Monday 7 December 2015

அமல அன்னையை போல் மாசற்ற வாழ்வு வாழ்வோம்!

HAPPY  FEAST  TO  ALL  OF  YOU
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்.(எபே. 1:4) .

நாளை எங்களது DMI சபையின் பாதுகாவலி தூய  அமல அன்னையின் பெருவிழா.ஆகையால், சபையில் உள்ள அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.அமல அன்னை மாசற்ற அன்னை.

அத்தகைய அன்னையின் பெயரைத்தாங்கிய சபையில் நான் துறவு  வாழ்வை மேற்கொள்ள வாய்ப்புக்கொடுத்த கடவுளுக்கும் நன்றி.சபையாருக்கும் நன்றி.என்னை இச்சபைக்கென்று  தாரை வார்த்துக்கொடுத்த என் பெற்றோருக்கும் நன்றி.

நாளை நான் படித்த சென்னை DMI காலேஜும்,நான் பணி செய்த ஆரல்வாய்மொழி DMI காலேஜும் அமல அன்னையின் பெயரை தாங்கியிருப்பதால் இந்த இரு நிறுவனங்களுக்கும் நாமத் திருவிழா.எனவே இங்கு பணி செய்யும், படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும்,ஆசிரியர் பெருந்தகையருக்கும்  மற்றும் அனைவருக்கும் எனது அமல அன்னையின் பெருநாள் வாழ்த்துகள்.

அமல அன்னைக்கு!

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாள்  நம் அன்னை !
அன்னைக்கென  ஓர் லட்சியம் உண்டெனில் அது மகனின் லட்சியமாகவே இருந்தது!
அன்னையின் ஒரே ஆசை கடவுளின் திருவுளத்துக்கு கீழ்படிந்து பிள்ளைகளாகிய நம் தேவைகளை
நிறைவேற்றுவதாகத்தானிருந்தது!
எங்களுக்காக உம்  ஆசைகள் முழுவதும்  துறந்தாய் எங்கள் அன்னையே!

புவியில்  நீ பட்ட அவல வாழ்கை மறக்கத்தான்
முடியுமோ!
உம் பிள்ளைகளாகிய நாங்கள்  மாசில்லாமல் வாழ்வதே உம் ஆசைகள் என்பதை புரிந்துகொண்டோம் அம்மா!
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர் நீர்  அம்மா!

இந்த  உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால் தயங்காமல் சொல்வேன் அம்மா  நீதானென்று!

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு.

மரியாவைப்பொருத்தமட்டில், ஜென்மப்  பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் ஜென்மப்பாவம்  நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.


ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு ,நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும். 


இவ்வாறு மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.


புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.


நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். கன்னி  மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்

.
இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம் ?

இன்றைய உலகம்  எதை வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்கு மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்.


அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை தமது  சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம்  தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும், அவர் தாய்  மரியாளிடமும் கற்றுக்கொள்வோம் .

அனைவருக்கும் அமல அன்னையின் பெருவிழா வாழ்த்துக்கள் !



No comments:

Post a Comment