Friday 2 September 2016

அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது!

ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.

ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, என் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், “கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், “இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான்  நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்” என்றார்.

உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.

பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நாளைய  நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், “உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்” என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.

பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே” என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.

பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.

சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.

எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.

அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். “அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன” என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.

ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment