''என்னோடு மகிழுங்கள்;
ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்'' (லூக்கா 15:6).
காணாமல்
போன ஆடு, காணாமல் போன நாணயம் என்னும் இரண்டு அருமையான உவமைகளை இன்று வாசிக்கிறோம்.
எதையாவது தொலைந்துபோன அனுபவம் உள்ளவர்களுக்குத்தான், தொலைந்ததைக் கண்டுபிடிக்கும்போது
உண்டாகும் பெருமகிழ்ச்சியின் பரிமாணம் புரியும்.
ஆடு ஒன்றை இழந்த மனிதன் காடு, மேடெல்லாம்
அலைந்து அதைத் தேடுகிறான். கண்டுபிடித்ததும், அதைத் தோள்மேல் போட்டுக்கொண்டு, அயலாரோடும்
தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்.
அதுபோலத்தான், திராக்மாவை இழந்த பெண்ணும் அதைத்
தேடிக் கண்டதும், மகிழ்ந்து, தன் தோழியரோடு அதைக் கொண்டாடுகிறாள். அவ்வாறே, மனம் மாறிய
ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார் ஆண்டவர்.
ஒப்புரவு
அருள்சாதனத்தில் கலந்துகொண்டு, பாவங்களை அறிக்கையிட்டு எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். பாவ அறிக்கை செய்யும்போது நமக்கு மட்டும் மன அமைதியும்,
மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை. வானதூதர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்னும் இயேசுவின்
செய்தி நமக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒவ்வொரு முறையும் ஆண்டவரே, நான்
பாவி, என்னை மன்னியும் என்று நாம் அறி;க்கையிடும்போதெல்லாம். விண்ணகத் தூதரிடையே நாம்
மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை உண்டாக்குகிறோம். இதை மனதில் கொண்டு, பாவ அறிக்கை செய்வோமா?
வான்தூதருக்கு மகிழ்ச்சியைத் தருவோமா!
காணாமல்
போன ஒரு ஆடு, ஒரு திராக்மா நாணயம். ஒரு விலங்கு, ஒரு பொருள். ஒரு ஆண், ஒரு பெண். கையில்
இருப்பது தொண்ணூற்றொன்பது ஆடு, ஒன்பது திராக்மா. கையில்தான் தொண்ணூற்றொன்பது ஆடு, ஒன்பது
திராக்மா இருக்கிறதே ஒரு ஆட்டை ஒரு நாணயத்தைத் தேட வேண்டுமா? அவ்வளவு அவசியமா?
நண்பா!
நீயே அந்த ஆடு. தோழீ! நீயே அந்த நாணயம். இயேசுவின் பார்வையில் தொலைந்தது ஆடல்ல, ஆயனும்தான்.
நாணயம் அல்ல, நாணயத்தின் சொந்தக்காரியும்தான். மறையுடல் கிறிஸ்துவின் அங்கங்கள் நீங்கள்.
எவ்விதத்திலும் நீங்கள் குறைந்த மதிப்புள்ளவர்கள் அல்ல, வேண்டாதவர்கள் அல்ல, மிகவும்
அவசியமானவர்கள். உங்களை இழப்பதற்கு தயாராக இல்லை.
உன்
இறைவன் உன்னைத் தேடுகிறார். கால் கடுக்க, கண்ணீர் சிந்தி, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து
உன்னைத் தேடுகிறார். இருக்கும் அனைத்தையும் உனக்காக இழக்கத் தயாராக உள்ளார்.
தந்தை
இறைவனும் தாய் திருச்சபையும் காணாமல்போன தன் மந்தையின் ஆடுகளை கனிவோடு தேடுகிறார்கள்.ஆனால்
இன்று ஆயன் தேட வேண்டும் என்ற வீம்பில் காணாமல் போகும் ஆடுகள் நிறைய உள்ளன.
ஒளிந்து
விளையாடும் ஆடுகள், கண்ணாமூச்சி ஆடும் ஆடுகள், கள்ளன் போலீஸ் ஆட்டம் ஆடும் ஆடுகள் ஆண்டவன்
அருளை வீணாக்குவதை அவர் விரும்பவில்லை. ஆயனோடு ஆடாக வாழ்வோம்.
No comments:
Post a Comment