''இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்''
(லூக்கா 6:12).
நாளைய நற்செய்தியில், இயேசு இறைவேண்டலில் பல
மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு
திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார்.
இதற்கான
காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில்
நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித
உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்
என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார்.
கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ
அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும்
அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே
தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார்.
நம் வாழ்க்கையில்
முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்போதும்
நாம் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட அழைக்கப்படுகிறோம்.
இவ்வாறு
கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் கடவுளோடு நெருங்கிய உறவுப்
பிணைப்பால் இணைந்திருக்க வேண்டும். இது இறைவேண்டல் வழியாக நிகழ்கிறது.
கடவுளின் உடனிருப்பு
நம்மோடு உள்ளது என்னும் உணர்வில் நாம் தோய்ந்திருப்பதுதான் இறைவேண்டலுக்கு அடிப்படை.
இது ஒருவித தியான மன நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும்.
கடவுளின் பிரசன்னத்தை ஒவ்வொரு
நொடியிலும் உணரும்போது அவருடைய பார்வையிலிருந்து நாம் அகன்றுபோதல் இயலாது. அவரோடு இணைந்து
நாம் செயல்படுவோம். நம்மில் இறைவேண்டலும் பணிவாழ்வும் பிணைந்திருக்கும்.
உங்கள் அனைவருக்கும் அப்போஸ்தலர்களான புனித சீமோன், யூதா பெருவிழா வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment