Thursday, 22 October 2015

காலத்தைக் கணித்து வாழுங்கள்

''இயேசு, 'மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. 
தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது' என்றார்'' (லூக்கா 12:54-55).

நாளைய நற்செய்தியில் இயேசு கூறுவது "காலம் பொன் போன்றது"! அதை தொடர்ந்து பார்த்தோம் என்றால் பாலஸ்தீனியர்கள் காலநிலையைக் கணிப்பதில் சிறந்தவர்களாக விளங்கினர். மேற்கிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் மேகம் சூழந்தால் மழை வரும் எனவும், தெற்கிலிருந்து பாலைவனக்காற்று அடிக்கும்போது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்பதைக்கணித்துச் சொன்னார்கள். அது அப்படியே நடக்கும். பருவநிலையைக்கணிப்பதில் வல்லவர்களாக இருந்த அவர்களால், நேரத்தைக்கணிக்க முடியவில்லை. அப்படி கணித்திருந்தால், இறையாட்சி அவர்கள் நடுவில் மலர்ந்திருப்பதை அறிந்திருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

இயேசு இறுதித்தீர்ப்பை ஓர் உவமை வாயிலாக அவர்களுக்கு விளக்கி, ஓர் எச்சரிக்கை உணர்வையும் அவர்களுக்குத்தருகிறார். எதிரியோடு வழக்கைத்தீர்த்துக் கொள்ள ஆட்சியாளரிடம் போகும்போது, வழக்கு பலவீனமாக இருந்தால், ஆட்சியாளரிடம் செல்வதற்கு முன்னதாகவே, வழக்கைத்தீா்த்தக்கொள்வது சிறந்தது, உகந்தது. இல்லையென்றால், கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதேபோல், கடவுள் முன்னால் நம்முடைய வாழ்வு என்னும் வழக்கு பலவீனமாகவே இருக்கிறது. அதனால் இருக்கும் நேரத்தை ஒழுங்காகப்பயன்படுத்தி, வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்வதில் கவனமாக இருக்குமாறு இயேசு அறிவுறுத்துகிறார்.

காலத்தை முறையாகப்பயன்படுத்த வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை. காலத்தின் அருமை அறியாது, மனம்போன போக்கில் வாழ்ந்தால், அதற்காக நாம் ஒருகட்டத்திலே வருந்த வேண்டிவரும். அந்த நேரத்தில் நாம் வருந்தினாலும் அதனால் நமக்கொன்றும் பயனில்லை. எப்படியும், அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே, காலம் காட்டும் அறிகுறிகளை வைத்து, நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் துன்பங்கள் இவையே மிகச் சிறந்த அடையாளங்கள். அறம் வழுவாத நீதிபதிகள்.போதுமான, பொருத்தமான தண்டனைகள். சரியான சிறைகள், காவலர்கள். அவ்வாரே நல் வாழ்வின் பரிசும் பாதுகாப்பும் நாம் அனுபவிக்கும் இன்பங்களே.

எல்லாவற்றையும் ஊடுறுப் பார்க்கும் நாம், இதுபோன்ற அடையாளங்களை அடையாளம் காண விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடையாளங்களை அனுசரித்து வாழ்க்கைப் பயணத்தில் இறங்கினால் பலவற்றை இழக்க நேரிடும். கஷ்டப்பட வேண்டும். நாளும் நேரமும் பொருளும் செலவிட வேண்டும். அதை விட அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் குருக்கு வழியில் சென்றால், வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று எண்ணலாம். ஆனால் ஆபத்தும் விபத்தும் நிறைந்தது என்பதும் அறிவோம்.

நமக்குச் சாதகமானவைகளுக்கு அடையாளங்களையும் தோற்றங்களையும் கணித்து வாழ்க்கையை அமைக்கும் நாம்,அதையே பொது வாழ்வுக்கும் அருள் வாழ்வுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பதே இயேசுவின் கேள்வி.இக்கேள்விக்குப் பதிலாக நாம் வாழ்ந்தால் நாம் புத்திசாலி.
வாழ்வோமா ? 
இயேசுவின் தூய இருதயம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கட்டும்!


4 comments: