Sunday, 10 January 2016

புறப்படுவோம் இலக்கை நோக்கி!

அழைப்பு என்பது கடவுளின் கொடை தான். அந்த கொடையை கடவுள் நமது நிலையைப் பார்த்து வழங்குவதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். எனவே, அது ஒரு கொடையாக கருதப்பட்டாலும், கடவுளின் அளப்பரிய அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தாலும், நமது தகுதியின்மையில் இருக்கக்கூடிய தகுதியும், இதில் சிறந்த பங்கு வகிக்கிறது.

கடவுள் முன்னிலையில் நாம் தகுதி என்றே சொல்ல முடியாது. எனவே, நமது தகுதியின்மையில் ஏதாவது தகுதி இருக்கிறதா? என்பதைப் பார்த்து, அதற்கேற்பவும் நிச்சயம் அந்த தகுதி வழங்கப்படுகிறது.

இயேசு தனது பணிவாழ்வை தொடங்குகிறார். எந்த ஒரு பயணத்தைத் தொடங்குகிறபோதும், ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டும். இயேசுவின் பணி அவரோடும், அவரது வாழ்வோடும் முடிந்துவிடக்கூடிய பணி அல்ல என்பது அவருக்கு நன்றாகத்தெரியும்.

எனவே, தனது பணியை ஆரம்பிப்பது ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்கு தொடக்கமாக, கடலில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை அழைக்கிறார். நாம் நினைக்கலாம்? மீனவர்கள், படிக்காதவர்கள், சாதாரணமானவர்கள் எப்படி, இறையாட்சியைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க முடியும்? அது எப்படி சாத்தியமாகும்?

இங்கு தான் கடவுளின் அருட்கொடை வெளிப்படுகிறது. நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அந்த தகுதியைக் கொடுக்கிறவர் கடவுளாக இருக்கிறார். நல்ல மனது இருந்தால் போதும். அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நாம் பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அதனுடைய பொருள் இதுதான். நமது மனது நன்றாக இருந்தாலே, நிச்சயம், கடவுளின் அருள் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.

பலவேளைகளில் கடவுளின் பணியைச் செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களா? கடவுளின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியுமா? என்ற சந்தேகங்கள், உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு எழலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கடவுளின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டாலும், அந்த வல்லமைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சீடர்கள் என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பவர் ஆழுமை நிறைந்தவர். அழைப்பு மறுக்கமுடியாதது. அழைக்கப்படுபவர் அந்தஸ்து அவசியமில்லை. அழைக்கப்படுபவர் முற்றிலும் புதிய, உயரிய ஒரு பணிக்காக அழைக்கப்படுகிறார்.

அழைப்பின் இலக்கு அழைக்கப்படுவோர் அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களைப் பிடிப்பது. மனிதனை முழு மனிதவாழ்வுக்கு அழைத்துச் செல்வது. அழைக்கப்படுவோர் யாராகவும் இருக்கலாம், என் நிலையிலும் இருக்கலாம்.

முதியவராக இருக்கலாம் இளைஞனாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். யோவான்போல கூலியாட்கள்வைத்து வேலை செய்யும் உயர்நிலையிலும் இருக்கலாம்.ஆயராக இருக்கலாம். அடித்தள விசுவாசியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் பணியின் இலக்கு ஒன்றே.

எனவே, நீங்களும் இயேசுவின் உன்னத மனிதர்களைப் பிடித்து முழு மனிதனாக்கும் உயர் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் நிலையும் இயேசுவின் தனிப்பட்ட அழைப்பு.

இந்த அழைப்பை நீங்கள் தவிர்க்க முடியாது. அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டியது உங்கள் கடமை. அதை சிறப்புடன் செய்யும்போது இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.

இப்பொழுதே புறப்படுவோம் நமது இலக்கை நோக்கி!!!

Saturday, 9 January 2016

திருச்சபையில் நல்ல மகனாக,மகளாக வாழ்வோம்!

நாளை ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார்.

அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:

1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?

2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?

3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா?

"மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், "கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம்.

நாளைய  நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம்.

தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.

Friday, 8 January 2016

உண்மைத்தொண்டன்!

''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவான் 3:28)

 திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர் என்பது நற்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. சில மாத இடைவெளியில்தான் இருவரும் பிறந்தனர். இயேசுவின் தாய் மரியாவும் யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்.

