Friday, 30 October 2015

முதலிடம்!



''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11).


 இயேசு எப்போதுமே வெறும் போதனையோடு நின்றுவிடுவதில்லை.   போதிப்பதை வாழ்ந்து காட்டக்கூடியவர். நாளைய  நற்செய்தியிலும், அப்படிப்பட்ட தான் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கக்கூடிய போதனையை, அவர் மக்களுக்கு அறிவிக்கிறார். 

அதுதான் தாழ்ச்சி. தாழ்ச்சியைப்பற்றி இயேசுவைத்தவிர சிறப்பாக எவரும் போதித்துவிட முடியாது. அந்த அளவுக்கு, தாழ்ச்சியே உருவானவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நாம் ஒவ்வொருவருமே இந்த தாழ்ச்சி என்னும் அணிகலனை அணிய வேண்டும் என்பது தான், இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

நாம் எப்படி தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ முடியும்? எப்போது தாழ்ச்சி நம்முள் மேலோங்கியிருக்கும் என்று பார்ப்போம். தாழ்ச்சி என்னும் அணிகலனை நாம் அடைய, நமது எண்ணத்தை சீர்படுத்த வேண்டும். அதனை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் எவ்வளவுக்கு சாதித்திருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. 

நான் சாதித்தது ஒரு துளி தான், என்று, நமது எண்ணத்திற்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நமது எண்ணத்தை நாம் பொருட்டாக நினைக்காது, அதனை அதன் போக்கில் விட்டுவிட்டால், அது தனக்குள்ளாக கர்வம் என்னும் கோட்டையைக் கட்டிவிடும். 

அந்த கர்வம் இல்லாமல், எப்போதும், நமது எண்ணத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது, நாம் தாழ்ச்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்போம். நமது வாழ்வும் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்கும்.

இன்றைக்கு, ஒரு சிறிய வெற்றி ஒருவருக்கு கிடைத்தாலே, இந்த உலகமே தன்னால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது போல, ஒரு சிலருக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அந்த எண்ணத்தை அகற்றிவிட்டு, இந்த உலகத்தில், இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில், நாம் ஒரு சிறிய துகள் என்கிற அந்த மனப்பான்மையை பெறுவோம்.

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.

விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். 

நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம்.

ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார்.

ஒரு மனிதனுடைய குணத்தை, பண்பாட்டை உணவு உண்ணும் இடத்தில் கண்டுகொள்ளலாம் என்பர். இங்கு மனிதன் இயல்பாக செயல்படுவதால் அவனுள் இருக்கும் உண்மை இயல்பை அறிந்து கொள்ளலாம்.

 அதிலும் விருந்துகள் வெறுமனே உணவுப் பறிமாற்றம் மட்டும் அல்ல. அதனுள் பல மனித நேய உண்மைகள், இறை உணர்வுகளும் அடங்கியிருக்கின்றன. இவை மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதையே இயேசு இங்கே உணர்த்துகிறார்.

விருந்தில் முதலிடத்தைத் தேடும்போது தன்னைப்பற்றியும் நினைக்கவில்லை, அடுத்திருப்பவனைப்பற்றியும் எண்ணமில்லை. மனித நேயமும் இல்லை, இறை உணர்வும் இல்லை. உணவை மட்டுமே எண்ணமாக இருப்பது மனித நிலை தாழ்ந்த ஒரு பிறவி.

ஒவ்வொரு விருந்தும் மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பு. தெய்வீகத்தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு. எனவேதான் நற்கருணை அருட்சாதனத்தை விருந்துச் சூழலில் ஏற்படுத்துகிறார். 

எந்த வீட்டிற்கு விருந்துக்குச் சென்றாலும் அங்கு வந்திருக்கும் நோயுற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் குணமாக்குகிறார். முதலில் அவர்களின் மனச்சுமையை இறக்கி வைக்கிறார். பாதங்களைக் கழுவுகிறார்.

இயேசுவின் போதனையை கருத்தூன்றிக் கேட்டு அவர் செயல்பட்டதுபோல நாமும் வாழ்ந்தால் முதலிடம் நம்மைத் தேடி வரும்.

நாளையுடன் (31.10.2015) இந்த மாதம் முடிகிறது.ஜெபமாலை அன்னையின் அருள் நம்முள் என்றும் தங்கட்டும்.அன்னைக்கு கரம் கூப்பி மலர் தூவி நன்றிகள்.மரியே வாழ்க ! 


5 comments: