Friday, 27 November 2015

செபிப்போம்! தப்பிப்போம்!

''இயேசு...'எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்றார்'' (லூக்கா 21:36)



 மானிட மகன் வரும் நாள் இதுதான் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூறவியலாது. எனவே மக்கள் விழிப்பாயிருக்க வேண்டும் என்று இயேசு கேட்டார்.

இச்செய்தியை ''ஒத்தமை நற்செய்தி'' நூலாசிரியர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் குறிப்பிடுகின்றனர். ஆனால் லூக்கா ''விழிப்பாயிருங்கள்'' என்பதோடு ''மன்றாடுங்கள்'' என்றொரு சொல்லையும் சேர்த்துக் கூறுகின்றார். பொதுவாகவே, லூக்கா நற்செய்தியில் ''இறைவேண்டல்'' பற்றிய குறிப்புகள் பல உண்டு.

அக்குறிப்புகளை இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். முதன்முதலில், இறைவேண்டல் இயேசுவின் பணிவாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இரண்டாவது, இயேசுவைப் பின்செல்வோர் இறைவேண்டலில் நிலைத்திருக்க வேண்டும் என இயேசு கேட்கிறார்.

''எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' (லூக் 21:36) என இயேசு கூறுவதை ''இடைவிடாமல் இறைவேண்டல் செய்யுங்கள்'' எனவும் பொருள்கொள்ளலாம் (காண்க: லூக் 18:1-8). இறுதிக் காலம் வரவிருக்கிறது என்பது உறுதியாயிருப்பதால் சீடர்கள் இறைவேண்டலை ஒருபோதும் கைவிடலாகாது.

இறுதிக் காலம் என்பது நிறைவின் காலம் கூட. ஏற்கெனவே தொடங்கிவிட்ட இறையாட்சி இறுதிக் காலத்தில் முழுமை பெறும். எனவே, அந்த முழுமையை அடைவதற்கும், அது விரைவில் வருவதற்கும் இறைவேண்டல் தேவை என்பது கருத்து.

 சில வேளைகளில் நமது மன்றாட்டுக்கள் நம் வாழ்வின் அன்றாடத் தேவைகளை இறைவனிடம் கேட்பதோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய மன்றாட்டு தவறு என இயேசு கூறவில்லை. ''எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்'' என நம் வானகத் தந்தையை நோக்கி நாம் மன்றாட வேண்டும் என இயேசுவே நமக்குக் கற்பித்துள்ளார் (காண்க: லூக் 11:3). இருந்தாலும், இறைவேண்டல் என்பது நம் வாழ்க்கையின் நிறைவு பற்றியும் அமைய வேண்டும்.

 அதாவது, இறுதிக் காலத்தில் நாம் இறைவனோடு நிலைவாழ்வு பெற்று மகிழவேண்டும் என்பதும் நம் மன்றாட்டின் உள்ளடக்கமாக இருத்தல் வேண்டும். நிறைவை நோக்கிச் செல்லும் நாம் அந்த நிறைவு நமக்கும் பிறருக்கும் கிடைக்கவேண்டும் என மன்றாடும்போது கடவுளின் ஆட்சி மலர வேண்டும் என்பதே அம்மன்றாட்டின் உள்ளடக்கமாக அமையும். ''உமது ஆட்சி வருக!'' என்னும் மன்றாட்டு நம் இதயத்திலிருந்து எழும்போது நாம் உண்மையிலேயே ''விழிப்பாயிருந்து மன்றாடுகின்ற'' மக்களாக இருப்போம்.

மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு விறுவிறுப்பு கொடுப்பது உயிர்ப்பும் இயேசுவின் வருகையும். இந்த இரண்டும் இல்லையேல் வாழ்க்கை மந்தம் அடைந்துவிடும். கண்ணியில் சிக்கிய வாழ்வாகிவிடும். குடி வெறி, களியாட்டம், சுகபோக வாழ்க்கை என்னும் கண்ணியில் சிக்கி இவ்வுலக வாழ்வும் சிக்கலாகிவிடும், மறு வாழ்வும் மறுக்கப்பட்டுவிடும்.

இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள, இயேசு வாழ்ந்த வாழ்க்கைமுறை நமக்கு உதவுகிறது. நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக்21'36) என்பது இயேசுவின் எச்சரிக்கை.

அவரது அன்றாட வாழ்க்கை திட்டம் நமக்கு ஒரு முன்வரைவு. பகல் நேரங்களில் கோவிலில் கற்பிக்கிறார். வீதிகளிலும் வீடுகளிலும் நலிவுற்ற மக்களைச் சந்திக்கிறார். இரவு நேரங்களில் மலைக்குச் சென்று தந்தையோடு தங்குகிறார். செபிக்கிறார். இவ்வாறு எப்போதும் செபத்தில் தந்தை இறைவனோடு வாழ்ந்த வாழ்க்கைமுறை, இறுதி நாளில், மானிட மகனின் தீர்ப்பின் நாளில், தண்டனை அனைத்திலிருந்தும் தப்பிக்க வல்லவராகும் வலிமையை நமக்கு வழங்கும்.

செபிப்போம், எல்லா தண்டனைகளிலிருந்தும் தப்பிப்போம்.

No comments:

Post a Comment