Monday 19 October 2015

அன்னையோடு இணைந்து நாமும் கடவுளை போற்றுவோம் !




கி.பி 1571 இல் நடந்த கடற்போரில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வென்றபோது, அவர்களுக்கு கிடைத்த வெற்றி, செபமாலையின் மகத்துவத்தால் விளைந்தது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக திருத்தந்தை ஐந்தாம் பயஸ் இந்த நாளை வெற்றி அன்னையின் திருவிழாவாக அறிவித்தார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரி காலத்தில் இந்த நாள் செபமாலை அன்னையின் திருவிழாவாக அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. துருக்கியர் இரண்டாம் முறையாக தோல்வியுற்றபோது, திருத்தந்தை ஆறாம் கிளமண்ட் இத்திருவிழாவை வழிபாட்டு அட்டவணையில் சேர்த்தார். ஆனால், திருத்தந்தை பத்தாம் பயஸ், இந்த விழாவானது ஏற்கெனவே கொண்டாடப்பட்ட அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடுவதே, சிறந்தது எனக்கருதி, அதற்கான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன்படி, தற்பொழுது இவ்விழாவானது, அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடப்படுகின்றது.
செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும். இது திரும்ப திரும்பச் சொல்லுவதாக அமைந்திருந்தாலும் கூட, அதையே ஒரு மனவலிமை செபமாக மாற்றிச் செபிக்கலாம். ஒரே வாக்கியங்களை திரும்ப திரும்ப சொல்லி செபிக்கும்போது, தந்தையோடு நம்மையே இணைப்பதற்கு அதற்கு பேருதவியாக இருக்கிறது. முத்திப்பேறு பெற்ற பாட்லோ லோங்கோவின் வார்த்தைகள் இங்கு நினைவுகூறத்தக்கது: ”செபமாலை நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு சங்கிலி”.
இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கொடையாக மட்டுமல்ல, அனைத்து வேளைகளிலும் பேருதவியாக இருக்கக்கூடிய அன்னை மரியாளோடு இணைந்து நாமும் கடவுளைப் போற்றுவோம். அவரது பரிந்துரையின் மூலமாக ஏராளமான உதவிகளைப் பெற்று, தொடர்ந்து கடவுளை மகிமைப்படுத்துவோம். 


6 comments: