Tuesday 9 February 2016

சாம்பற்புதன்!

நாளை நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் ஓர் அருளின் காலம், மனமாற்றத்தின் காலம்.

 இயேசுவின் காலடிச்சுவட்டையும், கல்வாரி முகட்டையும், கண்முன் நிறுத்தும் காலம். தவம் என்பது காவி உடை தரிப்பதும் , கவலை கொள்வதாய் காட்டுவதும் அன்று.

மாறாக இதயத்தை உடைப்பதும் , இல்லார்க்கும், இயலார்க்கும் இரங்குவது. ஆசை வலைகளினின்று அகன்று வேடனில்லா, கபடமில்லா,சாதி-சமய பேதமில்லா வாழ்வு வாழ்வது. ஆனால் நாம் பகட்டிலும், ஆடம்பரத்திலும் , சமூகக்கௌரவம் இருப்பதாக ஓர் மாயச் சிந்தனையில் மயங்கிக் கிடக்கிறோம்.

ஆடம்பரம் அகற்றி அளவோடு அனுபவித்து எளிமையை கடை பிடித்து ஏழைகளை தாங்கி நிற்பதே உண்மையான தவம் என்றுணர தவறியதால் இன்று உலகம் பதட்டத்திலும் , பயத்திலும்,.பட்டினியிலும் பயணிக்கிறது.ஈதல் , இறைவேண்டல், நோன்பிருத்தல் ஆகிய செயல்களை ஓர் புதிய கோணத்தில் கொண்டு செல்ல அழைக்கும் இயேசுவின் பார்வையை நமதாக்குவோம்.

பக்தி செயல்கள் தம்பட்டம் அடிக்கவல்ல. நமக்குள் நம்மைத் தேடி நான் என்ற மனநிலையை விட்டு நாம் என்ற பொது நிலைக்கு நம் ஒவ்வொருவரையும் கொண்டு வரத் தேவையான அருமருந்து  அவை என்றுணர்வோம். நம் அக ஆன்மிகம் , இயேசுவின் ஆன்மிகமாகி நம்மில் ஒளிரட்டும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.

 இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.

தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறுத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது.

இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. மனமாற்றம் தான், இந்த தவக்காலம் நமக்கு விடுக்கக்கூடிய அழைப்பு. நமது வாழ்வை மாற்றுவதற்காக இந்த நாட்களிலே சிந்திப்போம். நாம் செயல்படுத்த வேண்டிய, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வழிமுறைகளை யோசிப்போம். அதனை செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு தவக்காலமும் வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இருக்கக்கூடிய நிலைமை மாற வேண்டும். தவக்காலங்களில் மட்டும் கடின நோன்பு இருப்பதும், ஒறுத்தல் முயற்சி செய்வதும், தவக்காலம் முடிந்ததும், பழைய வாழ்வே கதி என்று கிடக்கக்கூடிய காலம் மாற வேண்டும். அந்த மாற்றத்திற்காக, நாம் பாடுபடுவோம்.

1 comment: