Sunday, 1 November 2015

இறப்பே .. புது வாழ்வு!



''இயேசு, 'என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே
நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என்றார்'' (யோவான் 6:38)

நாளை இறந்த விசுவாசிகளின் நினைவைக் கொண்டாடுகிறோம். வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் பவுலடியாரின் வாக்கின்படி, இறந்தாலும் இவர்கள் இறைவனுக்கும், நமக்கும் உரியவர்கள் என்னும் நம்பிக்கையுடன் இறந்த விசுவாசிகளுக்காக நாளை சிறப்பாக மன்றாடுகிறோம்.  

இறந்த விசுவாசிகளுக்காக மன்றாடும் பழக்கம் காலம் காலமாக திருச்சபையில் இருந்துவந்தாலும், அறிவியலாளர் ஐன்ஸ்டீனின் வருகைக்குப் பின் இந்த நம்பிக்கை அறிவியல் வழியாகவும் வலுப்பெற்றிருக்கிறது. இது ஒரு வியப்பான தகவல்தான்.  

ஐன்ஸ்டீன் கிறித்தவர் அல்லர், ஒரு யூதர். இருந்தபோதிலும், அவரது ஒப்புமைக் கொள்கையின் தாக்கம் இறந்தோர் பற்றிய கத்தோலிக்கரின் பார்வையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஒப்புமைக் கொள்கையின்படி காலமும், இடமும் நிலையானவை  அல்ல, மாறாக ஒப்புமைக்குரியவை . 

எனவே, உடலோடு வாழும் காலத்தில்தான் காலமும், இடமும் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன. உடலைக் கடந்தபின், காலத்தையும், இடத்தையும்  நாம் கடக்க முடியும். எனவே, இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். 

எனவே, ஒருவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும்கூட, அவருக்கு அது இன்று போலத்தான். நமக்குத்தான் இருபத்தைந்து ஆண்டுகள். எனவே, நாம் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தபின் அவருக்காக மன்றாடினாலும், அவருக்கு அது இறப்பின் நேரத்திலேயே பலன் கொடுக்கும். 

இதுதான் ஐன்ஸ்டீனின் தாக்கம். எனவே, என்றோ இறந்துபோன நம் உறவுகளை இன்று எண்ணிப்பார்த்து மன்றாடுவது அவர்களுக்கு என்றும் உதவுவதே. 

நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். 

இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். 

இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11'4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, "விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்"( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார்.

எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி,தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாரே வாழ வேண்டும். 

வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும். இறைவன் பாராட்ட, மனிதர் புகழ, உன் மனம் பெருமிதமடைய வாழ்ந்துகொள். மரணம் மகிழ்ச்சியாக இருக்கும். புது வாழ்வாக அமையும்.


1 comment:

  1. Hi Kalai it is well said "Live life, the way you want die".Good

    ReplyDelete