இவ்வாறு நெருங்கிய உறவுகொண்டிருந்த யோவானும் இயேசுவும் திருமுழுக்குக் கொடுத்தனர் என்னும் செய்தியை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: யோவா 3:22-30). இருவரும் இறைவாக்கினர் போல மக்களுக்குத் தோற்றமளித்தனர். இருவரும் கடவுளின் ஆட்சி பற்றியும் மக்கள் மனமாற்றம் பெறவேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தனர்.

எனவே மக்களிடையே ஒரே குழப்பம். இயேசு பெரியவரா யோவான் பெரியவரா என்னும் கேள்வி எழுந்தது. இக்கேள்விக்குத் திருமுழுக்கு யோவானும் இயேசுவும் அளித்த பதில்கள் நற்செய்தி நூல்களில் பதிவாகியுள்ளன.

யோவான் தம்மைப் பற்றிக் கூறும்போது, ''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவா 3:28) என உரைக்கிறார். தம்மைவிடவும் இயேசு பெரியவர் என்றும், இயேசுவே உலக மீட்பராக வருகிறார் என்றும் யோவான் அறிக்கையிடுகிறார்.

 யோவான் தம்மை ஒரு ''முன்னோடி'' என அறிமுகப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற நாமும் கிறிஸ்துவுக்கு முன்னோடிகளாகத் திகழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வருகிறார் என்றும் கிறிஸ்து நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் மக்களுக்கு அறிவித்துச் சான்று பகர்கின்ற பணி நமக்குத் தரப்பட்டுள்ளது.

யோவானைப் போல நாமும் இயேசு யார் என மக்களுக்குச் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம். இயேசுவே மெசியா என நாம் நாவினால் மட்டும் அறிக்கையிடுவதோடு நின்றுவிடாமல் நம் சொல் செயல் வழியாகவும் சிந்தனைப் பாணிகள் வழியாகவும் இயேசுவிடம் மக்களை இட்டுச் செல்ல வேண்டும். யோவான் நமக்கு முன் உதாரணமாக உள்ளார்.

நாம் வாழும்; இக்காலத்தில் இந்த திருமுழுக்கு யோவான்போல தாழ்ச்சியும் தயாகமும் உள்ள மனிதர்களைப் பார்ப்பது அறிதாக உள்ளது. ஒண்ட இடம் கொடுத்தால் வீட்டையும் ஊரையும் அபகரித்துக்கொள்ளும் அவல நிலையைக் காண்கிறோம்.

வேலை வசதி இல்லாத மனிதன் என்று இரக்கப்பட்டு நம் தொழிலில் ஒரு வாய்ப்புக் கொடுத்தால், சில நாட்களில் அவனே நமக்கு எதிராக அதே தொழிலில் ஈடுபட்டு போட்டியும் பொறாமையும் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். வளர்ச்சியையும் முன்னேற்றத்;தையும் இங்கு குறை சொல்லவில்லை.

திருமுழுக்கு யோவானிடமிருந்த நற்பண்பு இருந்தால் நம் வாழ்வில் குறை இருக்காது. எப்பொழுதும் முன்னேற்றம் இருக்கும். உண்மையான தொண்டனாக, உடன் உழைப்பாளியாக, நன்றி மறவா ஊழியனாக திருமுழுக்கு யோவான் திகழுகிறார்.

 தன் எஐமானின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறார். "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்"(யோவா 3:30) என்ற திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நிறைந்த இவ் வார்த்தைகள் அவரது தொண்டு மனப்பான்மையை அருமையாக விவரிக்கின்றன.

"நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்ற அவரின் ஏற்புடைமை உண்மைத் தொண்டனின் தியாகத்திற்குச் சான்று.

அரசியலிலும் அன்றாட வாழ்விலும் குழப்பம் உண்டாக்கி, புரட்சிசெய்து ஆட்சியை, சொத்துக்களை அபகரிக்கும் இன்றைய உலகுக்குத் திருமுழுக்கு யோவான் ஓரு மேல்வரிச்சட்டம், ஒரு பாடம். அவரிடம் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தேடிவரும்.

நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று  உண்மைத் தொண்டனாக வாழ்ந்து இயேசுவுக்ககாக  உயிர் துறப்போம்.

Thursday, 7 January 2016

அள்ளி அணைத்தல்!

நாளைய  நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார்.

 இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக  இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார்.

நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை.

நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நமது வாழ்விலும் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள  அழைக்கப்படுகிறோம்.

இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. உலகத்தோடு மனித மனங்களும் சுருங்கிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அடுத்த அறையில் கொலையே நடந்தாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும், என்கிற மோசமான மனநிலை இன்றைய சமுதாயத்தில் மலிந்துபோய்விட்டது. அந்த மனநிலை மாற்றம் பெற வேண்டும். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளின் என்கிற பரந்த உணர்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


காலில் விழுவது பெரிய சாதனையோ  சாமார்த்தியமோ அல்ல. விழுந்துகிடப்பவனை அள்ளி அணைத்து ஆளாக்கிவிடுவதுதான் சாதனையும் சாமார்த்தியமும் .அந்த தொழுநோயாளி காலில் விழுந்தான். அவன் நோயாளி. விழுவது அவன் இயல்பு. இன்று காலில் விழுவதும், விழுந்தவனை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கௌரவமாக மேடைகளில் அரங்கேறுகின்றன.

நீ அவர் காலில் விழ காத்திருப்பவர் அல்ல உன் தெய்வம். யாருடைய காலில் விழவும், கை நீட்டி காத்திருக்கும் நிலையைக் காணவும் கணமும் விரும்பாதவர். உடனே தன் கையை நீட்டி, தாங்கி, நல் வாழ்வுக்கு வழிநடத்துவார்.

அவரைக் காணும் முயற்சியல் உடனே இறங்குவோம். நம் கஷ்டங்கள் தலைக்குமேல் போகும்வரை காத்திருக்க வேண்டாம். உடல் முழுவதும் தொழுநோய் பரவிய பின் இயேசுவின் காலில் விழ காத்திருக்க வேண்டாம். என்றும் எப்பொழுதும் இயேசுவைக் காண்போம். அன்றே அப்பொழுதே அவர் நம்மைக் குணமாக்குவார்.

Wednesday, 6 January 2016

குழந்தைகள் வளர்ப்பு!

“இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார்” என்று குறிப்பிடும் நற்செய்தியாளர், முத்தாய்ப்பாகத் தரும் செய்திதான் “எல்லாரும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்”.

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும் ” என்று பாடினான் ஒரு திரையிசைக் கவிஞன். இயேசுவுக்கு அந்தப் பேரும், புகழும் கிடைத்தன. என்ன காரணத்தால்?

அதற்கான காரணத்தை நற்செய்தியாளர் நாளை முதல் வாக்கியத்திலேயே சொல்லிவிடுகிறார். “இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்”. ஆம், இதுதான் அந்தப் பெருமைக்குக் காரணம். இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் இருந்தார்.

அவரது சொற்களில் ஆற்றலும், வலிமையும் இருந்தன. தூய ஆவியால் நிரம்பியவராய் இருந்ததால், அவரது செயல்பாடுகள் வரங்களும், கொடைகளும், கனிகளும் நிறைந்தனவாக இருந்தன. எனவேதான், வியத்தகு செயல்களை அவர் செய்தார்.

மக்கள் எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். நமது வாழ்விலும் தூய ஆவியானவரை நிறைவாகச் செயல்பட அழைப்போம், அனுமதிப்போம். அப்போது நாமும் பெருமைமிகு செயல்களைச் செய்யலாம்.

மேலும்,  பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;.

கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர்.

இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர்.

இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள்  உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும்.

Tuesday, 5 January 2016

வாய்க்கால்!

வாய்க்கால் என்பது எத்துனை நன்மை பயக்க கூடியது என்று நாம் அறிவோம்.கிராமங்களில் வாய்க்கால் என்றும் நகரங்களில் ட்ரைனேஜ் என்றும் சொல்வார்கள்.

ஆனால், இந்த வாய்க்காலும்,ட்ரைநேஜும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்த்தோம் என்றால் ஒரு உண்மை விளங்கும்.என்னவென்றால், வயல்கள் மத்தியில் வாய்க்கால் தண்ணீர்,மணல்,மீன்கள் போன்றவைகளை சுமந்து செல்லும்.வாய்கால் வற்றினால் மீன்கள் இறந்து விடும், பயிர் வளராது ,விவசாயிகள் வாடுவார்கள்.

இதேபோல் ட்ரைனேஜ் அழுக்குத் தண்ணீர்,குப்பைகளை சுமந்து செல்கிறது.ஒருநாள் இவைகள் ஓடாமல் நின்றால் யாரும் வீட்டில் இருக்க முடியாது.ஏனென்றால் நாற்றம் எடுக்கும்.

