Monday 26 October 2015

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும்.
ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று.
வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19).
நாளைய நற்செய்தி நமக்கு உரைப்பது இதுவே .

கடுகு விதையை தோட்டத்தில் விதைத்ததும் அது முளைத்து வளர்ந்து மரமாகிறது. அதுவும் சாதாரண மரமல்ல. வானத்துப் பறவைகள் தங்கும் பெரிய மரமாகிறது. கேட்க சிரிப்பாக இருக்கிறதல்லவா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

கொஞ்சம் புளிப்பு மாவு மூன்று மரக்கால் மாவையும் புளிக்கச் செய்கிறது. இதை ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இது அறிவியல் உண்மை.ஒரு அறிவியல் உண்மையைச் சொல்லி, அறிவுக்கு அப்பாற்பட்ட இறையியல் உண்மையை உணர்த்துகிறார். 

கடுகு விதையிலிருந்து வளர்வது செடியா? மரமா? என்ற ஆய்வு நடத்தும் அறிவியல் புத்தகம் அல்ல திருவிவிலியம். மனித மீட்பின் வரலாற்றில் இறைவனும் இறைவனின் செயல்பாடுகளின் தொகுப்பே திருவிவிலியம்.

இறையாட்சியின் தன்மையை, அதன் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை, கடுகு விதை மரமாகும் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் ஒப்பிடுகிறார். இறையாட்சி கடவுளின் செயல்பாடு. எனவே இறையாட்சியில் கடுகு செடியும் மரமாகும். "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" லூக் 1'37

தண்ணீரை இரசமாக்க முடியும். இரசத்தை இரத்தமாக்க முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும். இறந்தும் உயிர்த்தெழ முடியும். கடுகிலிருந்து மரத்தை உண்டாக்குவதா முடியாத காரியம். 

எனவேதான் இறை அரசு என்ற திருச்சபை மரம் எத்தனை கிளைகள் வெட்டப்பட்டாலும் என்னென்ன விதத்தில் வெட்டினாலும் என்னென்ன விதத்தில் அழித்தாலும் பரந்து விரிந்து வானத்துப்("கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து") பறவைகள்("மக்கள்" லூக்13'29) வந்து தங்கும் மரமாகும்.

எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார் திருப்பாடலாசிரியர்.

நாமும் பெரிய செயல்களில் கவனம் கொள்ளாமல், சின்னஞ்சிறு செயல்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவோம், இறைவனை மாட்சிமைப்படுத்துவோம்.



1 comment:

  1. சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் ! I like very much.

    ReplyDelete