Monday, 16 November 2015

சிறிய தொடக்கம் பெரிய முடிவு!

''இயேசு...'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்;
இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார்'' (லூக்கா 19:5).

 நாளைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம்  சக்கேயுவின் வாழ்வு எவ்வாறு  இயேசுவின் வருகையால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது என்று . இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்ற சக்கேயு வெறும் விருந்து மட்டும் கொடுக்கவில்லை, மாறாகத் தன்னையே கடவுளின் கைகளில் ஒப்படைக்கிறார். தன்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கிறார்.

தான் செய்த தவறுகளை ஏற்கிறார். வரிதண்டும் துறையில் பெரிய பொறுப்பு வகித்த சக்கேயு மக்களிடமிருந்து அநியாயமாகக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட முன்வருகிறார். ஏழைகளுக்கு தன் செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கத் தயாராகிறார். இயேசுவைச் சந்தித்த சக்கேயு பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு வருகின்ற புதிய மனிதராக மாறிவிடுகிறார்.

இதுவே நம் வாழ்விலும் நிகழ வேண்டும். இயேசுவை நாம் சந்திக்கின்ற தருணங்கள் ஏராளம் உண்டு. நற்கருணை விருந்தில் பங்கேற்பது இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்பதுதான்.

பிற மனிதரிடத்தில் நாம் இயேசுவைக் காண்கிறோம். நம் உள்ளத்தில் அவருடைய உடனிருப்பை உணர்கின்றோம். இந்த அனுபவம் நம்மை மாற்ற வேண்டும். அப்போது இயேசு கொணர்கின்ற மீட்பிலிருந்து பிறக்கின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தையும் வாழ்வையும் நிரப்புவது உறுதி.

ஒரு சிறிய நல்;ல தொடக்கம் மிகப்பெரிய முடிவில் கொண்டு சேர்க்கும். அந்த பணக்கார சக்கேயுவுக்கும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. பணம் பாவத்திற்கு கொண்டு சென்று நிம்மதியைப் பறித்தது.இயேசுவில் மட்டுமே அதைப் பெறமுடியும் என்பதை உணர்ந்த சக்கேயு அதற்கான முயற்சியில் இறங்கினார்.

இம் முயற்சியில் அவர் கொடுத்த சிறிய தொடக்கம், இயேசு வரும்வழி பார்த்து, நேரம் பார்த்து அங்கே அமர்ந்து கொண்டதுதான். இயேசுவின் பார்வையில் படவேண்டும் என்பதற்காக, தன் கௌரவம் பாராது அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசுவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டத்தின் முன்னே ஓடவும் அந்த பெரிய மனிதர் சக்கேயு தயங்கவில்லை.

இச்சிறிய தொடக்கம் மனமாற்றம், மன்னிப்பு, மகிழ்ச்சி, விருந்து,மீட்பு என்றெல்லாம் விரிவடைந்து இறுதியில் "ஆபிரகாமின் மகன்" என்னும் உன்னத நிலையை அடைகிறது. நம் வாழ்விலும் நாம் கொடுக்கும் சில நல்ல தொடக்கங்கள் ஆச்சரியமான முடிவைத் தரும்.

இயேசு வரும் பாதையில் நான் அமர்ந்து கொள்ளும் விதத்தில் தினமும் திருப்பலியில் கலந்து கொள்வேன், தினமும் விவிலியத்திலிருந்து ஒரு பகுதி வாசிப்பேன் என தீர்மானித்து நான் எடுக்கும் சிறு தொடக்கம் சொல்ல முடியா பெருங்கொடைகளைக் கொண்டு குவிக்கும்.

1 comment:

  1. Good thought Kalai "Every Good beginning always have a good end" as Zechaue's meeting with Jesus transformed him completely, as also our meeting with Jesus everyday in the Eucharist brings change in abundance. Well thought.

    ReplyDelete