ஆக,வாய்க்காலும், ட்ரைநேஜும் நாம் வாழும் இடங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

இதை நாம் நாளைய நற்செய்தியில் வைத்து சிந்தித்தோம் என்றால் உண்மை புரியும்.அதாவது, ஜெபத்தின் மூலம் வாய்க்காலனது கடவுள் அருளை சுமந்து நம்மிடம் வருகிற ஒன்றாக இருப்பதை நாம் அறிவோம்.ஜெபம் என்பது நம் வாழ்வில் குறைந்தால் ,வாய்க்கால் வற்றும்.நாமும் சோர்ந்து போய்விடுவோம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நாளைய  நற்செய்தி நூல்களில் காணலாம்.

இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம்.

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது.

 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார்.

எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை.

 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார்.

அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால் அசாத்தியமாக செய்ய முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவருடைய செபம்.

எத்தகைய இடர்பாடுகளையும், இன்னல்களையும் எதிர்த்து நிற்பதற்கு அவருக்கு துணையாக இருந்தது செபம்.

 3. இறைவனின் அருளைப் பெற உதவும் வாய்க்காலாக இருந்தது. எப்போதெல்லாம் இயேசு நோயாளர்களுக்கு சுகம் தந்தாரோ, அப்போதெல்லாம், அவர் தந்தையிடம் செபித்தார்.

அவரின் அருளைப் பெற்றுக்கொள்ள செபத்தை வல்லமைமிகுந்த ஆயுதமாகப் பயன்படுத்தினார். இறை அருளைப் பெற்றுக்கொண்டார்.

நமது கிறிஸ்தவ வாழ்வில் செபம் முக்கியத்துவம் மிகுந்தததாக இருக்க வேண்டும். கடவுளோடு நாம் நெருங்கியிருப்பதற்கும், வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும், இறைவனின் சிறப்பான அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இருக்கக்கூடிய செபத்தின் மீது நாம் பற்றுள்ளவர்களாக இருப்போம்.

அவ்வாறு செபத்தில் நிலைத்து வாழ்ந்தால் நாமும் வற்றாத வாயகால்களே! 
ஆக,கடவுளின் அருளை சுமந்து செல்லும் வாய்க்கால்களாக மாறுவோம்.மாற்றம் மட்டுமே நிரந்தரம்!

Monday, 4 January 2016

முன்னுதாரணம்!

"அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்".(மாற் 6'42-43).

"நீங்களே உணவு கொடுங்கள்" என்று  இயேசு தம் சீடர்களை நோக்கிச் சொன்ன இந்த வார்த்தைகளை நாளை   சிந்திப்போம். “நீங்களே உணவு கொடுங்கள் ” என்று அவர்களிடம் சொன்னதன் மூலம் உணவு கொடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார் இயேசு.


பாலைநிலத்தில் இறை வார்த்தைக்காக ஆவலோடு காத்திருந்த மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், அதற்கான பொறுப்பையும் தம் சீடர்களே ஏற்கவேண்டும் என்னும் இயேசுவின் சிந்தனை பாராட்டுக்குரியது.

இன்று உலகம் முழுவதும் உணவின்றி வாடும் மக்கள் தொகை ஏராளம். நமது நாட்டிலேகூட வறுமைக் கோட்டிற்குக் கீழ் மூன்று வேளை உணவின்றி வாடும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் உள்ளனர். அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சாரும் என்று நாம் சும்மா இருக்க முடியாது.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளையை ஏற்று, நாம் உணவுப் பகிர்வை நிகழ்த்த முன்வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒருவேளை உணவைத் துறக்க அனைவரும் முன்வந்தால், ஏராளமானவர்களுக்கு உணவு கிடைக்கும்.

உலகம் முழுவதும் சாப்பிடுகின்ற இறைச்சியின் அளவைக் குறைத்தால், சுற்றுச்சூழல் முன்னேறும். உணவுப் பகிர்வும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நமது உணவைக் குறைப்பதன் மூலமும், உணவுப் பகிர்வின் மூலமும், ”நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ” என்னும் ஆண்டவர் இயேசுவின் கட்டளையை நாம் நிறைவேற்றலாம்.


பல சாதனைகளைப் படைப்பதற்கும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நம்மையும் நம்மைச் சுற்றிலும் உள்ள அறிவை விட நமக்குள் இருப்பவர்பற்றியும் அவரது ஆற்றல்பற்றியும் உள்ள அறிவும் நம்பிக்கையும் மிக அவசியம்.

