''வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம்,
'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர்,
பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார்'' (லூக்கா 14:21).
'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர்,
பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார்'' (லூக்கா 14:21).
இன்றைய நற்செய்தி நமக்கு உரைப்பது இதுவே .
பாலஸ்தீனத்திலே விருந்து அல்லது
விழா பற்றிய நிகழ்வுகள், முதலிலேயே விருந்தினர்களுக்குத் தெரிவிக்கப்படும். விரைவில்
விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது, என்கிற பொதுவான செய்தி மட்டும், முதலிலேயே
அறிவிக்கப்படும்.
விருந்தினர்கள் அனைவருக்குமே இந்த செய்தி அறிவிக்கப்படும். விழா ஏற்பாடுகள்
முடிந்தபின், அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டபின், மீண்டும் விருந்தினர்களுக்கு,
விருந்தில் வந்து கலந்துகொண்டு, மகிழ்ச்சியில் பங்கு கொள்ள, அழைப்புவிடுக்கப்படும்.
முதல் அறிவிப்பே, விருந்தினர்களுக்கான நினைவூட்டல். அழைக்கப்பட்டவர்களுக்கு, எப்போதும்
அழைப்பு வரலாம், என்பது நன்றாகத் தெரியும்.
அப்படித் தெரிந்திருந்தும் விருந்துக்கு
வராமல் இருப்பது, விழா கொண்டாடுகிறவர்களை அவமதிக்கின்ற செயலாகும். இந்த அவமதிப்பைத்தான்,
அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அழைத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அழைக்கப்பட்டவர்கள் சொல்லக்கூடிய
காரணங்கள், வரமுடியாத அளவுக்கான காரணங்கள் இல்லை. அது தவிர்க்க முடியாத காரணங்கள் அல்ல.
அவை சாதாரண காரணங்கள்.
நமது வாழ்வில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? என்பதை
இந்த பகுதி உணர்த்துவதாக இருக்கிறது. புதிய வயல் வாங்கியிருப்பதைப் பார்ப்பதற்கும்,
மாடுகளை ஓட்டிப்பார்ப்பதற்கும், புதிய மனைவியோடு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று
சொல்லப்படுகிற காரணங்கள், நொண்டிச்சாக்குகள். வர முடியாது, என்று அகம்பாவத்தில் சொல்லப்படும்
காரணங்கள். அல்லது, விருந்தை ஒரு பொருட்டாக எண்ணாத, அழைத்தவரை ஒரு பொருட்டாக எண்ணாத
காரணங்கள்.
இறையாட்சி விருந்தைச் சுவைப்பதுதான், அனைவருடைய வாழ்வின் நோக்கம். அப்படியிருக்கிறபோது,
சாதாரண காரியங்களுக்காக, வாழ்வின் நோக்கத்தைத் தவிர்ப்பது, விளையாட்டுத்தனமாக இருக்கிறது.
நமது வாழ்விலும் எது முதன்மையோ,
எது முக்கியமோ அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், பல வேளைகளில் நாம்,
செய்யத் தேவையில்லாத காரியங்களுக்கு அதிகமான முன்னுரிமையும், செய்ய வேண்டிய காரியங்களை
இரண்டாம்பட்சமாகவும், நாம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படிச்செய்வதால், நமது இழப்பு,
மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட
ஒருவர், சாக்குப்போக்குச் சொல்லி அதில் கலந்து கொள்ளாவிட்டால், அந்த மனிதன் மேல் நாம்
பரிதாபப்படுவோம். பைத்தியக்காரன் என்று சொல்வோம்.
இறுதி நாட்களில் இறைவன் தரும் விண்ணக
விருந்தில் கலந்துகொள்ளாமல் நொண்டிச் சாக்குச் சொல்வோர் இத்தகையோரே. தினமும் திருப்பலி
விருந்தில் பங்கு பெறாது காரணம் சொல்வோரும் இக்கூட்டத்தில் சேர்வர். பிறருக்கு உதவி
செய்து,ஆறுதல் அளித்து அதில் ஒரு விருந்தின் மகழ்ச்சியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தும்
அதை உதறிச் செல்வோரும் இவர்களே.
வயல் வாங்குவதும், ஏர் மாடுகள்
வாங்குவதும், திருமணம் முடிப்பதும், அன்றாட நிகழ்வுகள். சர்வ சாதாரண நிகழ்ச்சிகள்.
வாழ்வின் இத்தகு அன்றாட நிகழ்ச்சிக்காக கிடைத்தற்கரிய விருந்தை மறுப்பது அறிவுடமையாகாது.
உன்னதமான, தெய்வீக ஆசீரை அனுபவிக்க, சில உலகிற்கடுத்த காரியங்களை தியாகம் செய்வதே விவேகம்.
நாம் கலந்து கொள்ளாவிட்டால், நமக்காக
அந்த வாய்ப்பு காத்திருக்காது. கொஞ்ச காலம் கடந்து பார்த்துக்கொள்ளலாம் என்று பிந்தி
போட முடியாது. யாருக்கும் அந்த இடம் கொடுக்கப்படலாம். ஆகவே தயாராக இருப்போம். விருந்தை
உண்டு மகிழ்வோம்.
எல்லா இடத்திலும்,எந்த வேலை செய்தாலும் கடவுளின் அருளை உணர்வோம். அப்போது அவர் நமக்கு விடுக்கும் அழைப்பின் முக்கித்துவம் புரியும் .
ஆக, விண்ணக விருந்திற்கு நாம் நம்மை தயாராக்குவோம்.நம்மை தயாரிப்போம்.
No comments:
Post a Comment