Friday 18 December 2015

பாடம் புகட்டுதல்!

''இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.

ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'

உம்மால் பேசவே இயலாது' என்றார்'' (லூக்கா 1:20)



நாளைய நற்செய்தியில் கபிரியேல் வானதூதர் மரியாவிடம் சென்று கடவுளின் செய்தியை வழங்கியதுபோல செக்கரியாவிடமும் ஒரு செய்தி வழங்குகிறார். மரியா தமக்க வழங்கப்பட்ட செய்தியை உடனடியாக ஏற்கத் தயங்கினார். ஆனால் அவர் தயங்கவேண்டியதில்லை என வானதூதர் உறுதியளித்ததும் மரியா கடவுளின் திருவுளத்திற்கு அமைந்தார்.


செக்கரியாவின் அனுபவம் சிறிது வேறுபட்டிருப்பதைக் காண்கின்றோம். இங்கேயும் கடவுளின் செய்தி செக்கரியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவர் தமக்கு வழங்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்க முடியாது என்று வாதாடுவதுபோலத் தெரிகிறது .


எனவேதான் வானதூதர் அவரைப் பார்த்து, ''என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை'' என்று இடித்துக் கூறுகின்றார். செக்கரியாவுக்கு ஒரு சிறு தண்டனையும் வழங்கப்படுகிறது. அதாவது, சிறிது காலம் அவர் பேச்சற்றவராக இருப்பார்.


 நம் வாழ்க்கை அனுபவத்திலும் நாம் கடவுளின் வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நேரங்களை உணரலாம். அப்போது கடவுளை விட நாம் அதிகம் தெரிந்தவர்கள் போல நாம் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் கடவுள் நமக்குச் சில வேளைகளில் ஒரு பாடம் புகட்டத் தவறுவதில்லை.


 நாம் நினைப்பதே சரி என்னும் மன நிலை நம்மிடம் இருத்தல் ஆகாது. பிறர் கூறுகின்ற சொற்களிலும் நமக்கென ஒரு கருத்துப் புதைந்திருப்பதை நாம் காணத் தவறலாகாது. இவ்வாறு பிறர் நமக்கு ஒரு கருத்தை உணர்த்தும்போது கடவுளே அவர்கள் வழியாக நம்மோடு பேசுகின்ற அனுபவத்தையும் நாம் சிலவேளைகளில் பெறுகிறோம்.


 கடவுளின் செயல்பாடு எப்போதும் நேரடியாக நிகழ்வதில்லை. சிலவேளைகளில் பிற மனிதர் வழியாகக் கடவுள் நம்மை வழிநடத்துவார். அப்போது கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க நாம் தவறிவிடல் ஆகாது. கடவுள் நமக்கு ஒரு பாடம் புகட்டும் வேளையிலும் நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது என்பதற்கும் செக்கரியா ஓர் உதாரணமாகிறார்.


வயதில் முதிர்ந்த அவருக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் யோவான் என்றொரு குழந்தை பிறந்த பிறகு செக்கரியா பேசும் திறனைப் பெறுகின்றார். நாமும் துன்ப நேரத்திற்குப் பிறகு மகிழ்ச்சியைப் பெறுவதும் உண்டு. அதுவும் கடவுளின் அருளே.

1 comment:

  1. God speaks to his chosen ones always, it is we who dose not believe and pay heed to His inner voice. Good Kalai, Through Human intervene God Enter into life. Thanks for the reminder to pray for the grace

    ReplyDelete