Thursday 21 January 2016

உண்மையான சீடர்கள்!

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள்.

அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்?

இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர்.

அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள்.

 ஏனென்றால், இயேசு பாரம்பரியம் என்ற பெயரில் நடந்துகொண்டிருந்த அநீதிகளை, அக்கிரமங்களை துணிவோடு எதிர்த்து நின்றார். எதிர்ப்பைச் சம்பாதித்தார். அவருக்கு பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வரத்தொடங்கின. அந்த சமயத்தில், சீடர்கள் துணிவோடு அவர் பக்கம் நின்றார்கள். துணிவு, சீடர்களின் மிகப்பெரிய பலம்.

இயேசுவைப் பின்பற்றுகிற நம்மிடத்தில், சீடர்களிடம் இருந்த இந்த இரண்டு குணங்களும் இருக்கிறதா? என்று சிந்திப்போம். இயேசுவிடத்தில் நமக்குள்ள நம்பிக்கையும், இயேசுவோடு நிற்கக்கூடிய துணிவும் தான், நம்மை உண்மையான சீடர்களாக அடையாளம் காட்டும்.


No comments:

Post a Comment