதில் ஒருவர் தான் நம் அன்னை மரியாள் தொடர்ந்து மரியாளை பார்த்தோம் என்றால் ”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியாள் கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் சிந்திக்கக்கூடியவை. 

ஆனால், அன்னை மரியா இறைவனுடைய திருவுளத்தை நிகழ்த்துவதற்கு தன்னையே அர்ப்பணிக்கிறாள். 
இங்கு அன்னை கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யாம் பெற்ற  சந்தோசத்தை  பகிரவும்  பிறரன்பு பணியை தொடரவும் புறப்படுகிறார் தென்றாலாக.
இந்த தென்றலின் பயணத்தில் நாம் காண்பது எளிமை. ஆகவே, எளிமையுடன் தன மகனை பெற்றெடுக்கிறாள்.   இதிலும் மகிழ்ச்சி.ஏனென்றால், உலக நாயகனை பெற்றதில். அன்னைக்கு ஒரு துளியும் கர்வம் இல்லை. இதெல்லாம்   இறைவனின் திருவுளத்துக்கு பணிந்து நடந்ததால் கிடைத்தது.   

இந்த உலகத்திலே, வாழ்க்கை நடைமுறையிலே மக்கள் ஒவ்வொருவரும் செபிக்கிறார்கள். அவர்களின் செபம் எப்படி இருக்கிறது என்றால், ”எனது சொற்படி நிகழட்டும்” என்ற வகையில் அமைந்திருக்கிறது. 

நமது செபிக்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கடவுளிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை எழுப்புகிறோம். நிச்சயம் இது மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்று. 
ஏனென்றால், ஒவ்வொரு விண்ணப்பங்களையும் ஆண்டவரிடத்தில் எழுப்புவது, நமது விசுவாசத்தின் வெளிப்பாடு. 

அந்த வகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதே வேளையில் கவலை தரும் செய்தி என்னவென்றால், நாம் கேட்டது போல கடவுள் நடக்க வேண்டும் என்று நினைப்பது. 
இது அவிசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதை அன்னை மரியாள் கற்றுத்தருகிறாள்.
அன்னையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். 
அவளது வார்த்தைகளும், வாழ்வும் நமது ஆன்மீக வாழ்வின் ஊற்று. அன்னையைப் பற்றிக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வில் நடைபயின்றால், உண்மையில் நம்மால் மிகச்சிறந்த ஆன்மீக வாழ்வு வாழ முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 

இதன் வழியாக எந்நாளும் நாம் இயேசுவையே தேடுவோம்.தேடல் தொடரும் போது நம் வாழ்வு அன்னையின் வாழ்வை போன்று அர்த்தமுள்ளதாக இருக்கும்.  அதை காண என் மனமும் துடிக்கின்றது .
இதில் வரும் மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்காது.

 எனவே  இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். 

அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.


இதைதான் இந்த மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் உணர்த்தும் உண்மை. 




1 comment: