அறிவாளி யார்? அறிவீனன் யார்? என்பதற்கு இயேசு நாளைய உவமை
வாயிலாக பதில் சொல்கிறார். மத்திய கிழக்குப் பகுதியில், வேலைக்காரர்களுக்கு அதிகமான
அதிகாரத்தை தலைவர் கொடுத்திருந்தார். ஒரு வேலைக்காரன் அடிமையாக இருக்கலாம். ஆனால்,
மற்ற வேலைக்காரர்களுக்கு, அவனைப் பொறுப்பாக தலைவர் நியமிக்கிறபோது, அவனுக்கு நிச்சயம்,
அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே,
அறிவாளி, மற்றவன் அறிவீனன் என்பது, இயேசு தரக்கூடிய செய்தி.
அறிவுள்ள, அறிவற்ற பணியாளர்களைப்பற்றி இயேசு இங்கே பேசுகிறார். மத்திய
கிழக்குப் பகுதிகளில் வீட்டுப்பொறுப்பாளர் எனக்கூறப்படுபவரும் அடிமைதான். அவருடைய பொறுப்பு
மற்ற அடிமைகளைப் பொறுப்பாக, அவரவர்க்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியைச்செய்யச்
சொல்வது. தலைவருடைய நம்பிக்கைக்கு உரியவர் என்றால், இன்னும் அதிகப்பொறுப்பை தலைவர்
அவருக்குக் கொடுப்பார்.
அறிவற்ற பணியாளரின் நெறியில்லாத இரண்டு தவறுகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
1. தனது பொறுப்பை தவறாகப்பயன்படுத்துவது. தலைவர் அவரைத் தனது வீட்டின் பொறுப்பாளராக
ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம், இந்த அடிமை தலைவருடைய மதிப்பைப் பெற்ற
அடிமை. எனவேதான், தலைவர் அவரை பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப்பொறுப்பாளரின்
வாழ்வை சற்று ஆழமாகச்சிந்தித்துப்பார்த்தால், அவர் தலைவரின் நன்மதிப்பைப்பெற நடித்திருக்கிறார்.
வீட்டுப்பொறுப்பாளராக மாற வேண்டும் என்பதற்காக, தலைவர் முன்னிலையில் தன்னை நல்லவராக
காட்டி வந்திருக்கிறார். ஆனால், நேர்மையற்றவர்களின் சாயம் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக
வெளுத்துவிடும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.
2. தலைவரின் எதிர்பார்ப்பை
நிறைவேற்றாத சோம்பல்தன்மை. தலைவர் இவ்வளவு பெரிய பொறுப்பைக்கொடுத்திருக்கிறார் என்றால்,
அவரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது, அந்த அடிமைக்கு நன்றாகத்தெரியும்.
இருந்தபோதிலும், அவர் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
கடவுள் நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு என்கிற மிகப்பெரிய கொடையைத்தந்திருக்கிறார்.
நாம் அனைவருமே இந்த வாழ்வை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்வாக வாழ வேண்டும். அப்போதுதான்,
நமக்கும், கடவுள் கொடுத்த இந்த வாழ்விற்கும் பெருமை. கொடையாகப் பெற்றுக்கொண்ட வாழ்வைக்
கொடையாக மற்றவர்களுக்குக் கொடுப்போம்.
கடவுள் தந்திருக்கிற வாழ்வை இதனோடு ஒப்பிடலாம். கடவுள் தான் நம்
தலைவர். நாம் தான், வேலைக்காரர்கள். இந்த உலகமே என் கையில்தான். நான் நினைத்ததைச் செய்வேன்,
என்று நினைப்பதும் தவறு. செய்த தவறை, கடவுளிடமிருந்து மறைத்துவிடலாம், என்று மறைக்க
நினைப்பது, தவறு மட்டுமல்ல. அறிவீனமும் கூட. கடவுள் கொடுத்த வாழ்வை, நேர்மையாக வாழ
முயற்சி எடுப்போம்.
புனித சூசையப்பரே, எங்களுக்காக உம் மகன் யேசுவிடம் வேண்டிக்கொள்ளும்!
No comments:
Post a Comment