Monday 18 January 2016

மனிதன்-முகம், அகம் - ஆண்டவன்!

நாளைய வாசகங்கள் நமக்கு உரைப்பது இருவகைப் பார்வையைப் பற்றி. நாம் நாளை நினைவில் வைக்க வேண்டிய கடவுளின் இந்த வார்த்தை மிக மிக முக்கியம்.அதாவது "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்;
ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார்.

 பார்வை என்பது பல வகைப்படும். பார்வைகளில் எது நல்ல பார்வை என்பதை உணர்வதே பார்வையின் உண்மையான நிலை. கண்ணால் காண்பதும் பொய்,  காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்பார்வை என்பது மெய்மைகளை நோக்கியதாக உன்னதத்தை நோக்கியதாக, ஞானத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். உண்மையான பார்வை என்பது அகத்தை ஆழ்ந்து நோக்கி ஆண்டவரை அறிவதும், உணர்வதும், அனுபவிப்பதும் ஆகும்.

நல்லவைகளைப் பார்த்து நன்மைகளைச் செய்வதும் நல்ல பார்வை. சில நேரங்களில் பார்வைகளில் பழுதுகள் உண்டாகும், இருட்டில் கயிறுகூட பாம்பாகத் தெரியும், பேருந்துப் பயணம் செய்யும் போது மரங்கள் ஓடுவது போல தோன்றும், வலதுகை சாப்பிட முற்பட்டு கண்ணாடியில் பார்த்தால் இடது கையால் உண்பதுபோல தெரியும். இது பார்வைகளில் உண்டாகும் சில பழுதுகள். பார்வைகளில் உண்மைகளை உணர்வதுதான் சிறந்த பார்வை.

நாம் நம் அகப்பார்வைகளை அகலமாக்குவோம்  .அகம் ஆண்டவனை நோக்கிப் பாயும். ஆனால், உடல் பார்வை உலகத்தை மனிதர்களை  நோக்கிப் பாயும். பார்வைகளில் தான் பாவங்கள் தொடங்குகிறது. இது குறுகிய பார்வை குறுகிய கண்ணோட்டம். இப்படி ஒரு பார்வையோடுதான்  ஈசாய் தன் பிள்ளைகளை அழைத்து சாமுவேலிடம் நிறுத்துகிறார்.


ஆனால் சாமுவேலோ கடவுள் உரைத்ததில் கவனமாய் இருக்கிறார்.உன் பிள்ளைகள் இவ்வளவு தானா என்று ஈசாயிடம் கேட்டு அவரது பார்வையை அகலமாக்குகிறார். அப்பொழுது  தான் ஈசாய் தாவீது இருப்பதை கூறுகிறார்.பின் ஆண்டவர் கூறியவாறு தாவீதுக்கு அருள்பொழிவு நடக்கிறது.ஆக,நாம் கடவுளின் பார்வையில் இருந்து தப்புவது என்பது மிக மிக கடினம்.ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது மேல் இருந்தது ஆண்டவரின் அகப்பார்வை.

 
அகப்பார்வை ஆண்டவரின் பிள்ளைகளுக்கே உரித்தானது.தீமைகளை அறிந்து அதை துரத்தும் போதே  நாம் ஞானம் பெற்றவர்களாகிறோம்.கடவுளும் இதையே விரும்புகிறார்.

தீமைகளைத் துரத்த எண்ணுவதே சிறந்த பார்வை அவனுக்குள் ஞானம் தொடங்கிவிட்டது, தொடரும் ஞானம் தீமைகளை நீக்கி ஞானப்பார்வைகளை உண்மைப் பார்வைகளை நமக்குத் தரும். ஒரு ஞானியிடம் இரண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் அவரிடம் ‘ஐயா எங்களிலே அழகுள்ளவள் யார்’ என்று கேட்டார்கள். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டோமே என்று உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். ஒருவள் “ஹீதேவி” என்றாள். இன்னொருவள் “மூதேவி” என்றாள். அந்த ஞானி சொன்னார் “இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பி வாருங்கள்” என்றார் அவ்வாறே இருவரும் நடந்து சென்று திரும்பி வந்தார்கள். ஞானி சொன்னார் “ஹீதேவி வரும் போது அழகு” “மூதேவி போகும்போது அழகு” என்றார். அவர் உண்மையைத் தெரிந்ததினாலும் அகப்பார்வை சரியாக இருந்ததாலும் உண்மையைச் சொன்னார்.

அகம் புறம் என்ற இரண்டையும் ஒரே மனிதனில் படைத்த ஆண்டவன் ,நல்லதையும் கெட்டதையும் ஆராய்கின்ற ஒரே மூளையை ஒவ்வொருவருக்கும் தனி தனியாய் படைத்திருக்கின்றான்.நல்லவைகளை தேர்ந்து அகத்தில் விதைத்து வாழ்கின்றவனே அழகான மனிதன் .அந்த அழகை புறத்தில் செதுக்கி ,சிலர் மனதில் அழகையும் ,பலர் முகத்தில் புண் முறுவலையும் புதைக்கின்றவனோ புனிதன் .

மல்லிகை ,அதை அப்புறபடுத்திய பின்னும் மணத்தை பின் விட்டு செல்வது போல் ,மானிடன் அழகான மனதையே ,இறுதியில் விட்டு செல்ல வேண்டும் .நாம் மாண்ட பின்னும் ,பலர் மனதில் மணக்க வேண்டும்.
இது மட்டும் நடந்து விட்டால் கண்ணீரும் இல்லை ,கவலைகளும் இல்லை.


ஆம் எப்போதும் மனிதனை விட்டு தீமை அகலும் போது மனிதன் புனிதமடைகிறான், நன்மை அவனுக்குள் வரும்போது அகப்பார்வை பெறுகிறான். எப்போது நமது அகப்பார்வை விரிவடைகிறதோ அப்போது நமக்குள் ஞானம் வளரும். ஞானத்தை நிறைத்துக் கொண்டு பார்க்கும் பார்வைதான் உண்மையான பார்வை. ஆண்டவரே என் பார்வைகளை அகலமாக்கும் ஞானத்தின் ஆழத்தை உணர அருள்தாரும்.

1 comment:

  1. Dear Sister Kalai,very very good and useful.May God Bless.

    ReplyDelete