Friday, 13 November 2015

குழந்தைகளாகி கைகுலுக்குவோம்!

எல்லோரும் வீட்டில் பரபரப்பாக ஏதோ வேலைச் செய்து கொண்டிருந்தார்கள் .அந்த வீட்டின் செல்லக்குட்டியாகக் கருதப்பட்ட ஆறு வயது சிறுவனும் ஏதோ பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

          விடுமுறை நாள் என்பதால் அவரவர் விருப்பம் போல் சில வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்த அந்தத் தாய் தன் சின்ன மகன் அவ்வப்போது வெளியே போவதும் வருவதுமாக ஏதோ செய்வதைக் கவனித்தாள். ஒரு மணி நேரமாக அந்தக் குழந்தை இப்படி என்ன செய்கிறான்? என்று காணும் ஆர்வத்தோடு வேலைகளை முடித்து வந்தாள் தாய்.


          சிறுவனுக்குத் தெரியாமல் மறைவில் அவனைக் கவனித்தாள். அவன் தன் பிஞ்சுக் கரங்களில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வீட்டின் பின்புறம் மெதுவாக நடந்து சென்றான். தன் கையில் இருக்கும் தண்ணீர் சிந்திவிடக்கூடாது என்று கவனமாக, மிக மெதுவாக நடந்தான். அவனுக்குத் தெரியாமல் தாயும் பின் தொடர்ந்தாள்.

          கையிலுருந்த தண்ணீரை நேராக வீட்டின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியை நோக்கி கொண்டு சென்றான். தாய்க்குப் பதற்றமாக இருந்தது. சிறுவனுக்கு எவ்விதமான அச்சமும் இல்லை. அவனோடு ஒப்பிடும்போது கன்றுக்குட்டி பெரிய உருவமாக நின்றது. 

சிறுவன் சற்றும் பயப்படாமல் நேராகச் சென்று அதன் வாயில் தண்ணீரை ஊற்றினான். தாகத்தோடு அங்கு வந்து நின்ற அந்தக் கன்றுக்குட்டிக்கு ஒரு மணி நேரமாக இச்சிறுவன் தண்ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் தந்து கொண்டிருப்பது தாய்க்குப்  புரிந்தது.

          அந்தக் கன்றும் அவன் கையிலுருந்த நீரை நக்கிக் குடித்தது. சிறுவன் சளைக்காமல் மேலும் தண்ணீர் தருவதற்காக வீட்டை நோக்கி நடந்தான். தாயும் தொடர்ந்தாள்.
          சிறுவன் குள்ளமாக இருந்ததால் தண்ணீரைக் குழாயிலிருந்து திறந்து பெற முடியவில்லை. ஆனால், அங்கே ஒரு குழியில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. தன் பிஞ்சுக் கரங்களால் அதைப் பிடித்துக் கொண்டு நின்றான். 

அவன் இருகரங்களில் அது நிரம்புவதற்கு பத்து நிமிடங்கள் எடுத்தது. பொறுமையாக நின்ற அவன் மீண்டும் மெதுவாக கன்றுக் குட்டியை நோக்கி நடந்தான். கன்றுக் குட்டிக்கு நீரை வழங்கிவிட்டுத் திரும்பியபோது அவன் தாய் அவனை அன்போடு நோக்கினாள்.


          அந்தச் சிறுவன் பயந்துவிட்டு, "அம்மா, நான் தண்ணீரை வீணாக்கவில்லை. வீணாகிப் போகும்  தண்ணீரைத் தான் இந்தக் கன்றுக்குட்டிக்கு குடிக்கக் கொடுத்தேன்." என்று சொன்னான். 

சொல்லி முடித்த போது பயத்தில் அவன் கண்களில் கண்ணீர் ஓடியது. அவனை அணைத்துக் கொண்ட தாயின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் ஓடியது. தன்மகனை மெச்சிய தாய் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

          இந்தச் சம்பவம் போன்ற குழந்தைகளின் நினைவுகள் நமது வாழ்விலும், நம் குழந்தைகளின்  வாழ்விலும் பல நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

          ஒரு குழந்தை வளருகின்ற போது அதன் அத்தனை செயல்களும் தெய்வீகத் தன்மையால் தான் நிரம்பியுயள்ளது .நம் வீட்டில் உள்ள குழந்தைகள் நம் வீட்டில் தெய்வத்தின்  இருப்பினையே நமக்குச் சொல்லுகின்றன. எந்த நேரமும், எதையாவது செய்து கொண்டு,சிந்தித்துக் கொண்டு செயல்படும் குழந்தைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் அர்த்தத்தோடு வாழ்கின்றன. அவர்களுக்கு களைப்பை உணர்வதற்கோ , அச்சப்படுவதற்கோ தெரியவில்லை.

