Sunday 25 October 2015

அன்பின் ஆழம்

''இயேசு, 'பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். 
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 13:16).


நாளைய நற்செய்தி இயேசு நம்மேல் வைத்திருக்கும் உயர்ந்த அன்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 

தொழுகைக்கூடத்தில் போதிப்பது இயேசுவுக்கு இதுதான் கடைசிமுறை. ஏனென்றால், இயேசுவைக்குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவருடைய எதிரிகள், இயேசுவைச்சுற்றி, சுற்றி வந்தனர். இப்போது அவர்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார்.


இன்றைய நற்செய்தியில் இயேசு பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவரின் கூன் விழுந்த நிலையைக்குணப்படுத்துகிறார். ஓய்வுநாளில் குணப்படுத்தக்கூடாது என்று இயேசுவிடம் நேரடியாகச்சொல்ல திராணியற்ற, அந்த தொழுகைக்கூடத்தலைவன், மக்கள் மீது தனது கோபத்தைக்காட்டுகிறான். 

இயேசுவின் வாதம் எளிமையான வாதம். பொதுவாக, பரிசேயர்கள் கால்நடைகளைக் கொடுமைப்படுத்துவதை விரும்பாதவர்கள். எனவேதான், ஓய்வுநாளில் விலங்குகளை அவிழ்த்து, அதற்கு தண்ணீர் காட்டுவது சட்டப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது வேலையாகக் கருதப்படவில்லை. ஒரு சாதாரண கால்நடைக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிற சூழலில், 18 ஆண்டுகளாக நோயுற்றிருந்த பெண்ணின் குறையைப்போக்கியதில் என்ன தவறு இருக்க முடியும்? என்பதுதான் இயேசுவின் எளிமையான வாதம்.


சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் நாம் என்பது இயேசுவின் அருள்வாக்கு. நமது தலையில் இருக்கிற முடிகளின் எண்ணிக்கை கூட எண்ணப்பட்டிருக்கிறது என இயேசு சொல்கிறார். அந்த அளவுக்கு படைப்பின் உயர்ந்த சிகரமாகிய நம்மேல் அவர் அன்பு வைத்திருக்கிறார். அந்த அன்பின் ஆழம் தெரியாமல், மற்றவர்கள் இயேசுவின் போதனையில் குற்றம் காண்பது வருத்தத்துக்குரியது.

பிறரிடம் குற்றம் காண்பதை அறவே நிறுத்துவோம்.அவ்வாறு செய்தால் நாம் பிறரை அன்பு செய்ய நேரம் இருக்காது.  

இயேசுவே!  உம்மையும், பிறரையும்    அன்பு செய்ய கூடிய குழந்தை உள்ளதை எங்களுக்கு தாரும்.

No comments:

Post a Comment