Thursday 1 September 2016

உண்மையான நோன்பு எது?

ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார்.

நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார். ”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால்/ நோன்பால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.

அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார்.

 நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார். துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அக மகிழ்கிறேன்.”என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி, “துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார்.  “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார். அதற்கு அவர் “துறவியாரே, நான் ஒரு வணிகன் தான்.

அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை; என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” எனக் கூறினார்.

“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன. ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாகி நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உண்மையான தவம்/நோன்பு ஒருவரிடத்தில் அன்பையும், பிறர்மீது  கரிசனையையும் வளர்க்கவேண்டுமே ஒழிய ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை” என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருப்பதில்லை, மாறாக அவர் அவர்களைவிட்டுப் பிரியும் காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்” என்கிறார். அதாவது நோன்பிருக்க ஒரு காலமுண்டு அதை அந்தந்த நேரத்தில் செய்தால்போதும் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

இங்கே நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவர் நோன்பிருப்பதும், இருக்காததும் அவரவர் விருப்பம். அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. திருமுழுக்கு யோவானின் சீடர்கள் நோன்பிருந்தார்கள் என்றால், அவர்கள் அவர்களுடைய விருப்பப்படி செய்திருக்கலாம்.

அதற்காக இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. பல நேரங்களில் நாமும் பிறர்மீது நம்முடைய கருத்துகளை, எண்ணங்களை திணிக்கிறோம். இது ஒருவிதத்தில் வன்முறைதான்.

ஆகவே, நோன்பிருப்பது  இருக்காதது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என உணர்ந்துகொள்வோம். மேலும் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம்மில் பிறர்மீதான அக்கறையை வளர்க்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

No comments:

Post a Comment