நாளைய நற்செய்தியில்இயேசுவை அமைதியின் அரசர் என்றும் சமாதானத் தூதுவர்
என்றும் நாம் போற்றுகிறோம். அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர்கள் ஒருங்கிணைந்து, ''உலகில்
கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' எனப் பாடி வாழ்த்தினார்கள் (காண்க: லூக்
2:14). இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னால் தம் சீடரை நோக்கி, ''அமைதியை உங்களுக்கு
விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்'' என வாக்களித்தார் (காண்க:
யோவா 14:27). மேலும், தாம் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பிறகு இயேசு தம் சீடர்களை
நோக்கி, ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார் (காண்க: லூக் 24:36). இவ்வாறு
அமைதியைப் போற்றிய இயேசுவா ''பிளவு உண்டாக்க வந்தேன்'' எனக் கூறுவார் என நாம் கேள்வி
எழுப்பினால் அது தவறு எனக் கூற முடியாது.
ஆக, இயேசு கொணர்ந்த அமைதி யாது? அவர் கொணர்ந்த பிளவு யாது ?என்னும்
கேள்வி எழுகிறது. இயேசு தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களித்தார் என்பதில் ஐயமில்லை.
அந்த அமைதி கடவுளுக்கும் நமக்கும் இடையே உருவாகின்ற நல்லுறவையும் பிறரோடு நாம் கொள்கின்ற
நல்லுறவையும் குறிப்பதாகும். பாவத்தை முறியடித்து நம்மைக் கடவுளோடும் எல்லா மனிதரோடும்
ஒப்புரவாக்குகின்ற பணியை இயேசு தம் சிலுவைச் சாவு வழியாக நிறைவேற்றினார். எனவே அவர்
உலகுக்கு அமைதி கொணர்ந்தார் எனலாம்.
-- ஆனால் அதே இயேசு நாம் வாழும் உலகில் ''பிளவையும் உண்டாக்குகிறார்''
(லூக் 12:51). இயேசு கொணர்கின்ற பிளவு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்தின்போதே அறிவிக்கப்பட்டது.
குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிப்பதற்காக மரியாவும் யோசேப்பும் செல்கிறார்கள்.
அங்கே சிமியோன் என்னும் இறைவாக்கினர் இயேசு மக்களிடையே பிளவு கொணர்வார் என முன்னறிவிக்கிறார்:
''இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக
இருக்கும்...'' (லூக் 2:34). ஒருசிலர் இயேசுவை ஏற்பர், வேறு சிலர் அவரை எதிர்ப்பர்.
இவ்வாறு மனிதரிடையே பிளவு உண்டாகும். இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் குடும்ப உணர்வு மிக
ஆழமாக வேரூன்றியிருந்தது. துன்ப துயரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் மக்கள் ஒருவரையொருவர்
விட்டுப் பிரியாமல் நெருங்கிய குடும்ப உணர்வோடு வாழ்ந்தார்கள். அவ்வாறு ஒற்றுமையாக
வாழ்ந்த குடும்பங்களிலும் இயேசுவின் பொருட்டு பிளவு எற்பட்டது.
ஏனென்றால் அக்குடும்பங்களில் சிலர் இயேசுவை ஏற்றார்கள், பிறர் அவரை எதிர்த்தார்கள்.
இவ்வாறு இயேசுவின் வருகையால் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது தொடக்க காலத் திருச்சபையில்
தெளிவாகத் தெரிந்தது. அதையே லூக்கா பதிவுசெய்துள்ளார். இன்றைய உலகிலும் இயேசுவை ஏற்போரும்
அவரை எதிர்ப்போரும் உள்ளனர். இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போரும் அவருடைய போதனைகளைப்
புறக்கணிப்போரும் உள்ளனர். ஏன், இயேசுவின் சீடர்களாகத் தம்மை அடையாளம் காட்டுவோர் கூட
சிலவேளைகளில் அவருடைய போதனையை மறந்து விடுகிறார்கள்.
ஆக, இயேசு ''முரண்பாட்டு அறிகுறியாக'' இன்றும் உள்ளார் என்பதில் ஐயமில்லை.
இயேசு கொணர்கின்ற அமைதி ஒருவிதமான மயான அமைதி அல்ல. கடவுளையும் மனிதரையும் ஒருங்கிணைக்கின்ற
இயேசுவை நாம் ஏற்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் வாழ்விலும் நாம்
வாழ்கின்ற உலக சமுதாயத்திலும் உண்மையான அமைதி நிலவும் என்பதே உண்மை.
''இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்''
(லூக்கா 12:51).
இறைவா, உம் அன்புத் தீ எங்கள் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காக எரிந்திட
அருள்தாரும்.
it is really a good reflection on gospel.
ReplyDeleteDear Kalai Well done. written well
ReplyDeleteDear Akka,Thanks
Deletedear kalai wish you all the best
Deletedear kalai wish you all the best
Delete