          ஒரு ஊரில் பயில்வான் ஒருவன் எல்லோரையும் மிரட்டும் வகையில் ஆணவமாக அலைந்தான். பலசாலி என்பதால் அவனிடம் எல்லோரும் பயப்பட வேண்டியிருந்தது. இதைப் பயன்படுத்தி மக்களை அவன் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் மக்கள் இவன் தொல்லை பொறுக்காமல் அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவரிடம் சொன்னார்கள். பெரியவர் இவனுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார்.
          எனவே,அவனைச் சந்திப்பதற்காக அவர் சென்றார். பெரியவரைக் கண்டதும் ஏளனமாக "என்ன பெரியவரே , ஏதாவது உதவி வேண்டுமா?" என்று நக்கலாகக் கேட்டான்.பெரியவர் அவனிடம் "தம்பி நீ ரொம்பப் பலசாலி என்று கேள்விப்பட்டேன். அதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனாலும் நீ என் பேரன் ஒருவன் செய்யும் செயல்களைச் செய்ய முடியாது என்று நான் கருதுகிறேன்" என்று கூறினார்.

          பயில்வான் பெரியவரிடம் "பரியவரே, என்னைக் கண்டு ஊரே பயப்படுகிறது. ஒரு சின்னப் பையன் செய்வதை என்னால் செய்ய முடியாது என்று கூறி என்னை அவமானப்படுத்த வேண்டாம். உம்பேரன் செய்யும் அத்தனை செயல்களையும் நான்  செய்வேன்" என்று சபதம் போட்டான்.

          செய்தி ஊருக்கும் தெரிந்துவிட்டது. மறுநாள் அந்தப் பயில்வான் பெரியவர் வீட்டிற்கு வந்தான். பெரியவரின் பேரன் தூங்கி எழுந்ததும் அவனது செயல்களை அப்படியே பயில்வான் செய்ய வேண்டும் என்னும் ஏற்பாடு. பேரன் தூங்கி எழுந்தான். வேகமாக ஓடி ஒரு பொருளைத் தூக்கினான்.அதை  எடுத்துக் கொண்டு பின்புறம் ஓடினான். 

பயில்வானும் அவன் செய்வதையெல்லாம் செய்ய முயன்றான். அரைமணி நேரம் ஆகியிருக்காது , பயில்வான் பெரியவரின் காலில் வந்து விழுந்தான். "யா என்னை மன்னியுங்கள். நீங்கள் சொன்னது உண்மைதான். இந்தக் குழந்தையின் சுறுசுறுப்புக்கு முன்னால் நான் வெறும் சாதாரண மனிதன், என் தலைக்கனம் இனி தலை காட்டாது" என்று கூறிச் சென்றான்.
          ஒரு குழந்தை தனது வாழ்வில் குழந்தைத் தன்மையை விருப்பு, வெறுப்பு இன்றிக் காட்டுகின்றது. அதனால்தான் அக்குழந்தையின் செயலில், வாழ்வில் ஒவ்வொரு நொடியும் முழுமை இருக்கின்றது.

          இன்று நம்மில் பலரும் வயது அதிகமாகிடும் போது இறுகிய தன்மை கொண்டவர்களாக மாறி விடுகின்றோம். உண்மையில் சிரிப்பு வந்தாலும் சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை இறுக்கிக் கொள்கிறார்கள் சில மனிதர்கள்.  

மனம் விட்டுப் பாராட்ட வேண்டும் என்று  மனம் வருகின்றபோதும் கூட அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டு அடங்கிப் போய்விடுகிறார்கள். தவறு என்று தெரிந்தும் அதைச் சொல்லிவிடத் தயங்கி ஒதுங்கி விடுகின்றார்கள். மொத்தத்தில் வயது ஏற ஏற நமது குழந்தைத்தனமான மனதுக்கு பெரிய கடிவாளம் போட்டு விடுகிறோம். வெளியில் குழந்தைத் தனத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் வந்தாலும் கடிவாளம் நம்மைத் தடுத்து விடுகின்றது.

          ஒரு சில நாட்களுக்கு முன்னால் ஆசிரியர்கள் நிகழ்த்திய ஒரு நாட்டிய நிகழ்வினைக் காண நேர்ந்தது. அதே விழாவில் குழந்தைகளும் ஆடினார்கள். மிகப் பெரிய வித்தியாசம் காண முடிந்ததது. இப்படியெல்லாம் ஆட வேண்டும் இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சித் தந்தாலும் குழந்தைகளின் நடனத்தில்தான் நடனத்தை பார்க்க முடிந்தது. 

ஆசிரியர்களின் நடனத்தில் ஒருவிதமான போலியான நடனத்தை காண முடிந்தது. காரணம் மனம் குழந்தைத்தனமாக அந்த நடனத்தில் ஈடுபடாமல் செய்துவிட்டது.

          குழந்தைகளைப்போல பாடவும், ஆடவும், ரசிக்கவும், சிரிக்கவும், புசிக்கவும் நாம் முயற்சி செய்வதும் , அவ்வப்போது இத்தகைய நிகழ்வுகளும் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதும் மிகவும் நல்லது. "இறைவா ஒவ்வொரு நாளும் என்னை ஒரு குழந்தைப் போலச் செயல்பட சக்தி கொடு" என்று கேட்க வேண்டும். சில கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சிகளுக்குச் செல்லும் போது அதில் நடத்தப்படும் விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் முழுமையாக ஒரு குழந்தையைப் போல பங்கெடுக்க வேண்டும். 

