Saturday 2 January 2016

விண்மீனால் வாழ்வு!

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
அவரது விண்மீண் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2).

நாளை  திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர்.

அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

நாளைக்கு  திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.


இயற்கை இறைவனின் குரல். விண்மீன் சிலருக்கு வாழ்வைக் கொடுத்தது. சிலருக்கு அழிவைக் கொடுத்தது. சிலர் மகிழ்ந்தனர். வேறு சிலர் கலங்கினர். சிலர் அறிவு தெழிவு பெற்றனர். மற்றும் சிலர் குழப்பமடைந்தனர். இறைவனின் குரலைக் கேட்டோர் மகிழ்ந்தனர், தெழிவு பெற்றனர். அவர் குரலைக் கேளாதோர் கலக்கமும் குழப்பமும் அடைந்தனர்.

விண்மீன், சுனாமி, நில நடுக்கம் எல்லாம் இறைவன் பேசும் விதம். நோவா காலத்துப் பெரு வெள்ளம், "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டதன்"(தொ.நூ 6'5-6) விழைவு. சோதோம்,கொமோராவின் அழிவு "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது"( தொ.நூ 18'20) என்பதை உணர்த்தவில்லையா!

விண்மீனும், சுனாமியும், பெரு வெள்ளமும், கந்தகமும், நெருப்பும் தோன்ற வேண்டும். அதன் மூலமாகத்தான் கடவுள் பேச வேண்டும் என்று காத்திருப்பது அறிவீனம். வீட்டிலும் வீதியிலும் நடக்கும் சிறு நிகழ்ச்சியிலும் கடவுள் பேசுகிறார். இக்குரலைக் கேட்கும் இறை அமைதி நம்மிலும் நம்மைச் சுற்றலும் நிலவுமாயின் தவறைத் திருத்திக்கொள்வோம். குழப்பத்திற்கு அவசியம் இல்லை. மகிழ்ச்சி உங்களில் நிலவும். வாழ்த்துக்கள்.

1 comment: