Wednesday, 4 November 2015

வாழ்க்கை நிமிடங்களால் ஆனது!



          மாவீரன் நெப்போலியன் தன் நண்பர்களிடம் அடிக்கடிச் சொல்லும் கூற்று: "என்னிடமிருந்து எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், என் நேரத்தை மட்டும் கேட்காதீர்கள் " என்பதே. 

காலமே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதைச் சாதனைப் படைத்தவர்கள்  உணர்ந்திருந்தார்கள்.

          புத்தர் தன் சீடர்களிடம் "வாழ்க்கை என்றால் என்ன? என்று கேட்டார். சிலர் முப்பது ஆண்டுகள் இளமையாக வாழ்வது என்றார்கள். சிலர் எழுபது ஆண்டுகள் நலமோடு வாழ்வது என்றார்கள் . இன்னும் சிலர் நூறு ஆண்டுகள் உறுதியோடு வாழ்வது என்றார்கள். 

புத்தர் சொன்னார் "வாழ்க்கை என்பது ஒரு மூச்சு -அது ஒவ்வொரு நொடியிலும் மறைத்தும், பிறந்தும் கொண்டிருக்கிறது " என்று சொன்னார். அதாவது ஒரு மனிதன் மூச்சு நின்று விட்டால் உயிர் அடங்கி விடுகின்றது.

          ஒரு நிமிடம் வாயினை மூடிவிட்டு நாசித்துவாரங்களையும்  கைகளால் மூடிவிட்டுப் பாருங்கள். முடியவில்லை, மூச்சு முட்டுகிறது. உயிர்ச்சத்தைச் தேடி இந்த உடலும், உயிரும் ஓடுகின்றது என்பது நமக்குப் புரியும். 

அப்படியானால் நாம் வாழக்கூடிய ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கடந்து செல்லும் நேரங்களில் நாம் எப்படி வாழ்கின்றோம்? என்பதே நமது வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார் புத்தர்.

நேர நிர்வாகம்:
          ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்துள்ள  அரிய பொக்கிஷம் தான் நேரம். இந்த நேரம் என்னும் மணித்துளிகளை நாம் செலவு செய்வதை தவிர்த்து முதலீடு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நேரத்தால் ஆனது என்ற சொற்றொடர் இதைத் தான் உணர்த்துகின்றது.

          ஓர் ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் அதைச் செலவுச்  செய்ய ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால், இந்த ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து லாபம் பார்க்க சிந்தனை, செயலாக்கம் என்று பல விசயங்கள் தேவை. அதேசமயம் இந்த ஆயிரம் ரூபாய் பல மடங்கு பெருகுவதன் மூலம் நமது வாழ்க்கைத் தரமும் உயர்கின்றது.

          இளைர்கள் பலர் நேரத்தை பல்வேறு அர்த்தமற்ற காரியங்களில் செலவு செய்வது இன்று அதிகரித்து வருகின்றது. பொழுது போகவில்லை, போரடிக்கிறது என்று கூறும் இளைனிடம் இலக்குகள் இல்லை. வாழ்க்கையில் உயர்ந்து சாதிக்கத் துடிக்கும் ஆர்வம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

களியாட்டங்களிலும் , திரையரங்குகளிலும் இலவசமாகச் சலுகைகளைப் பெறுவதிலும், பணத்தை வாங்கிக் கொண்டு ஒவ்வொரு கட்சியாக மாறி மாறி ஓட்டு போட்டுச் சுற்றுவதிலும் காலத்தை வீணடிக்கிறார்கள் பலர்.

