Friday 22 January 2016

சவாலான வாழ்வு!

இயேசுவின் உறவினர்கள் அவருக்கு மதிமயங்கி விட்டது என்று எண்ணி, அவரைப்பிடிக்கச் சென்றதாக நாளைய  நற்செய்தியில்  நாம் பார்க்கிறோம். ஏன் இத்தகைய ஒரு முடிவுக்கு, இயேசுவின் உறவினர்கள் வந்திருக்க வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமலில்லை.

1. இயேசுவின் தந்தை தச்சுத்தொழில் செய்து வந்தார். தச்சுத்தொழில் என்பது நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது. தச்சருக்கு ஏராளமான வேலையும் இருந்தது.

இவ்வளவு வருமானம் தொழில் கையில் இருந்தாலும், இயேசு அத்தகைய தொழிலை விட்டுவிட்டு, போதிப்பதற்காகச் சென்றது, அவருடைய உறவினர்களின் மத்தியில் பெருத்த வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

2. இயேசு அதிகாரம் நிறைந்த யூத மதத்தின் தலைவர்களிடம் பிரச்சனையை வளர்த்துக்கொண்டார். எப்போதுமே அதிகாரம் நிறைந்தவர்களிடம் தவறு இருந்தாலும், அதை கண்டுகொள்ளாத மனநிலையோடு தான் மக்கள் வாழ்வர். ஏனென்றால், அதிகாரத்தை எதிர்த்து வெற்றிபெறுவது இயலாத காரியம்.

அதேபோல, அதிகாரத்தை எதிர்த்தவர்கள் மகிழ்ச்சியோடு, நிம்மதியோடு வாழ முடியாது என்பதும் அனைவரும் அறிந்தது. எனவே, அதிகாரத்தோடு விளையாடுவது நமக்கு தீங்கினைத்தான் விளைவிக்கும் ஆனால், இயேசு துணிந்து அதிகாரவர்க்கத்தினர்க்கு எதிராக நிற்கிறார்.

3. இயேசு புதிய ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த குழு ஒட்டுமொத்த சமுதாயத்தின் பார்வையில் வேறுபட்ட குழு. மீனவர்களும், வரிவசூலிப்பவரும், தீவிரவாதிகளும் என, ஒன்றுக்கு முரணானவர்கள் இருக்கும் குழு. மேற்கூறிய மூன்று காரணங்களால், இயேசுவின் உறவினர்கள், இயேசுவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஒருவிதத்தில் இயேசு மதிமயங்கித்தான் போனார் எனலாம். அவருடைய சிந்தனை முழுவதும் கடவுளைப் பற்றியும் மனிதரின் நலன் பற்றியும் இருந்ததால் தம்மைப் பற்றி எண்ணுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. கடவுளிடமிருந்து தாம் பெற்றுக்கொண்ட பணியைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதிலேயே இயேசு கருத்தாய் இருந்ததால் அவரைப் பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொண்டார்கள்.

 இயேசு கடவுளின் சக்தியால் செயல்பட்டாரா அலகையின் வல்லமையால் அதிசயங்கள் புரிந்தாரா என்று கேட்கும் அளவுக்குச் சிலர் போய்விட்டிருந்தனர். கிறிஸ்துவை நம்புவோர் அவருடைய நற்செய்தியைத் தம் உயிர்மூச்சாக மாற்றும்போது கடவுளுக்காக ''மதிமயங்கி'' செயல்படத் தொடங்குவார்கள். அப்போது ''உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்னும் கேள்வியை நம்மைப் பார்த்து யாராவது கேட்டால் நாம், ''கடவுளுக்காக நான் பைத்தியம்தான்'' எனப் பதில் கூறமுடியும்.

இந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாத அனைவரும், பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி, வாழ்வது தான் சவாலானது. உண்மையானது. அப்படிப்பட்ட வாழ்வை நாம் அனைவரும் வாழ்வோம்.

2 comments:

  1. Dear Sister Kalai,Congrats.May God bless you.

    ReplyDelete
  2. HI KALAI THANK YOU FOE THE LOVELY SHARING. AND REMINDING TO BE THOUGHTFUL OF THE PRESENCE OF GOD THE FATHER AND HIS PEOPLE JUST LIKE JESUS.

    ReplyDelete