சீடர்கள் முதல் பகுதியை அறிந்திருந்தனர். அதாவது, கூட்டம் மிகப் பெரிது, நேரம் நெடு நேரமாகிவிட்டது. அநேகமாக பொழுது சாயும் நேரம். இடமும் பாலைநிலம். சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று உணவு வாங்கி வருவதும் இப்போதைக்கு முடியாத காரியம்.

அப்படியே வாங்குவதாக இருந்தாலும் 200 தெனாரியம் ஆகும். தற்சமயம் கைவசம் ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. இந்த விவரங்களும் தெளிவும் இருந்தன.

ஆனால் இரண்டாம் பகுதியை அறியவில்லை. இயேசுவைப்பற்றிய விவரங்களும் தெளிவும் இன்னும் பெறவில்லை. அவர் கையாளும் வழி முறைகளை தெறிந்திருக்கவில்லை. இயேசு கையாண்ட வழி முறையைக் காண்போம். முதலில் கும்பலை குழுவாக்குகிறார். ஐம்பது நூறாக அமரச் செய்கிறார்.

 அமைதியாக அமர்ந்து நிதானமாக சிந்திக்கத் தூண்டுகிறார். அதன் பின், வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றியதன் மூலம், மக்களுள் புதைந்திருக்கும் கடவுள் உணர்வை தூண்டி துலக்குகிறார்.


சுயநலம் தவிர்த்து பிறர்நலம் பாராட்டும் பெரிய மனதை தட்டி எழுப்புகிறார். இறுதியாக, உங்களிடம் இருப்பதை முதலில் பரிமாருங்கள் என்று முன்னுதாரணம் காட்டுகிறார்.அவ்வளவுதான். இதை நாமும்  நம் வாழ்வில் முயற்சி செய்வோம்.

Sunday, 3 January 2016

உள்ளார்ந்த மாற்றம்!

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'
எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17).


நாளை இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார்.

அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார்.


அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

 மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும்.


சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி.

எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.


ஹென்றி நூவென் எனும் ஆன்மீக  எழுத்தாளர் சொல்வார்,"நானும் எனக்குள் இருக்கும் கடவுளும் இணைந்து பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்று எண்ண ஆரம்பியுங்கள்.எதுவுமே நம்மை வேதனைப்படுத்தாது.கடவுளை உணரும் கடினமான காரியத்தைத் தவிர்க்கும் எந்த மனிதரும் மேலோட்டமான, சுமையான வாழ்வைத்தான்  வாழ முடியும்"என்றார்.

ஆக,கடவுள் பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் உணர்ந்து வாழ்வோம்.

Saturday, 2 January 2016

விண்மீனால் வாழ்வு!

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
அவரது விண்மீண் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2).

நாளை  திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர்.

அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

நாளைக்கு  திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.


இயற்கை இறைவனின் குரல். விண்மீன் சிலருக்கு வாழ்வைக் கொடுத்தது. சிலருக்கு அழிவைக் கொடுத்தது. சிலர் மகிழ்ந்தனர். வேறு சிலர் கலங்கினர். சிலர் அறிவு தெழிவு பெற்றனர். மற்றும் சிலர் குழப்பமடைந்தனர். இறைவனின் குரலைக் கேட்டோர் மகிழ்ந்தனர், தெழிவு பெற்றனர். அவர் குரலைக் கேளாதோர் கலக்கமும் குழப்பமும் அடைந்தனர்.

விண்மீன், சுனாமி, நில நடுக்கம் எல்லாம் இறைவன் பேசும் விதம். நோவா காலத்துப் பெரு வெள்ளம், "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டதன்"(தொ.நூ 6'5-6) விழைவு. சோதோம்,கொமோராவின் அழிவு "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது"( தொ.நூ 18'20) என்பதை உணர்த்தவில்லையா!

விண்மீனும், சுனாமியும், பெரு வெள்ளமும், கந்தகமும், நெருப்பும் தோன்ற வேண்டும். அதன் மூலமாகத்தான் கடவுள் பேச வேண்டும் என்று காத்திருப்பது அறிவீனம். வீட்டிலும் வீதியிலும் நடக்கும் சிறு நிகழ்ச்சியிலும் கடவுள் பேசுகிறார். இக்குரலைக் கேட்கும் இறை அமைதி நம்மிலும் நம்மைச் சுற்றலும் நிலவுமாயின் தவறைத் திருத்திக்கொள்வோம். குழப்பத்திற்கு அவசியம் இல்லை. மகிழ்ச்சி உங்களில் நிலவும். வாழ்த்துக்கள்.

