Saturday 9 January 2016

திருச்சபையில் நல்ல மகனாக,மகளாக வாழ்வோம்!

நாளை ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார்.

அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா? நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:

1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா? இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா?

2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா? திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா?

3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா? எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா?

"மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், "கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம்.

நாளைய  நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம்.

தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

ஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆற்ற முன்வருவோம்.

No comments:

Post a Comment