Thursday 7 January 2016

அள்ளி அணைத்தல்!

நாளைய  நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து, தொழுநோயாளி, நீர் விரும்பினால் குணமாவேன் என்று சொல்கிறான். இயேசு தாமதிக்கவில்லை. உடனடியாக, “விரும்புகிறேன், குணமாகு“ என்று சொல்கிறார்.

 இயேசு நாம் நோயிலும், துன்பத்திலும் அவதியுற வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. நாம் நன்றாக  இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அவரே இந்த உலகத்திற்கு நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனாக வந்தார்.

நாம் குணம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறபோதெல்லாம், அவர் குணம் கொடுத்தார். ஓய்வுநாள் என்று கூட பார்க்கவில்லை. அதனால், தான் பலரது எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் சந்திக்க வேண்டியது வரும், என்பது பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை.

நன்மை என்றால் நினைத்தமாத்திரத்தில் அதை செய்து முடித்தார். பலவேளைகளில் நாம் கடவுள் எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார். நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள் தான் காரணம், என்று பதில் தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறபோது, கடவுளை பதிலாக நினைக்க ஆரம்பிக்கிறோம்.

ஆனால், அது உண்மையல்ல. கடவுள் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். நமது வாழ்விலும் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள  அழைக்கப்படுகிறோம்.

இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. உலகத்தோடு மனித மனங்களும் சுருங்கிவிட்டது. அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அடுத்த அறையில் கொலையே நடந்தாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும், என்கிற மோசமான மனநிலை இன்றைய சமுதாயத்தில் மலிந்துபோய்விட்டது. அந்த மனநிலை மாற்றம் பெற வேண்டும். நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளின் என்கிற பரந்த உணர்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


காலில் விழுவது பெரிய சாதனையோ  சாமார்த்தியமோ அல்ல. விழுந்துகிடப்பவனை அள்ளி அணைத்து ஆளாக்கிவிடுவதுதான் சாதனையும் சாமார்த்தியமும் .அந்த தொழுநோயாளி காலில் விழுந்தான். அவன் நோயாளி. விழுவது அவன் இயல்பு. இன்று காலில் விழுவதும், விழுந்தவனை கண்டு கொள்ளாமல் இருப்பதும் கௌரவமாக மேடைகளில் அரங்கேறுகின்றன.

நீ அவர் காலில் விழ காத்திருப்பவர் அல்ல உன் தெய்வம். யாருடைய காலில் விழவும், கை நீட்டி காத்திருக்கும் நிலையைக் காணவும் கணமும் விரும்பாதவர். உடனே தன் கையை நீட்டி, தாங்கி, நல் வாழ்வுக்கு வழிநடத்துவார்.

அவரைக் காணும் முயற்சியல் உடனே இறங்குவோம். நம் கஷ்டங்கள் தலைக்குமேல் போகும்வரை காத்திருக்க வேண்டாம். உடல் முழுவதும் தொழுநோய் பரவிய பின் இயேசுவின் காலில் விழ காத்திருக்க வேண்டாம். என்றும் எப்பொழுதும் இயேசுவைக் காண்போம். அன்றே அப்பொழுதே அவர் நம்மைக் குணமாக்குவார்.

1 comment:

  1. Dear Kalai,Thank you for your beautiful thoughts.May God bless.

    ReplyDelete