Thursday 26 January 2017

விதையுங்கள் !

நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. அறிவியல் ஒரு எல்லைவரை எட்டிச்சென்று, பயிர் வளர்வதற்கும், வளர்ந்த பயிர் விளைச்சலுக்கான காரணத்தை விளக்கலாம். அந்த எல்லைக்குப் பின், அறிவியலும் மௌனம் சாதித்துவிடுகிறரது. மனிதனின் கையை மீறிய ஒரு சக்தி அந்த பயிறுக்குள் இருந்து, நிலம் தானாக விளைச்சல் கொடுக்கச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தன் கையை மீறிய ஒரு ஆற்றல் நம்மை அறியாமல் நமக்குள்ளும் புறமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் இறை ஆட்சி. சில விசித்திரமான நிகழ்ச்சிகள் நம்மில் குருக்கிடும்போது, ஆச்சரியமாக அந்த தெய்வீக சக்தி நம்மை பத்திரமாக பாதுகாத்த சம்பவங்கள், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கும் நிகழ்ந்தது நாம் அறியாததல்ல.

வாசிக்கும் அனைவரும் உங்கள் வாழ்வில் உங்களை அறியாமல் இறையாட்சி செயல்பட்டு உங்களை பாதுகாத்த நிகழ்வுகளை மின் அஞ்சலில் எழுதுங்கள். இறை ஆட்சியின் செயல்பாட்டை அனைவரும் அறிய வாய்ப்பாகும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியைத் தானாகவே முளைத்து வளரும் விதைக்கு ஒப்பிடுகிறார். நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அத்துடன், அவரது பணி முடிந்துவிடுகிறது. பின்னர், அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. பின்னர், விளைச்சல் அளிக்கிறது.

இந்த உவமை நம் அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கிறது. நமது பணிகளுக்கு நேரடியாக வெற்றியோ, பலனோ கிடைக்கவில்லை என்று நாம் வருந்தினால், இந்த உவமை நமக்கு உற்சாகம் தருவதாக அமைந்திருக்கிறது. நாம் விதை விதைப்பவர்கள். அதை வளரச் செய்து, பலன் தருபவர் இறைவனே.

எந்த நேரத்தில், எத்தகைய பலன் தரவேண்டும் என்பது அவரது திருவுளமே என்பதை ஞானத்தோடு ஏற்றுக்கொள்வோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல எண்ணங்களை, நல்ல திட்டங்களை விதையாகத் தூவுவது மட்டுமே. மற்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார்.

 இந்த நம்பிக்கையில் நம் பணிகளை ஆர்வமுடன் செய்வோம்.இறை ஆட்சி வெளிப்படையாக ஒருநாள் வெளிப்படும். அதுவரை காத்திருப்போம், விழிப்போடு செபிப்போம்.

No comments:

Post a Comment