Saturday 13 February 2016

சோதனைகள் வெல்வோம் சாதனைகள் படைப்போம்

மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகிறார். யூதர்களுக்கு மோசே மிகப்பெரிய இறைவாக்கினர். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை ‘புதிய மோசேயாக’ அறிமுகப்படுத்துகிறார்.

அதாவது திருச்சட்டத்தை நிறைவுசெய்ய வந்த புதிய மோசே தான் இயேசுகிறிஸ்து என்கிற கருத்தியலுக்கு மத்தேயு முக்கியத்துவம் தருகிறார்.


எனவே தான் மோசேயின் வாழ்வோடு நடந்த நிகழ்வுகளை இயேசுவோடு ஒப்பீடு செய்கிறார். மோசே பிறந்தபொழுது குழந்தையைக்கொல்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டது போல, இயேசுவின் பிறப்பின்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கிறார்.


மோசே இஸ்ரயேல் மக்களை பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு வழிநடத்தியதுபோல, புதிய மோசே இயேசுகிறிஸ்துவும் பாவ இருளில் இருக்கிற மக்களை, ஒளிவாழ்வுக்கு அழைத்துச்செல்வதை படிப்படியாக விவரிக்கிறார். அதனுடைய முக்கியமான பகுதிதான் இயேசு அலகையினால் சோதிக்கப்படுகிற நிகழ்ச்சி.

சோதனை என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கின்ற ஒன்று. அதிலும் குறிப்பாக, நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கடவுளின் இறையாட்சி இந்த மண்ணில் வர உழைக்கிற ஒவ்வொவருடைய வாழ்விலும் சோதனைகள் நிச்சயமாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குத்தெளிவாகக்காட்டுகிறது.

அத்தகைய சோதனையைக்கண்டு பயப்படாமல், துணிவோடு, இறைவனின் துணையை நாம் நாடினால் நம்மால் சோதனைகளை வெல்லமுடியும் என்பது இயேசு கற்றுத்தருகிற பாடம். இயேசு பலவீனமாக இருக்கிறார். உடலால், உள்ளத்தால் சோர்ந்து இருக்கிறார். ஆனாலும், அவர் தெளிவாக, துணிவோடு இருக்கிறார்.

 ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரைச்சோதிக்கிறபொழுது, இறைவார்த்தையின் வழியாக இறைவனின் வல்லமை அவரிடமிருந்து வெளிப்படுகிறது. இறைவார்த்தையின் இறைப்பிரசன்னம் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரை வழிநடத்துகிறது. இறுதியில் சோதனைகளை எதிர்த்து வெற்றிபெறுகிறார்.

நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வை அணுகும்போது, நமக்கு ஏற்படுகின்ற தடைக்கற்கள் ஏராளம், ஏராளம். அதைவிட நமக்கு வருகிற சவால்கள் நம்மை பாதாளத்திற்கு இழுத்துச்செல்லும் வலிமை படைத்தவை.

ஆனால், எவற்றிற்கும் அஞ்சாமல் துணிவோடு, இறைப்பிரசன்னத்தை நாடி அவற்றை எதிர்கொண்டால், நாம் வெற்றி பெறுவோம்.


No comments:

Post a Comment