Saturday, 14 November 2015

வாழ்வின் யதார்த்தம்!

''ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது;
விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது'' (மாற்கு 13:32).



பொதுக்காலத்தின் கடைசி வாரங்களில் இருக்கக்கூடிய நமக்கு, உலகின் முடிவு, இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய, நற்செய்தி வாசகங்கள் தரப்படுகிறது. இந்த வாசகங்கள் நம்மை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக தரப்படவில்லை.

நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன, என்று சொன்னால், அதுவும் கடினமான வார்த்தை தான். மாறாக, வாழ்வின் யதார்த்தத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வாழ்வின் யதார்த்தம் என்ன? இதனுடைய முழுமையான பொருள் என்ன? என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

இந்த உலகத்தில், அனைவருக்குமே ஒரு முடிவு இருக்கிறது. எப்படி அனைவருக்கும் பிறப்பு என்கிற தொடக்கம் இருக்கிறதோ, அதேபோல இறப்பு என்னும் முடிவு இருக்கிறது. அந்த முடிவு வரக்கூடிய நாளோ, வேளையோ யாருக்கும் தெரியாது.

நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இன்று இருக்கிறவர்களில் நாளை யார் இருக்கிறார்களோ, யாருக்குமே தெரியாது. மருத்துமனைகளில் குணப்படுத்த முடியாமல் இருக்கக்கூடிய நோயாளிகளுக்குக் கூட, எப்போது அவர்களின் முடிவு இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

இறப்பு வேண்டும் என்பதனால் அது வந்துவிடக்கூடாது. இறப்பே வேண்டாம், என்று நினைக்கிறவர்களையும், அது தீண்டாமல் விடுவதில்லை. இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்து வாழ, நாளைய  வாசகம் அழைக்கிறது.

நிறைவுக் காலம் பற்றி இயேசு தம் சீடர்களுக்கு எடுத்துக் கூறினார். கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார்.


ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். நிறைவுக் காலம் எப்போது நிகழும் என்னும் கேள்விக்குப் பதில் தராததால் இயேசுவிடம் குறை நிலவியது என நாம் முடிவுசெய்யலாமா? இயேசு பாவம் தவிர மற்று அனைத்திலும் நம்மைப் போல் ஒருவரானார் என்பது உண்மையென்றால் மனிதப் பண்பில் அவர் முழுமையாகப் பங்கேற்றார் என்பதே பொருள் (காண்க: எபி 4:15). இயேசு நம்மோடு தம்மையே முற்றிலுமாக ஒன்றித்துக் கொண்டதால் அவர் நம் நிலையைத் தமதாக்கினார். அதை ஒரு விதத்தில் இறைநிலைக்கு உயர்த்தினார்.

 என்றாலும் அவர் அறியாதவை இருந்தன என்று ஏற்றுக்கொள்ள நாம் தயங்கக் கூடும். மனிதர் என்னும் முறையில் அவர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் இறைஞானமும் அறிவும் கொண்டவராக இருந்தாலும் உண்மையிலேயே மனிதராகவும் இருப்பதால் நம்மைப் போல அவரும் அறிவில் வளர்ந்தார்.

எப்போது நிறைவுக் காலம் வரும் என்பதற்கு இயேசு தரும் பதில் என்ன? நம் வாழ்வில் எந்த நேரத்திலும் இறுதிக் காலம் வரலாம். அது நாம் சாகும் தருணமாக அமையும் என்பது ஒரு பொருள். அதேபோல, நம் தலைமுறையும் தொடர்ந்து பல தலைமுறைகளும் மறைந்துபோகும் என்பது வரலாற்று நியதி. ஆனால் இன்று உயிர்வாழ்கின்ற நாம் இயேசு தொடங்கிவைத்த இறையாட்சி நம்மிடையே உள்ளது என்னும் உணர்வோடு வாழ அழைக்கப்படுகிறோம்.

வானமும் வானத்துக் கோள்களும் அதிர்ந்து, இடம் பெயர்ந்தாலும் அந்த அதிர்ச்சி நம் உள்ளத்தில் எதிரொலிப்பதுதான். அங்கே நாம் கடவுளைச் சந்திக்கின்றோம். நம்மை நிலை வாழ்வுக்கு அழைக்கும் நம் கடவுள் தமக்கே உரிய காலத்தில், விதத்தில் நம்மை மாட்சிமைப்படுத்துவார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாது.




இந்த யதார்த்தத்தைப் புரியாமல் வாழ்கிறவர்கள் இந்த உலகத்தில் ஏராளம். அதனால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் ஏராளம். நாம் வாழ்வின் யதார்த்தத்தை, எளிதாகப் புரிந்து கொண்டால், நமக்கு வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியே.

1 comment:

  1. Dear Kalai good sharing about the realities of life and death. death to the body is inevitable, but soul is eternal and lives for ever. we need to Minutely take care of the soul! thank you for the sahring

    ReplyDelete