Monday 4 January 2016

முன்னுதாரணம்!

"அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்".(மாற் 6'42-43).

"நீங்களே உணவு கொடுங்கள்" என்று  இயேசு தம் சீடர்களை நோக்கிச் சொன்ன இந்த வார்த்தைகளை நாளை   சிந்திப்போம். “நீங்களே உணவு கொடுங்கள் ” என்று அவர்களிடம் சொன்னதன் மூலம் உணவு கொடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார் இயேசு.


பாலைநிலத்தில் இறை வார்த்தைக்காக ஆவலோடு காத்திருந்த மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், அதற்கான பொறுப்பையும் தம் சீடர்களே ஏற்கவேண்டும் என்னும் இயேசுவின் சிந்தனை பாராட்டுக்குரியது.

இன்று உலகம் முழுவதும் உணவின்றி வாடும் மக்கள் தொகை ஏராளம். நமது நாட்டிலேகூட வறுமைக் கோட்டிற்குக் கீழ் மூன்று வேளை உணவின்றி வாடும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் உள்ளனர். அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சாரும் என்று நாம் சும்மா இருக்க முடியாது.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளையை ஏற்று, நாம் உணவுப் பகிர்வை நிகழ்த்த முன்வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒருவேளை உணவைத் துறக்க அனைவரும் முன்வந்தால், ஏராளமானவர்களுக்கு உணவு கிடைக்கும்.

உலகம் முழுவதும் சாப்பிடுகின்ற இறைச்சியின் அளவைக் குறைத்தால், சுற்றுச்சூழல் முன்னேறும். உணவுப் பகிர்வும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நமது உணவைக் குறைப்பதன் மூலமும், உணவுப் பகிர்வின் மூலமும், ”நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ” என்னும் ஆண்டவர் இயேசுவின் கட்டளையை நாம் நிறைவேற்றலாம்.


பல சாதனைகளைப் படைப்பதற்கும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நம்மையும் நம்மைச் சுற்றிலும் உள்ள அறிவை விட நமக்குள் இருப்பவர்பற்றியும் அவரது ஆற்றல்பற்றியும் உள்ள அறிவும் நம்பிக்கையும் மிக அவசியம்.

சீடர்கள் முதல் பகுதியை அறிந்திருந்தனர். அதாவது, கூட்டம் மிகப் பெரிது, நேரம் நெடு நேரமாகிவிட்டது. அநேகமாக பொழுது சாயும் நேரம். இடமும் பாலைநிலம். சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று உணவு வாங்கி வருவதும் இப்போதைக்கு முடியாத காரியம்.

அப்படியே வாங்குவதாக இருந்தாலும் 200 தெனாரியம் ஆகும். தற்சமயம் கைவசம் ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. இந்த விவரங்களும் தெளிவும் இருந்தன.

ஆனால் இரண்டாம் பகுதியை அறியவில்லை. இயேசுவைப்பற்றிய விவரங்களும் தெளிவும் இன்னும் பெறவில்லை. அவர் கையாளும் வழி முறைகளை தெறிந்திருக்கவில்லை. இயேசு கையாண்ட வழி முறையைக் காண்போம். முதலில் கும்பலை குழுவாக்குகிறார். ஐம்பது நூறாக அமரச் செய்கிறார்.

 அமைதியாக அமர்ந்து நிதானமாக சிந்திக்கத் தூண்டுகிறார். அதன் பின், வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றியதன் மூலம், மக்களுள் புதைந்திருக்கும் கடவுள் உணர்வை தூண்டி துலக்குகிறார்.


சுயநலம் தவிர்த்து பிறர்நலம் பாராட்டும் பெரிய மனதை தட்டி எழுப்புகிறார். இறுதியாக, உங்களிடம் இருப்பதை முதலில் பரிமாருங்கள் என்று முன்னுதாரணம் காட்டுகிறார்.அவ்வளவுதான். இதை நாமும்  நம் வாழ்வில் முயற்சி செய்வோம்.

2 comments:

  1. அழகான பதிவு; அதைவிட அழகான பகிர்தல்.இன்றையப் பதிவு ஒன்றும் புதிதல்ல..பல முறை கேட்டுப் பழக்கப்பட்டதே.ஆனால் அதை இன்று தாங்கள் பகிர்ந்துள்ள கோணம்தான் மாறுபட்டுள்ளது. பிரச்சனைகள் பற்றி அறிந்திருந்த சீடர்கள் அதைப் போக்க வல்லவரின் ஆற்றல் பற்றி அறியவில்லை.நாமும் பல நேரங்களில் நம்மில் இருப்பவரை விட நம்மையே முன்னிறுத்த விழைகிறோம். விளைவு..? நம் முகத்தில் நாமே கரியைப்பூசிக்கொள்கிறோம்.இறைவனை நம்புவோம்....எங்கேயோ உள்ள இறைவனை அல்ல; ஆனால் நம்மிலிருந்து,நம் மூலமாக செயல்படும் இறைவனை! "ஒவ்வொரு வாரமும் ஒருவேளை உணவைத்துறக்க முன் வந்தால் ஏராளமானவர்களுக்கு உணவு கிடைக்கும்" மூளையில் யாரோ ஸ்விட்ச் போட்ட மாதிரி உள்ளது.போட்ட தங்களுக்கு நன்றிகள் 'அருட் சகோதரியே!'

    ReplyDelete
  2. Dear Amma,thank you so much.May God bless us.

    ReplyDelete