Saturday, 28 November 2015

கடவுளுக்கு உகந்தவர்கள்!


நாளை எல்லா ஆலயங்களிலும் திருவருகை காலத்தின் நான்கு வார ஞாயிற்று கிழமைகளிலும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது வழக்கம்.அதாவது முதல் வாரம் நம்பிக்கையின் வாரமாகவும்,இரண்டாம் வாரம் அன்பின் வாரமாகவும்,மூன்றாம் வாரம் மகிழ்ச்சியின் வாரமாகவும் சிறப்பாக நான்காம் வாரம் அமைதியின் வாரமாகவும் இருக்க இந்த மெழுகுவர்த்திகளை ஏற்றுவோம்.அதை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் அந்த நான்கு பண்புகளின் படி நாம் வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.

நாளை திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை.



முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன:

1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம்.
2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு.
3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழிப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும்.

எனவே, விழிப்பும் செபமும் இணைந்தே செல்ல வேண்டும். தாய்த் திருச்சபையின் இந்த நினைவூட்டல் அழைப்பை முழு மனதோடு ஏற்று, எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுவோமாக!

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் என்று எபிரேயர் 13:8 ல் வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவர் ஒருநாளும் மாறாவராய் இருக்க அவர் சாயலாய் படைக்கப்பட்ட நாமும் அவ்வாறே இருந்து அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் நாமத்திற்கு மகிமை உண்டுபண்ணுவோம்.

நாளைய இரண்டாம் வாசகம்  திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து  3: 12-4: 2 படிக்க கேட்போம். அது நமக்கு உரைப்பவை ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து சகோதர அன்பிலே நிலைத்திருந்து அன்னியரை வரவேற்று விருந்தோம்பல் செய்தோமானால் நாம் நம்மை அறியாமலே வானத்தூதர்களை மகிழ்ச்சி படுத்தியவர்களாய் இருப்போம். சிறைப்பட்டவர்களோடு நாமும் சிறைப்பட்டவர்களாய் எண்ணி அவர்களுக்கு ஆறுதல் அளிப்போம்.

துன்புறுத்தப்படுகிறவர்களை மறவாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். பொருளாசையை விலக்கி நமக்கு உள்ளதே போதும் என்று நினைப்போம்.ஏனெனில் நம் ஆண்டவர் நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகவும் மாட்டேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆதலால் நாம் துணிவோடு
ஆண்டவரே எனக்கு துணை, நான் அஞ்ச மாட்டேன்:மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கலாம்.

நமக்கு கடவுளின் வார்த்தையை எடுத்து சொன்னவர்களை மறவாமல் நினைவு கூர்ந்து அவர்களின் வாழ்வின் நிறைவை எண்ணிப்பார்த்து அவர்களைப்போல் நாமும் நம்பிக்கை உடையவர்களாய் இருப்போம். ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை. வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்வோம்.

ஆகவே அவர் வழியாக எப்போதும் கடவுளுக்கு நன்றிபலி செலுத்துவோம். அவருடைய பெயரை அறிக்கையிடுவதின் மூலம் அதன் வழியாக நாம் அவருக்கு புகழ்ச்சிபலி செலுத்துகிறவர்களாய் இருப்போம். நன்மை செய்யவும் எல்லோரிடமும் பகிர்ந்து வாழவும் கற்றுக்கொள்வோம்.

இப்படி நாம் ஒவ்வொரு காரியத்திலும் அவருக்கு ஏற்ற விதத்தில்அவர் விரும்பும் காரியங்களை செய்தால் அதுவே அவருக்கு உகந்த வாழ்க்கையாக இருக்கும். அனைத்திலும் நன்னடத்தை உள்ளவர்களாய் இருந்து ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம்.

கடவுளின்  வருகையின் போது நாம் அனைவரும் கடவுளுக்கு  உகந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.அதை நிறைவேற்றுவதே கடவுளின் மக்களாகிய நமது கடமை.

இத்திருவருகைக் காலத்தில் கடமையைச் செய்வோம் கடவுளின் அருள் பெறுவோம்!

2 comments:

  1. கடமையைச் செய்வோம் கடவுளின் அருள் பெறுவோம்!

    ReplyDelete