Friday, 1 January 2016

நாம் திருமுழுக்கு யோவான்!

நாளைய   நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரண்டு தரப்பினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். முதல் தரப்பு, குருக்களும், லேவியர்களும்.


திருமுழுக்கு யோவான் செக்கரியா என்கிற குருவின் மகன். குருத்துவம் என்பது குடும்ப வழியில் வருவது. அதிகாரவர்க்கத்தினரின் எண்ணப்படி, திருமுழுக்கு யோவான் ஒரு குரு. எனவே, அவருடைய நண்பர்கள், உறவுகள், திருமுழுக்கு யோவான் ஏன் இப்படி வேறுபாடான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? என்று அவரிடத்தில் கேள்விகேட்க வருவது இயல்பு.


அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். அதேவேளையில், பரிசேயர்களும், திருமுழுக்கு யோவானை விசாரிக்க வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்குப்பின், நிச்சயம் தலைமைச்சங்கம் இருப்பதை நாம் உணர முடிகிறது.


ஏனென்றால், பாலஸ்தீனத்தில் எந்த ஒருவர் இறைவனின் பெயரால் வார்த்தை அறிவித்தாலும், அவர் உண்மையான இறைவாக்கினரா? அல்லது போலியானவரா? என்பதை விசாரிக்கும் உரிமை தலைமைச்சங்கத்திற்கு இருந்தது. அதனை விசாரிப்பதற்காக, அவர்கள் பரிசேயர்களை அனுப்பி இருந்தார்கள்.

திருமுழுக்கு யோவான் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நற்செய்தி அறிவிப்பு ஒன்றையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். போதனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், போதிப்பவர் இப்படித்தான் போதிக்க வேண்டும் என்ற மரபை உடைத்தவர் அவர்.


பொதுவாக, மரபு என்ற பெயரில் நாம் சிறையில் அடைக்கப்படுகிறோம். அது நமக்குள்ளாக இருக்கக்கூடிய புதுமை எண்ணங்களையும், நம்மோடு அடைத்துவிடுகிறது. திருமுழுக்கு யோவானைப்போல, துணிவோடு, நமது நேர்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவோம்.

திருமுழுக்கு யோவானின் தன் உணர்வு (Self Awareness) மற்றும் தன்வெளிப்பாடு (Self Disclosure) இரண்டையும் நாளைய  நற்செய்தி வாசகம் நன்கு எடுத்துக்காட்டுகிறது. தாம் மெசியா அல்லர், மெசியாவின் முன்னோடி என்ற தன் உணர்வை யோவான் கொண்டிருந்தார்.

எனவே, அவர் தாழ்ச்சி உள்ளவராக, பெரிய எதிர்பார்ப்புகள் அற்றவராக, எளிமையாக வாழ முடிந்தது. அதைவிட முக்கியமாக, தாம் மெசியா அல்லர், அவரது முன்னோடியே என்பதைப் பிறரிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், அறிக்கையிடவும் அவரால் முடிந்தது. மானிடரில் பெரும்பாலானோர் தமது உண்மையான தன்மையை  மறைத்து, தாம் இல்லாத வேறொரு ஆளாக முகமூடி அணிந்துகொண்டு வாழ்கின்றனர் எனச் சொல்கின்றனர் உளவியலாளர்.

பிறரது பாராட்டை, அங்கீகரிப்பை; பெற வேண்டும் எனத் துடிப்போர்தாம் இத்தகைய முகமூடிகளை அணிந்துகொண்டு, நாடகம் ஆடுகின்றனர். யோவானுக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. ஒரு முன்னோடியாக, மிதியடி வாரை அவிழப்பவராக இருப்பதில் அவர் நிறைவு கொண்டார். இறையருளில் மகிழ்ந்தார்.


ஆக,பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம் ஒவவொருவரும் ஒரு திருமுழுக்கு யோவான்.


நாம் எப்படி? பிறரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக பொய்யான வேடங்கள் புனைந்து, முகமூடிகள் அணிந்து வாழ்கிறோமா? அல்லது நமது நிறை, குறைகளை ஏற்றுக்கொண்டு, இயல்பாக வாழ்கிறோமா?

இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள்!!!