அங்கே அமர்ந்து கொண்டு நமது பதவியையும், பட்டத்தையும், பொறுப்பையும் நினைத்துக் கொண்டிருக்க கூடாது. மாறாக அந்த இடத்தில் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், உள்ளே அழுத்தப்பட்டுள்ள உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கும் தக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

          பணிகளில் மூழ்கிக் கிடக்கும் பல மனிதர்களுக்கு இந்தக் குழந்தைத்தனமான விளையாட்டுகள், சூழ்நிலைகள் தான் மிகப்பெரிய மகிழ்ச்சி மந்திரங்கள். சுற்றுலாக்களும்  ,ஆலய தரிசனங்களும் கூட  இத்தகைய மனநிலைக்கு உதவலாம்.

          ஒருவர் கடவுள் நடத்திய மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே முதலில் அந்த நபருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த நபருக்கு இரத்த அழுத்தம் பார்க்கப்பட்டது. மற்றவர்களோடு  புரிந்துகொள்ளும் தன்மையில்லாததால் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்பட்டது. 

அதிக   எதிர்பார்ப்பு மற்றும் மன உளைச்சலால் உடலின் வெப்பத்தை வெப்பமானி அதிகமாகக் காட்டியது. இதயத்தை, அதன் அதிர்வுகளை ஆய்வு செய்த போது “அன்பு” என்னும் ஆயுதத்தால் நிறைய  உள்முகச் சிகிச்சை செய்ய  வேண்டியிருந்தது. இதயத்தின் பல பகுதிகள் தனிமையின் காரணமாகவும், உள்ளுக்குள்ளே குமைவதாலும் அடைபட்டுக்கிடந்தன.

          சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்ப நபர்களோடு இணைந்து நடக்க முடியாததால் அடுத்ததாக எலும்புகளுக்கான சிகிச்சை நிபுணரைக் காண  வேண்டியிருந்தது. நண்பர்களோடு மகிழ்சியைப் பகிர்ந்து கொள்ளாததாலும், பிறரை அணைத்துக்   கொள்ள முடியாதபடி மூட்டுகளில்  வலியும், கைகளை அசைக்க இயலாதபடி இறுக்கமும் தென்பட்டது. 

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சிந்திக்கும் தொலைநோக்குப் பார்வையில்லாமல் சிறிய வட்டத்தில் கவனத்தை செலுத்தினதால்  கிட்டப்பார்வை மட்டுமே செயல்பட்டது. 

எனவே தூரப்பார்வைக்கு கண் சிகிச்சை தேவைப்பட்டது. இப்படிப் பலப் பிரச்சனைகளோடு காதும் சரியாக கேட்கவில்லை என்று அந்த நபர் சொன்னபோது, "நீர் பல ஆண்டுகளாகக் கடவுளின் வார்த்தைகளைக் கேட்பதை நிறுத்தி விட்டீர். எனவே உம காதுகளும் அடைபட்டு போய்விட்டன"  என்று காதுகளைப் பார்த்த நிபுணர் சொல்லிவிட்டார்.

          ஆனால்,எல்லாவற்றையும் பரிசோதித்து அதற்கான மருந்துகளையும் தந்துவிட்ட கடவுள்  எந்தவிதமான மருத்துவக் கட்டணமும் வாங்கவில்லை.  இவற்றையெல்லம் இலவசமாக செய்து விட்டார்.

          அருமையான மருத்துவமனை, ஆலயங்களில் கடவுளின் தரிசனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. மனதைக் குழந்தைகள் மனது போல மாற்றும் மந்திர சக்தி படைத்த மருத்துவமனைகளாக தெய்வீக சந்நிதிகள் உள்ளன. தியானமும், யோகமும், நல்ல நூல்களை வாசிக்கும் போது பெறுகின்ற வாசிப்பு தியானமும் நம்முள் இருக்கும் குழந்தைத்தன்மையை நமக்கு விளக்கி சொல்லும் நல்ல வாய்ப்புகள்.

வாழ்க்கை என்பது தெய்வீக நிலை நோக்கிய ஒரு பயணம்."குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்ற கூற்றும் நம்மை இந்தச் சிந்தனைக்கு இட்டுச் செல்கின்றது. "குழந்தைகள் தினம்" குழந்தைகள் மூலமாக நம்மைக் குதூகலப்படுதிடவும், சிந்திக்க வைக்கவும், குழந்தைகள் போல வெறுப்பின்றிக் குலுங்கிக் சிரிக்கவும் நம்மை ஈர்க்கட்டும்.

வாருங்கள், குழந்தைகளாகி, கைகுலுக்குவோம்!.

குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள்! 

No comments:

Post a Comment