Monday, 9 November 2015

அவரோடு !

''உங்களுக்குப் பணிக்கப்பட்டவை யாவையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்'' (லூக்கா 17:10).

நாளைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நமக்கு உரைப்பது இயேசுவோடு நாம் இருந்தால்,நடந்தால்,வாழ்ந்தால்,அவரில் நம்பிக்கை கொண்டால் நம் வாழ்வு எவ்வாறு மேம்படும் என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது.

நம் எல்லோருக்குமே அவரோடு (இயேசுவோடு) இருக்கணும்னு ஆசை இருக்கு, அதே நேரத்தில் தயக்கமும் இருக்கு.ஏன் என்று என்றைக்காவது நாம் சிந்தித்தது உண்டா ?  
 ஏன்  என்றால் எங்கே நாம் நல்லவர்களாகி விடுவோமோ என்ற பயம்.
அவைகளை எல்லாம் தூக்கி எறியவும் மேலும் நமது வேஷங்களை களையவும் இன்று நம்மை ஒரு பணியால் போன்று  வாழ அவரில்,அவருக்காக, அவரோடு கரம் பற்றி நடக்க இன்றைய வாசகங்கள் மூலம் அழைப்பு விடுக்கிறார்.

நாம் அவரோடு மன நிறைவோடு  வாழ நாளை  இயேசு சொல்லும் செய்தி சிறப்பான ஒன்று. "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்"(லூக்17'10) என்ற மனநிலை நமக்கு எப்பொழுதும் வேண்டும்.

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் எந்த மன நிலையோடு அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கவேண்டும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். பணியாளர் செய்கின்ற பணிக்கு வீட்டுத் தலைவர் நன்றி கூற வேண்டும் என்ற கடமையில்லை; ஏனென்றால் பணியாளர் தம் கடமையைத்தான் செய்கிறாரே ஒழிய அதற்கு மேலாக ஒன்றும் செய்யவில்லை. இதையே இயேசு தம் சீடர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

சீடர்களும் தங்கள் பணி என்னவென்பதை நன்கு அறிந்திருக்கவேண்டும்; கைம்மாறு கருதாமல் தங்கள் பணியைக் கடமை உணர்வோடு ஆற்ற வேண்டும். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற பணியை எல்லாரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதோடு அதற்காகவே பணி செய்ய முற்படுவர்.


தங்கள் கடமையைச் செய்யும்போது அதனால் தங்களுக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்று எதிர்பார்த்துச் செயல்படுவோர் உண்மையிலேயே நல்ல நோக்கோடு செயல்படுகின்றனர் என்று சொல்லமுடியாது. இயேசுவின் கருத்துப்படி, அவரது சீடர்கள் அவர்களிடம் ஒப்படைத்த பணியை எந்தவொரு சொந்த பலனும் எதிர்பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.

கடமையைக் கடமைக்காகவே செய்யவேண்டும் என்றதும் நாம் நம் செயல்களால் நல் விளைவுகள் நிகழும் என எதிர்பார்ப்தே தவறு என்று இயேசு சொல்லவில்லை. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' என்று இயேசு கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (காண்க: மத்தேயு 6:16).


ஆக, கடவுளுக்குப் புகழ் சேர வேண்டும் என்னும் மேலான எண்ணத்தோடு நாம் நமது கடமைகளை ஆற்றுவது மிகப் பொருத்தமே. ஆனால், பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்றோ, பிறர் நமக்கு நன்றி கூற வேண்டும் என்றோ எதிர்பார்த்து நாம் செயல்படுவது நாம் கடவுளின் பணியாளர்கள் மட்டுமே என்பதை மறுப்பதற்கு ஒப்பாகிவிடும். இத்தகைய மனநிலை தம் சீடரிடம் இருத்தலாகாது என்பதே இயேசுவின் போதனை.


 எனவே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கடமை உணர்வோடு நிறைவேற்றிய பிறகு, ''நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்'' என்று சொல்கின்ற மன நிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் (காண்க: லூக்கா 17:10).

இந்த மனநிலை நம்மிடம் இருக்குமென்றால் நாம் இயேசுவின் சீடர்களே என்பதில் பெருமைப்பட்டுக் கொள்வதில் தவறில்லை.


இன்று வாழ்க்கை நிம்மதியற்றுப் போவதற்குக் காரணம் வீணான எதிர்பார்ப்பு,அதனால் அதைத் தொடர்ந்து வரும் ஏமாற்றம், அதன் தொடர்ச்சியான விரக்தி, அதன் விளைவு உடல்நோய், மன நோய். நான் பணியாளன், தொண்டன் என்ற உணர்வு மேலோங்கிவிடுகிறது. இவை அனைத்துக்கும் இடமே இல்லை. எனவே வாழ்வில் நிறைவும் நிம்மதியும் இருக்கும்.

நாம் அவரோடு நடந்து , இறைவனின் பணியாட்கள் என்ற எண்ணம் முன்னிலையில் இருந்தால், குடும்பத்தில் மனைவி மக்களுக்கு அன்புடன் பணிசெய்வதை பெருமையென கொள்வோம். அலுவலகத்தில் உள்ளோரைச் சகோதர சகோதரியாகக் காண்போம்.அண்டை அயலாரை அன்பர்களாகக் கருதுவோம். ஆண்டவனும் பாராட்டுவான். அனைவரும் வாழ்த்துவர். மனதில் மகிழ்ச்சி நிறையும்.

நான் ஒரு பணியாள், என் கடமையை நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்குள் இருந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

இறுதியில் நாம் அவரோடுதான் நடந்தோம் என்ற திருப்தியும் இருக்கும்.

பயணத்தை தொடர்வோம் அவரோடு!

அவரோடு நடக்க நான் ரெடி.அப்போ நீங்களும் ரெடிதானே!

உங்கள் அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment