Thursday 29 October 2015

கரம் பிடித்து


''இயேசு அவர்களை நோக்கி, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில்; விழுந்தால்
ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?' என்று கேட்டார்.
அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக்கா 14:5-6).

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல்”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.

மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர்.

இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார்.

ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார்.

 நலப்படுத்திய தனது செயலையும் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சிலும், செயலிலும் உள்ள நியாயத்தை உணர்ந்த அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது.

நிறைய நேரங்களில் நாம் பிறரை நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சட்டம் பேசியே  போட்டே நேரத்தை கழித்துவிட்டோம் .பேச்சு மட்டுமே நம்மிடம்  இருக்கும் . செயல் இருக்காது. ஆனால் இயேசுவை பாருங்கள் எப்படி செயல்வழி கற்பித்தலை அழகாக செயல்படுத்துகிறார்.
 
இயேசுநாதர் எந்த கல்லூரியும் செல்லவில்லை.எந்த பழைய சிலபசும் தெரியாது.புதிய சிலபசும் தெரியாது.அவருக்கு தெரிந்தது எல்லாமே தந்தையின் திருவுளம்  நிறைவேற்ற வேண்டும் என்ற சிலபஸ் மட்டும் தான்.  

இந்த  ப்ராக்டிக்களை(செயல்வழி கற்ப்பித்தலை)   தொடங்க தவளை, கரப்பான்பூச்சி கத்தரிக்கோல் எல்லாம் தேவை இல்லை.நல்ல தாரளமுள்ள மனமும் அன்பும் இருந்தால் போதும்.  
   
  ஆக, நாம் பிறருக்குப் போதிக்க விரும்பும் நல்ல மதிப்பீடுகளை நாம் கடைப்பிடித்து, அதன்வழி செயல்வழிக் கற்பித்தலை நாமும் செயல்படுத்தலாமே. 

இயேசுவை போன்று துன்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் கரம்பிடித்து தூக்கி விடலாமே.
 

நாளை(30.10.2015) பிறந்த நாளை கொண்டாடும் என் கரம் பற்றி வழிநடத்திய  ஞானத்தந்தை அருட்  தந்தை பெனெடிக்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
 


 

No comments:

Post a Comment