Wednesday 25 January 2017

விளக்கு எதற்காக ?

இன்று ஆயர்களான புனித திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். தொடக்கத் திருச்சபையின் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்குப் பவுலடியார் எழுதிய மூன்று திருமடல்களும் தொடக்கத் திருச்சபை எவ்வாறு இயங்கியது, ஆயர்கள், மூப்பர்கள், இறைமக்கள் என்னும் படிமுறை அப்போதே எவ்வாறு செயல்பட்டது என்னும் தகவல்களைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா?" எனக் கேட்கிறார். விளக்கு விளக்குத் தண்டின்மீது வைக்கப்பட்டு, ஒளி தரவேண்டும். அதனால், நமது பணிகள் இருளையும் பொருட்படுத்தாது தொடரவேண்டும் என்பதே விளக்கைக் கொண்டுவருவதன் நோக்கமாகும்.

திருச்சபையின் தலைமைப் பொறுப்புகளும் அவ்வாறே விளக்குகள்போலவே. ஆயர்கள், குருக்கள், பொதுநிலைத் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை, திறமைகளை மரக்காலின்கீழோ, கட்டிலின்கீழோ வைக்காமல், அதாவது எப்பணியும் செய்யாது சோம்பியிராமல், விளக்குத் தண்டின்மீது அனைவரும் காணும்படியாகப் பணியாற்றவேண்டும். அப்போதுதான், அதைப் பார்க்கின்ற பிறரும் பணியாற்றுவர், பிறருக்கு அது எடுத்துக்காட்டாகவும் அமையும்.

தொடக்கத் திருச்சபையின் ஆற்றல்மிகு ஆயர்கள் திமொத்தேயு, தீத்து போலவே, இன்றைய தலைவர்களும் தங்கள் பணிகளை அனைவரும் கண்டு பின்பற்றும் வண்ணம் ஆற்ற மன்றாடுவோம்.

No comments:

Post a Comment