Thursday, 12 November 2015

எப்போதும் இறைவனோடு!

''தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்;
தம் உயிரை இழப்பவரோ அதைத் காத்துக்கொள்வர்'' (லூக்கா 17:33).


 இயேசு தாம் அறிவித்த இறையாட்சியின் பொருட்டு சீடர்கள் தம் உயிரையும் இழக்கத் தயங்கலாகாது என்று போதித்தார். ஒன்றை நாம் அடைய விரும்பும்போது இன்னொன்றை இழக்க நேரிடுகிறது. வளரும் பருவத்தில் ஒரு சிறுகுழந்தை தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிச் செல்ல தயாராக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், முழு மனிதராக வளர வேண்டும் என்றால் குழந்தைப் பருவ நிலையிலேயே தேங்கிப் போய்விடலாகாது. அடுத்த பருவ வளர்ச்சியும் அப்படியே. இளமைப் பருவத்தைத் தாண்டி முதிர் பருவத்தை அடைய வேண்டும் என்றால் முன்னைய பருவத்தை இழக்க வேண்டும். ஆக, புதிய ஒரு நிலையை அடைய அரும்புவோர் பழைய நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். இது இயற்கை நியதி.

 மனிதர் தம் உயிரின்மீது பற்றுக் கொண்டிருப்பது தவறு அல்ல. கடவுள் படைத்த படைப்புகள் அனைத்துமே கடவுள் தங்களுக்கு அளித்துள்ள கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். மனித உயிர் என்பது கடவுள் நமக்கு வழங்குகின்ற அடிப்படையான கொடை. உயிர் இருந்தால்தான் இவ்வுலகில் நாம் நம்மைக் கவனித்துப் பேணி, நலமான வாழ்வு வாழ இயலும். ஆகவே தம் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் விருப்பம் எல்லா மனிதருக்கும் உண்டு.

உலக சமயங்களும் இவ்வாறே மனித வாழ்க்கையின் நிலையாத் தன்மை பற்றிச் சிந்தித்துள்ளன. நம் உயிர் நமக்குக் கடவுள் தந்த ஒப்புயர்வற்ற, அடிப்படையான கொடை. ஆனால் ஒரு நாள் நம் உயிர் நம்மைவிட்டுப் பிரிந்துபோகும். இது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. இருந்தாலும், பிறப்பு ஒரு மறைபொருள் என்றால் இறப்பு அதைவிடவும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் இயேசு நம் உயிரின் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துகிறார்.

உலக வாழ்க்கை மனிதருக்கு அறுதியான வாழ்க்கையல்ல, மாறாக, இவ்வுலக வாழ்க்கையைத் தாண்டி நிலைகொள்கின்ற அழியா வாழ்வு ஒன்று உள்ளது. இவ்வுண்மையை நாம் உணர்ந்தால் மனித உயிரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கவலை நம்மை ஆட்டிப்படைக்க இயலாது. மாறாக, நாம் கொடையாகப் பெற்றுக்கொண்ட உயிர் என்னும் கருவூலத்தைக் கடவுளுக்கே காணிக்கையாக்கிட நாம் அழைக்கப்படுகிறோம். இக்காணிக்கையின் பொருள் என்ன? சிலர் தம் வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வர்;

வேறு சிலர் தம் சாவால் கிறிஸ்துவை அறிவிப்பார்கள். எவ்வாறு சான்றுபகர்ந்தாலும் சரி, நம் வாழ்க்கையின் முதன்மைகள் முறையாக இருக்கவேண்டும். கடவுளுக்கு முதலிடம் அளித்தால் நம் உயிர் கடவுளிடமிருந்து வந்து, கடவுளில் நிலைகொண்டு, கடவுளை நோக்கியே சென்றிட படைக்கப்பட்டது என நாம் உணர்ந்துகொள்வோம். அப்போது கடவுளுக்காக நம் உயிரை இழப்பது அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்குச் சமமாகும்.

வாழ்க்கை உண்பதும் குடிப்பதும் பெண் கொள்வதும் கொடுப்பதும் அல்ல. நோவாவின் காலத்தில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து அனைவரையும் அழித்தபோது இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். (தொ.நூ 6'5-8) உடலின்பம் ஒன்றே வாழ்வின் இலக்காக இருந்ததால், பாவம் பெருகியது. ஆன்மீகம் மங்கியது. சோதோம் கொமோரா நெருப்பு தீயால் எரிந்து அழிய காரணமும் பாவமே. (தொ.நூ 17'20)

பாவத்திற்கு தண்டனை உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாவத்துக்கு தண்டனை உடனுக்குடனும் உண்டு, உலக முடிவில் மானிட மகன் அரசுரிமையோடு நடுவராக வரும்போதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. "மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்"(லூக் 17'30)

தண்டனையிலிருந்து தப்பும் பொருட்டு அங்கும் இங்கும் ஓட வேண்டாம். உயிரைக் காத்துக்கொள்ள அலைய வேண்டாம். வாழும்போது அன்றாடம் ஆன்மாவைக் காத்துக்கொள்ளும்படி வாழ்ந்து வாருங்கள். தினமும் பாவத்தை தவிர்த்து, இறை உறவில் வாழ்வை அமைத்துக் கொள்வோம். இறுதி தீர்;ப்பு நாளில் தண்டனைக்குப் பயப்படத் தேவையில்லை.

பாவம் செய்யும்போது ஆன்ம உயிர் செத்துவிடுகிறது. நடை பிணமாக அத்தகையோர் அலைவர். அவர்களைச் சுற்றி; கழுகுகள் வட்டமிடுவதால்,வாழ்வு இருண்டதாகவே இருக்கும். தண்டனையிலிருந்து தப்பிட, வாழும்போது பாவத்தை தவிர்த்து வாழ்வோம்.

No comments:

Post a Comment