Sunday 17 January 2016

நோன்பு இருப்பார்கள் !

தமது சீடர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை என்று வாதம் செய்யும் இயேசு, "மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்று சொல்லத் தவறவில்லை.

அவ்வாறே, இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவரும் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம்.

இறைவாக்கினரும், போதகருமான பர்னபா, லூக்கியு, மனாயீன், சவுல் ஆகியோர் நோன்பிருந்து வழிபடும்போது தூயஆவியாரின் வழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டார்கள் (திப 13:3). அதுபோல, மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம் நோன்பிருந்து செபிக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது என்பதையும் (திப 14: 23) அறிகிறோம்.

நோன்பிருந்து செபிப்பது வலிமையானது என்பதை ஆண்டவர் இயேசுவே "இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" (மாற் 9:29) என்னும் சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவின் சீடர்களான நாமும் நோன்பிருப்போமாக! நோன்புடன் கூடிய இறைவேண்டலினால் வலிய செயல்களை நிகழ்த்துவோமாக!

யோவானுடைய சீடர்களைப் போல, இயேசுவின் சீடர்களும் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்விக்கு இயேசு தரும் பதில்: அவர்களும் நோன்பு இருப்பார்கள். மணமகன் அவர்களோடு இருக்கும்வரையில் அவர்கள் நோன்பிருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வில் நோன்பு என்பது இன்றி அமையாத ஒன்று. இந்த நோன்பினை மூன்று வகைகளில் அமைக்கலாம்.
1. உணவை மறுக்கும் உண்ணா நோன்பு.
2. தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றின்மீது கட்டுப்பாடு கொள்ளும் ஊடக நோன்பு.
3. நமது சொற்களின்மீது தன்கட்டுப்பாடு கொள்ளும் சொல்நோன்பு.

இந்த மூன்று வகையான நோன்புகளும் நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, மணமகனாம் இயேசுவைப் பிரிந்து, அவரது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும், இக்காலத்தில் இந்த மூன்று நோன்புகளையும் வாரமொருமுறை கடைப்பிடிப்போமாக!

No comments:

Post a Comment