Monday 11 January 2016

அன்னை வெர்ஜினும் நானும்!

விண்ணக வீட்டில் இன்று இறைவனோடு மூன்றாம்   ஆண்டு  பிறந்தநாள் கொண்டாடும் அன்னை வெர்ஜினுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!

வாழ்நாளெல்லாம் நலமுடன் வாழ்க
என  வாழ்த்தும்,
வாழும் தெய்வம்
என் அன்னை வெர்ஜின்!

வந்தாரை இன்முகம் கொண்டு
வருக என வரவேற்கும்
வள்ளல்தெய்வம்
என் அன்னை வெர்ஜின்!

இனியசொல்லால் எல்லோரிடமும்
வாய் திறந்து பேசும்
பெருந் தெய்வம்
என்  அன்னை வெர்ஜின்!

என்னிடம் வாழ்வின் புரிதல் இல்லாத போது
வாழ்வின் அர்த்தத்தை சொல்லி  வளர்த்த
நல்ல  தெய்வம்
 என் அன்னை வெர்ஜின்!

உன்னை அக்கா என்பதா அல்லது அன்னை என்பதா.......
தவம் இல்லை புண்ணியம் செய்யவில்லை
தேடி அலைந்து எனக்காய்
இறைவன் எதுவும் தரவும் இல்லை
இருந்தும் ... எனக்காய் நீ

வாழ்வின் நெடும்பரப்பில் - என்னில்
முழுப்பக்கங்களை சொந்தமானதாய்
ஆக்க முடியும் என்கிறாய்
அதுவும் உன்னால் மட்டும் என்கிறாய்
அது எப்படி சாத்தியமாகும் ??

உடல் விட்டு கூடுபாயும் ஆவியும்
நான் இல்லை
உன்வார்த்தைகள் என் காலத்தின்
பரப்பில் விரிந்து கிடக்கையில்
அதை எப்படி நான் தட்டிப் பிரிவேன்
என் உடலின் இரத்த ஓட்டங்கள்
உன் கையின் அசைவின் மூலம்
எனக்கு உயிர் தருபதாக ....

நீ பூமியாய் இருக்கையில்
உன்னை சுத்திவரும் துணைக்கோள்
நான் ஆக
செய்கையில் மாற்றம் வரும் ஆகின்
உன்னில் தான் மாறுதல் வேண்டும்
அப்பொழுது சொல்
நான் உன்னை தாண்டிச்செல்கின்றேன்
என ........... மொழிந்தவள் நீர்!


நான் பள்ளி பயிலுகையில்,
என்னை கூடப்பிறந்த தங்கைப்போல்
பாவித்தவள் நீர்!

நான் கல்லூரி பயில்கையில்
நீர் பழஞ்ச்சூருக்கு வந்தால்
புன்னகையால் பாச மழை பொழிபவள் நீர்!

நான் நவகன்னியராக   இருந்த போது
என் கரம் பற்றி என்னோடு நடந்த
என் இரண்டாம் அன்னை நீர்!

நான் இளவலாக  இருந்த போது
என்னோடு சேர்ந்து கூடப்பிறந்த
அக்கவைபோல் விளையாடிய அன்னை நீர் .

நான்  உன்னை  புரிந்து  கொள்ளாத  போது
நம்மிடையே நடந்த செல்ல  சண்டையில்
நீ என்னை  அரவணைத்து
கலை தங்கச்சி நான் உன் அக்கா நீ என் தங்கை
எனக்கு உன்மேல் உரிமை இருக்கு என்று
ஆறுதல் கூறியவள்    நீர் !


நான் பணித்தலங்களில்  இருந்து
தொலைபேசியில் உன்னை
அழைக்கும் போது
நீ கேட்கும் முதல் வார்த்தை
கலை தங்கச்சி எல்லோரும்   நல்லா இருக்கீங்களாம்மா!
உன் கவலை மறந்து நான் மகிழ்வாய் இருக்க
என்னை மகிழ்வுடன் நலம் விசாரித்தவள் நீர்!

பணி நிமித்தம் DMI தங்கைகள்,    MMI  தம்பிகள்  ஃபாரின் செல்லும்போது
பாசத்துடன் அனுப்பி வைத்து
தாயைப் போல பெரும் மன நிறைவு கண்டவள் நீர்! !

தன் துறவறப்பணியினிலே கடவுளுக்காய் வாழ
தனிக்கவனம் செலுத்தியவள் நீர்!
உம்மைப் போல் தன் DMI மற்றும்  MMI  பிள்ளைகள்
கடவுளில் வளர வாழ
தவமாய்த் தவம் கிடந்தவள் நீர்!

அத்தனையும் அன்னை செய்திருந்தால்
அதனைக் கடமை என்றிடுவேன்-ஆனால்
அத்தனையும் அக்கா செய்ததால்
அவளையே தெய்வம் என்றிடுவேன்!

இது போன்று,
இன்னும் எத்தனை பாசங்களை
என் மீது காட்டப்போகிறாய்?
அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்
இனி வரும் காலங்களில்..........
கண்ணீருடன் உன் நினைவுகளில் வாழும் தங்கை கலை!

1 comment:

  1. ஒரு அக்காவை இழந்தாலும் ஓராயிரம் உடன் பிறப்புக்களைத் தங்களுக்கு விட்டுச் சென்றுள்ளார் உங்கள்் அன்னை வெர்ஜின்.விண்ணிலிருந்து தூவும் மழையாக தங்கள் மேல் ஆசீர் மழை தூவிக் கொண்டிருக்கிறார் என நமபுங்கள் சகோதரியே! பொங்கி வரும் கண்ணீரைத் துடையுங்கள்.அன்புடனும்......ஆசீருடனும்.....

    ReplyDelete