Thursday 10 December 2015

பாவிகளுக்கும் நண்பன்!

''இயேசு, 'மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்.
இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும்
பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 11:19).

சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள்.

திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19).

இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

 இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது.

 இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது.

அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல.

திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி.


நமதாண்டவர் இரக்கம் உள்ளவர்.அவர் எல்லோருக்கும் இரங்குவார்  என்பதை விசுவசிபோம்.




No comments:

Post a Comment