உழைக்க நேரம்:
          நோபல் பரிசு பெற்ற ஒருவரைப் பாராட்டுவதற்காக மிகப்பெரிய கூட்டம் ஏற்பாடாயிருந்தது . கடுமையான உழைப்பின் மூலம் மருத்துவத் துறையில் சாதனைப்  படைத்தவருக்கு தான் பாராட்டு. அரங்கம் நிரம்பி வழிந்தது. சிறப்பு விருந்தினர் மேடைக்கு வந்தார். கரவொலிகளும் வாழ்த்துகளும் அவரை நோக்கித் தரப்பட்டன. ஒலிப்பெருக்கி முன் பேச வந்தார் நோபல் பரிசு பெற்றவர். கூட்டம் அமைதியுடன் அவர் சொல்வதைக் கேட்க காத்திருந்தது, "நண்பர்களே உங்களில் யாரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறீர்கள்" என்று கேட்டார். 

அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைகளைத்  தூக்கினார்கள். "அப்படியானால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இப்போதே கிளம்பிச் சென்று நேரத்தை வீணடிக்காமல் உழையுங்கள். உழைப்பினால் மட்டுமே வெற்றி பெற முடியும் " என்று  கூறி தன் பேச்சினை முடித்துக் கொண்டார். 

அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக ஆனால், அர்த்தமுள்ள தூண்டுதலூடு கலைந்து சென்றார்கள். உழைப்பிற்கு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் விரும்புகின்ற எல்லாம் உழைப்பினால் மட்டுமே வாய்க்கப் பெறுகின்றது. உழைக்காத சோம்பேறிகள் எதையும் சாதிக்க முடியாது. அவர்கள் வெற்றியாளர்களாக வலம் வரவும் முடியாது.

சிந்திக்க நேரம்:
          இரண்டு தொழிலதிபர்கள் ஒரு சனிக்கிழமை பகலில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் ஒரு புதிய தொழில் பற்றிய விவாதத்தில் சில மணி நேரங்கள் ஈடுபட்டார்கள். இன்னும் நிறைய பேசி முடிவுச் செய்ய வேண்டியிருந்ததால் ஒருவர் மற்றவரிடம் இன்று நமது அலுவலக பணி முடிந்ததும், ஏழு மணிக்கு மேல் மீண்டும் சந்தித்து பேசலாமா? என்று கேட்டார். அடுத்தவர் அமைதியாக "முடியாது ,காரணம் இன்று சனிக்கிழமை.

 ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை நான் சிந்திக்கும் நேரம். அடுத்த வாரம் முழுமைக்குமாக நான் திட்டமிட்ட மூன்று மணி நேரங்களைச் சிந்திக்க பயன்படுத்துகிறேன். அதனால் நான் வேறு எந்த காரியத்திலும் ஈடுபட முடியாது" என்று தீர்மானமாக சொல்லி விட்டார்.

          தங்களது செயல்களைச் சிறப்பாக கொண்டுச் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. சிந்திக்காமல் செயல்படுவது ஆபத்தானது என்பதால் அதற்கான முக்கியத்துவம் தருகின்ற போது நம்முடைய திட்டங்கள் சரியான வகையில் நிறைவடைகின்றன.

அன்பு செய்ய நேரம்:
          ஒரு வயதான தந்தை தன் மகனை விட்டு வெகு தொலைவில் வசித்து வந்தார். மகன் மாதம் ஒரு முறை முதலில் தந்தையைச் சந்திக்க வருவார்.

          சில மாதங்களான பின்பு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்து தந்தையைக் சந்திக்க சென்றார். காரணம், அவரது வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தார்.   இச்சமயம் தந்தைக்கு மகனைப் பார்க்க வேண்டும் என்பது போல் இருந்தது. 

மகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மகனின் மனைவி  அவரது வேலைப் பளுவைப் பற்றிப் பேசினாள். தற்போது நிறைய வேலைகள் உள்ளதால் இந்த மாதமும் அடுத்த மாதமும் வருவது கடினம் என்றாள். தந்தை தன் மகனுடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இணைப்பு மகனுக்கு தரப்பட்டது.

          தந்தை மகனிடம் "உன்னால் இப்போது என்னை வந்து சந்திக்க முடியவில்லை என்று உன் மனைவி சொன்னாள். ஒரு வேளை அடுத்த மாதத்திற்குள் நான் இறந்து விட்டால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வாயா? என்று கேட்டார்”.  மகன், உடனே ,"அப்போது நான் கட்டாயம் அங்கிருப்பேன். ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? “ என்று பேசினார்.   

உடனே அவரது தந்தை "நீ என் இறந்தச் சடங்குகளுக்கு வருவதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால், நான் உன்னை இப்போது பார்க்க வேண்டும். எனவே, வந்து என்னைப் பார்த்துச் செல் " என்றாராம்.  

          மனதை நெகிழச் செய்யும் இச்சம்பவம் நேரமில்லை நேரமில்லை என்று சொல்லி நாம் அன்பு செய்பவர்களைப் புறக்கணிக்கும் அளவிற்க்குச் சொல்லக்  கூடாது என்பதை காட்டுகின்றது.  அன்பு செய்வதற்கும் நம் நேரத்தை கண்டறிய வேண்டும். ஏனெனில் வாழ்க்கையின் மிகுந்த அர்த்தத்தை இங்கு தான் கண்டு கொள்ள முடியும்.

முக்கியத்துவம் எதற்காக?
          பல்வேறு வேலைகளும் சுமையாக அழுத்தும்போது எந்த வேலையை முன்னுரிமை கொடுத்துச் செய்வது? என்று குழப்பம் ஏற்படுகின்றது. எந்த வேலை மிகவும் அவசரமும், அவசியமும் ஆனது என்பதைக் கண்டு கொண்டுதான் அதற்கு முன்னுரிமைத் தர  வேண்டும். 

 கையில் நூறு ரூபாய், ந்நூறு ரூபாய் , பத்து ரூபாய் என்று கட்டுகள் வைத்திருக்கும் போது அவை திடீரென சிதறி விழுந்து விட்டால் முதலில் ந்நூறு ரூபாய் நூட்டுகளைத் தானே எடுக்கிறோம். அதுப்போலவே  எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ? என்று புரிந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

           ஒரு தந்தை கார் கழுவும் இடத்தில் நின்று கொண்டு தனது காரினைச் சுத்தம் செய்வதைக் கூர்ந்து கவனித்துச் கொண்டிருந்தார். அவரது மகன் அவரைத் தேடி வந்தான். தந்தை அவனிடம்,"மகனே ,நான் இந்தக் காரை மிகவும் நேசிக்கின்றேன். எனவே, இதைக் கவனமாக சுத்தம் செய்கிறார்களா என்று கண்காணிக்கத் தான் வந்தேன்" என்றார்.
 
          மகன் தந்தையிடம் "தந்தையே, நான் உங்கள் மகன் , இந்தக் காரை கவனிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தில் ஒரு பகுதியாவது என்னைக் கவனிக்க செலவிட்டீர்களா?" என்று கேட்டதும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது.  தன் தவறை உணர்ந்தார்.

          முக்கியத்துவம் தர வேண்டிய காரியங்களில் நேரத்தை முதலில் முதலீடு செய்ய வேண்டும் . நேரத்திருடர்களான அளவற்ற பேச்சு, பொழுது போக்கு, அதிக ஓய்வு, அதிக தூக்கம், அதிக விளையாட்டு என்று நம்மைத் தொடரும் விசயங்களில் கவனமாக இருந்து அவற்றைப் புறக்கணித்து விட்டால் நேரம் நம் கையில் இருக்கும்.

          ஒவ்வொரு நொடியும் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டால் விழிப்புடன் செயல்படுவோம். பொன்னை, பொருளை சேமிப்பது என்பதை விட நேரத்தைச் சேமிக்கும் வகையில் செயல்படுவது அர்த்தமுள்ளது.

          ஏனென்றால், வாழ்க்கை நிமிடங்களால் ஆனது!

1 comment:

  1. Yes sister..........time is gold. The examples are very nice.

    ReplyDelete