Saturday, 7 November 2015

ஜெபமும் காணிக்கையே!

ஏழைக் கைம்பெண்

''இயேசு தம் சீடரை வரவழைத்து, 'இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட
மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (மாற்கு 12:43).

நான் 2001 -ல்  திருநேல்வேலியில் உள்ள மேலப்பாளையத்தில்  இருக்கும் போது அங்கு ஒரு ஏழை கைம்பெண்(பாட்டி என்று கூப்பிடுவோம்) இன்றும் மேலப்பாளையத்தில் இருக்கிறார்கள்.அன்று நான் இருந்த  போது எப்படி சந்தோசமாக  அருட்சகோதரிகளை சந்திக்க வருவார்களோ அதேபோல் இன்றும் சந்தோசமாக சகோதரிகளை சந்திக்க வருவது வழக்கம். 

இன்றைக்கு பாட்டியின்  வயது 105 இன்னும் அதே சந்தோசம்.
அவர்களின் மூன்றாவது பையன் திருமணமாகி வாழ்வை தாறுமாறாக வாழ்ந்து இறந்து விட்டார்.அவர் உயிருடன் இருக்கும்  போது அவர் மனமாற்றத்திற்காக  புனித மோனிக்காவை போன்று கண்ணீர் வடித்து ஜெபிப்பதை நான் கண்டது உண்டு.   

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அன்றும் இன்றும்  என்றும் அந்த பாட்டி கடவுளிடம் ஜெபிப்பதை விட்டதே இல்லை.அவர்களிடம் ஒரு நாள் கேட்டேன் பாட்டி உங்கள் வாழ்கையில் நிறைய கஷ்டங்கள் வந்த போதும் நீங்கள் ஜெபிப்பத்தை தவற விட்டதே இல்லையே எப்படி?

அதற்கு கூறுவார் கடவுள் தந்த வாழ்வு அவர் எனக்கு என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் படி அவர் நடத்துகிறார் அதை ஏற்றுக்கொள்ளவும் அவரே மனதைரியத்தை தருகிறார்.

ஆக அவருக்கு நான் கைமாற கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை.ஆகையால் முழந்தாள் இட்டு கால் வலிக்க வலிக்க ஜெபித்து அதை நான் காணிக்கையாக கொடுக்கிறேன் என்று.

அந்த பதிலில் கலக்கம் இல்லை! பயம் இல்லை! கவலை இல்லை!வலி இல்லை ! அதையும் அவர் சந்தோசமாகவே பகிர்ந்து கொண்டார்.

அன்று நான் எடுத்த முடிவு தான்   இன்று  நற்கருணை ஆராதனை நேரங்களில்  நிறைய நேரம் (1 மணி நேரம்  ) தொடர்ந்து முழந்தாள் இட்டு ஜெபிக்கின்றேன்.இன்று என் சகோதரிகளுக்கு போன் பண்ணி பாட்டி எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்தேன் .கடைசியாக நான் அவர்களை சந்த்தித்தது 2013-ல் . என் வாழ்வில் முட்டி இட்டு எல்லா வேளையிலும் ஜெபிக்க கற்றுத்தந்தவர்.

இன்றும்  பாட்டிக்காக ஜெபிக்கின்றேன். பிறருக்காக நாம் செய்யும் எளிய  ஜெபங்கள் கூட நாம் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை.  

 நாளைய நற்செய்தி பகுதி நமக்கு ஒரு வேறுபட்ட கருத்தை வைக்கிறது.அதாவது பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசுகிறார் . 

மறைநூல் அறிஞருள் சிலர் நேர்மையாக நடந்தார்கள் என்றாலும் (காண்க: மாற் 12:28-34), வேறு பலர் வெளிவேடக்காரர்களாகவும் பதவி மற்றும் பண ஆசை கொண்டவர்களாவும் நடந்துகொண்டார்கள். அவர்களைக் குறித்து இயேசு எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் ''கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்'' (மாற் 12:40). 
 
இயேசு வாழ்ந்த காலத்தில் கைம்பெண்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆணாதிக்கம் கோலோச்சிய அன்றைய சமுதாயத்தில் கைம்பெண் துணையற்ற ஒருவராக வாழ வேண்டியிருந்தது. கணவனின் சாவுக்குப் பிறகு பிறந்த வீட்டுக்கே திரும்பிச் செல்லும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டனர். இவ்வாறு துணையற்றவர்களாக இருந்த கைம்பெண்களை ஏமாற்றித் தங்களுக்குச் செல்வம் சேர்த்த மறைநூல் அறிஞரும் இயேசுவின் காலத்தில் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. 

இப்பின்னணியில் நாம் ''ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை'' என்னும் பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டும் (மாற் 12:41-44). எருசலேம் கோவிலுக்குச் சென்ற இயேசு அங்கே வைக்கப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டிகளில் மக்கள் காணிக்கை போடுவதை ''உற்று நோக்கிக் கொண்டிருந்தார்'' (மாற் 12:41). 

ஒவ்வொருவராக வந்து காணிக்கை போடுகின்றனர். சிலர் பெரும் தொகையைப் பெட்டியில் போடுகின்றனர். அப்போது காணிக்கைப் பெட்டியை நோக்கித் தயக்கத்தோடு வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண். அவரிடம் பெருமளவில் பணம் இல்லை. இரண்டு காசுகள் மட்டுமே உள்ளன. அதுவே அவருடைய முழுச் சொத்து. அச்சொத்து முழுவதையும் அவர் காணிக்கையாகக் கொடுத்துவிடுகிறார். 

 இதைக் கண்ட இயேசு தம் சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்கிறார்: ''இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' (மாற் 12:43). இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பல கருத்துக்களை அறிந்துகொள்கிறோம். 

அதாவது, சமயத்தின் பெயரால் ஏழைகள் ஒடுக்கப்பட்டது அன்று மட்டுமல்ல, இன்றும் நடந்துதான் வருகிறது. கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற வேலையே நடந்தால் அது கொடுமைதான். ஆனால் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. 

''உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக'' (மாற் 12:31) என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார். தன் உடைமையை மட்டுமன்று, தன்னை முழுவதுமே அவர் கடவுளுக்குக் காணிக்கையாக்கிவிடுகிறார். 

கடவுளிடம் அவர் கொண்ட நம்பிக்கையின் ஆழம் நம்மை வியப்புறச் செய்கிறது. கடவுளையும் பிறரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பது நம் செல்வத்தை நாம் காணிக்கையாக்க வேண்டும் என்பதோடு நின்றுவிடுவதில்லை. 

நம் உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்புணர்வோடு நாம் கடவுளை அணுகிச் செல்லும்போது நம் திறமைகள், நேரம் ஆகியவற்றையும் பிறர் நலம் சிறக்கச் செலவிடத் தயங்க மாட்டோம். 

இயேசு நம்மை நிறைய காணிக்கை போடுங்கள் என்று நம்மிடம் சொல்லவில்லை .மாறாக நம்மையே பிறர் நலனுக்காக பயன்படுத்த சொல்கிறார்.  செய்கின்ற தொழிலையும் கடமையுணர்வோடு நாம் ஆற்றும்போது அது பிறரன்புப் பணியாக மாறும். 

இவ்விதத்தில் நம் தாராள உள்ளம் வெளிப்படும். தன்னிடமிருந்த அனைத்தையும் காணிக்கையாக்கிய கைம்பெண்ணைப் போல நாமும் கடவுள் முன்னிலையில் ''செல்வர்கள்'' ஆவோம். 

நாம் பிறர் முன்னிலையில் செல்வர்கள் என்பதை தம்மட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு கடவுள் முன்னிலையில் தாரள உள்ளத்துடன் வாழ்ந்து செல்வர்கள் ஆவோம்.

ஆக, கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கும் என்ற சொல்லாடல் படி ஜெபமும் காணிக்கையே! 

அதனால் நாம் நமது ஜெபங்களையும் காணிக்கையாக கடவுளுக்கு கொடுப்போம்.
 


1 comment:

  1. இந்தக் கட்டுரையின் மூலம் செபத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete