Tuesday, 10 November 2015

கவலை ஒரு வலை!

          “நாம் நாள்தோறும் கால் மணி நேரம் கருத்தூன்றி கடினமாகக் கற்றால் எந்தக் கலையைக் கற்றுக் கொள்கிறோமோ அந்தக் கலையில் பேரறினாய் திகழ முடியும்”  என்கிறார்  சாக்ரட்டீஸ்.
          இப்படிப்பட்ட உயர்ந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அறிராகக் கூடிய சக்தியும் ஆற்றலும் இருக்கும் பொழுது சாதாரண கவலையை ஒழிக்க முடியாதா?

          கவலையை சுழற்றி எறிய முடியாதா என்றால், கட்டாயம் நம்மால் முடியும். குப்பையிலே கிடக்கின்ற நம்முடைய வாழ்வு கோபுரக் கலசமாவது எப்போது  என்ற ஏக்கம் இனியும் வேண்டாம்.

          நம்மால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும், நம்முடைய மூளை பெரிய வயல். அதில் இயற்கை எண்ணங்கள் என்ற விதைகளைத் தூவுகிறது.
          பயிர்  வளரும் அழகு சூழ்நிலையாகிய மண்ணையும் சிந்தனையாகிய எருவையும் பொறுத்து தான் அமையும்.

          வயலில் நல்ல விளைச்சல் ஏற்பட நாம் விதைக்க வேண்டும். விதைகாவிட்டால் அறுவடை செய்ய முடியாது.

          நல்ல விதையை விதைத்தால் பயிர் வளர்ந்து பலன் கொடுக்கும். ஒன்றும் செய்யாமல் சூம்பி உட்கார்ந்து கொண்டு கீதை, குரான், பைபிள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பதனால் மட்டும் எந்தவிதமான வெற்றியும் பெற்றுவிட முடியாது.

          காலையில் எழுந்ததும் இன்று நான் மகிழ்ச்சியுடன்  இருக்கப் போகிறேன் என்று முடிவு எடுத்துக் கொண்டு அதனை பல தடவை மனதிற்குள் சொல்ல வேண்டும்.

அப்பொழுது முக மலர்ச்சி ஏற்ப்படும், மகிழ்ச்சியுடன் பணியாற்றினால் கவலைக்கு இடம் ஏது?

          உலகப்புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது  ஒரு கட்டுரையை ஆணித்தரமாக எழுதினார்.

          இதை  அறிந்த கல்லூரி நிர்வாகிகள் ஷெல்லியை கல்லூரியை விட்டு வெளியேற்றினார்கள். கல்லூரிப் படிப்பை இழந்ததற்கு  ஷெல்லி கவலைப்படவில்லை.

          தன்னுடைய இலட்சிய வாழ்வுக்குக் குறுக்கே நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிவதில்  இருந்தும் அவர்  பின் வாங்கவில்லை.

          தனக்கு விருப்பமான கவிதைகளைத் தொடர்ந்து எழுதி சாகாவரம் பெற்றார். செய்யும் பணியில் ஆர்வம் காட்டுவதையும் அவர் நிறுத்தவே இல்லை.
`        இறக்கும்  வரையில் இன்புற கவிதைகளை இயற்றினார். எதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டால் கவலை எப்படி உள்ளே நுழைய  முடியும் ? இந்த உலகத்தைப் பார்க்க முடியாதவர்களும், நடக்க இயலாதவர்களும் , பேசமுடியாதவர்களும் இருக்கும்பொழுது நமக்கு உலகத்தைப் பார்க்கவும், அன்பாக பேசவும் , விரைவாக நடக்கவும் வரம் அருளப்பட்டு இருக்கிறது.  இந்த வரத்தை நாம் பயன்படுத்திக் கொண்டால் கவலைக்கு இடம் ஏது? 

இந்த வரம் நமக்கு இருக்கும் பொழுது எதற்காகக் கவலைப்பட வேண்டும்! நம்முடைய சோகத்தை கால்களுக்கு அனுப்பி நடக்கும் சக்தியை இழக்க அனுமதி கொடுத்துவிடக்  கூடாது.

          நம்முடைய மனம் துடிப்புடன் இருந்தால் கால்களும் துடிப்புடன் செயல்புரியும். இந்த துடிப்புடன் இருக்கும் போது எப்படி கவலை ஏற்பட முடியும்?

          உடல் முழுவதும் ரத்தத்துடன் ரத்தமாக உற்ச்சாகத்தின் சாறு கலந்து ஓட வேண்டும் .பாரதியாரிடம் ஒரு கிழவிக்கு அளவு கடந்த அன்பு இருந்தது.

          ஒருநாள் மாலைப்பொழுதில் பாரதியார் வந்து கொண்டிருந்த வண்டி அவளுடைய வீட்டின் முன் நின்றவுடன் கிழவி தான் சமைத்து வைத்திருந்த உணவைக்  கொடுத்தாள்.

          பாரதியார் அதனைச் சாப்பிட்டப் போது அது மிகவும் சுவையாக இருப்பதை கண்டு அமிர்தம்! அமிர்தம்!  என்று கூறியபடி "ஓட்டடாதேரை " என்றார்.  அவர்  தன்னை தேவன் என்றும், தான் அமர்ந்து இருப்பது தேர் என்றும் எண்ணினார். தன்னை மிகவும் உயர்வாக எண்ணி இருந்தபடியால்தான், சாகாவரம் பெற்ற கவிதைகள் இயற்றினார்.

          தன்னை நம்பினார். அந்த நம்பிக்கை நலமுடன் இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து வளமான கவிதைகளை உருவாக்கினார். அதனால் தான் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மனிதனிடம் உள்ள  ஆற்றல் தான்  நம்மிடம் உள்ளது. ஆனால் நாம் இதனை உணர்ந்து கொள்ளவில்லை.


          உணர்ந்துக் கொண்டால் கவலைப் பட மாட்டோம். தேவை இல்லாத கவலையை நாமே பிடித்துக் கொண்டு வந்து இருக்க மாட்டோம். கவலை வாழ்க்கைக்குத் தேவையே இல்லை என்பதை நாம் கட்டாயம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment