Wednesday 28 October 2015

ஜெபமாலையும் நானும் - 3 (மகிமை நிறை மறை உண்மைகள்)

 நான்  மகிமை நிறை மறை உண்மைகளை பற்றி பகிர வேண்டும் என்றால் இன்னொரு  ஜெபமும்  எனக்கு பிடித்தமான ஜெபமும் கூட .அதை நாம் சொல்லும் போதே நான்கு மறை உண்மைகளையும் தியானித்தது போன்ற உணர்வு.

அந்த ஜெபம் வேறொன்றும் இல்லை விசுவாசப் பிரமாணம் தான் . இதில்
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற வார்த்தையை சொல்லும் போது நான் கிறிஸ்தவள் என்பதில் பெருமை அடைந்ததுண்டு நிறைய நேரங்களில்.
அதற்காக நான் கடவுளுக்கு தொடர்ந்து நன்றி கூறிக்கொண்டிருக்கிறேன். தூக்கத்தில் என்னை எழுப்பி இயேசு உயிர்ப்பின் மகத்துவத்தை  கேட்டால் கூட  விசுவாச பிரமாணத்தின் இந்த வரிகளை சொல்வதில் பெருமிதம் அடைவேன்.
மகிமை நிறை மறை உண்மைகள் நமக்கு உணர்த்துவது என்ன என்பதை பார்ப்போம்.
1.           இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
2.           இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3.           தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4.           இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
5.           இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !
மேலே கலர் பெற்றிருக்கும்  எழுத்துகளின் படி வாழ்ந்தவர் தான் நம்  அன்னை மரியாள்.

இந்த தேவ ரகசியத்தில் நம் அன்னை நம்மை ஒரு பலசாலியாக தன் மகனை போன்று நாமும் உயிர்க்க வேண்டும் என்று பலப்படுத்துகிறார்.அன்னையின் திடப்படுத்தும் வார்த்தைகள் யாவை ?  
1.   அச்சத்தினின்று உயிர்க்க 
2.   குற்ற உணர்வு, பழி உணர்வு போன்ற தீவிர உணர்வுகளிலிருந்து உயிர்க்க 
3.   தீவிர ஆசைகளிலிருந்து உயிர்க்க 
4.   பொருள்கள், மனிதர்கள், இடங்களின்மீதுள்ள பற்றுகளிலிருந்து உயிர்க்க 
5.   கவலையினின்று உயிர்க்க 
இவையே அன்னையின் திடப்படுத்தும் வார்த்தைகள். இந்த அன்னை நம்மை பாவத்தில் இருந்து விலகி வாழவும் வழி கூறுகிறாள். 

 இயேசு பிறந்ததில் இருந்த மகிழ்ச்சியை விட அவர் உயிர்த்ததில் இருந்த  மகிழ்சியே அதிகம் நம் அன்னைக்கு . 

''மரியா... 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்...
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்' என்றார்'' (லூக்கா 1:49,52)

மரியாளின் பாடல் கடவுள் மரியாளுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதத்தைப்பற்றி நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது. மரியாள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். எந்த அளவுக்கு என்றால், தந்தையாகிய கடவுளே மரியாளை கபிரியேல் தூதர் வழியாக வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவள். 

அன்னைமரியாளுக்கு கடவுளின் மகனைத்தாங்கும் பேறு கிடைத்த அதே வேளையில் அவளுக்கு ஒரு துயரம் நிறைந்த செய்தியும் தரப்படுகிறது. அதாவது, அவளது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்பதுதான் அந்த செய்தி. அதாவது, கடவுளின் ஆசீர் நமக்குக் கிடைக்கும்போது, துன்பங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிற செய்தியை இது நமக்குத்தருகிறது.
வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக துன்பம் வருகிறபோது, வாழ்வை ஒரு பாரமாக எண்ணிவிடக்கூடாது. துன்பமும், இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த நியதியை அறிந்துகொண்டால் வாழ்வு இன்பம்தான். இந்த வாழ்வியல் கலையை அன்னைமரியாள் நமக்கு தன் ஒரே மகனின் உயிர்ப்பின் மூலமாக  கற்றுத்தருகிறார் . 

நம் அன்னை துன்பம் வருகிறது என்பதற்காக, இன்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. துன்பத்தைத்தாங்குவதன் மூலமாக அதையும் இன்பமாக மாற்ற முடியும் என்பதை அவர் வாழ்ந்துகாட்டுகிறார்.

நம் அன்னை இயேசு  உயிர்ப்பிற்கு சான்று பகிர்ந்து  தூய ஆவியை பெற்றுக்கொள்கிறார். அதனால் தான் என்னவோ உயிருடன் விண்ணகம் சென்று விண்ணக மண்ணக அரசியாக முடி சூட்டப்பெற்று தந்தையாம் கடவுளிடம் நமக்காக பரிந்து பேசுகிறார். 

நம் அன்னை மரியாள் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை. அவளுடைய வாழ்வு நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அன்னையின் வழிகாட்டுதலில் நாம் நடந்தாலே, அது நமக்கு இறைஆசீரைப்பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. 

அன்னையின் அன்புக்கரங்களில் நம்மை ஒப்படைத்து, இயேசுவோடு இணைந்து வாழ்வோம்.
 இதைத்தான் இந்த மகிமை  நிறை மறை உண்மைகள் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் உணர்த்தும் உண்மை.







No comments:

Post a Comment