Wednesday 16 December 2015

குல பெருமை காப்போம்!

''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு'' (மத்தேயு 1:16)


 நாளை இயேசுவின் மூதாதையர் யார் என்னும் கேள்விக்குப் பதில் தருவதாக அமைந்துள்ள நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ளது (மத் 1:1-17). இதில் சில சிறப்புக் கூறுகள் உண்டு.


பொதுவாக இன்னாரின் தந்தை இன்னார் என்று வரிசைப்படுத்துவதே எபிரேய வழக்கம். ஆனால் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் நான்கு பெண்களின் பெயர் வருகிறது (தாமார், இராகாபு, ரூத்து, உரியாவின் மனைவி பத்சேபா (காண்க: 2 சாமு 11:3) என்னும் இந்நான்கு பெண்களுமே வெவ்வேறு வகைகளில் சமுதாயத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள்.


 இவர்களும் இயேசுவின் மூதாதையராகக் குறிக்கப்படுவது வியப்புக்குரிய செய்தியே. அதைவிடவும் வியப்புக்குரியது இயேசுவின் தாய் கணவரின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்து மகவாக ஈன்றளித்தது ஆகும். யோசேப்பின் வழியில் இயேசு தாவீது மன்னரின் வாரிசாகிறார். ஆனால் மரியா வழியாக அவர் கடவுளின் வல்லமையால் மனிதக் குழந்தையாகப் பிறக்கிறார்.

இயேசுவின் மனித வாழ்க்கையின் தொடக்கமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. கடவுள் கொணர்கின்ற ஒழுங்கு மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இங்கே காண்கின்றோம். குறையுள்ள மனிதரின் துணையோடு கடவுள் குறையற்ற செயல்களை நிகழ்த்த முடியும்.

 வரம்புக்கு உட்பட்ட மனித சக்தியைவிட கடவுளின் சக்தி வலிமை வாய்ந்தது. இதை நம் வாழ்வு அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனித வலுவின்மையில் கடவுளின் வல்லமை துலங்குகிறது. இக்கருத்தைப் பவுல் அழகாக விளக்கியுள்ளார்.

எப்போது நாம் நம் சொந்த சக்தியைப் பெரிதாக எண்ணுகிறோமோ அப்போது அது குறையுள்ளது என்பதையும் கடவுள் நமக்கு உணர்த்திவிடுகிறார். நம் பட்டறிவு நமக்குப் பாடம் புகட்டியபின் நாம் மீண்டும் கடவுளை அணுகிச் சென்று அவருடைய கைகளில் நம்மை ஒப்புவிக்கும்போது நம் வாழ்வு ஒளிபெறும்.


இது என்ன பெயர் பட்டியல் என்று நம்மில் பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நற்செய்தியாளர் மத்தேயு இதை எழுதியதில் பொருள் உள்ளது. தன்னுடைய கிறிஸ்து இறையியலை இப்பகுதியில் மத்தேயு உள்ளடக்கியுள்ளார்.

தன்னுடைய நற்செய்தியை யூதருக்கு எழுதியதால், கிறிஸ்து தாவீதின் வழித்தோன்றல் என்னும் செய்தியையும், ஆபிரகாமின் வாரிசு என்பதையும் உறுதிப்படுத்த இவர்களை முன்னிலைப்படுத்தி முதன்மைப்படுத்தி தன் நற்செய்தியைத் தொடங்குகிறார்.

இயேசு தாவீதின் வழித்தோன்றல் என்று மத்தேயு எழுதுவதன் மூலம், தான் அறிவிக்கும் இந்த இயேசு யூத குலத்தைச் சேர்ந்தவர் என்றும், பேரரசரின் பரம்ரையைச் சார்ந்தவர் என்றும், அபிஷுகம் செய்யப்பட்டவர் என்றும் உணர்த்துகிறார்.

அவ்வாரே ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்து என்று குறிப்பிடுவதன் மூலம் தன் நற்செய்தியை எழுதிய யூத மக்களைப் பெருமைப்படுத்துவதும் அவரது நோக்கங்களுள் ஒன்றாகும்.

இவ்வாறு இயேசுவை, அவரது மனித இயல்பை இப்பகுதியில் வெளிக்கொணரும் அதே வேளையில், யூத மக்களின் சிறப்பை உணர்த்தி, கிறிஸ்துவோடு இணைந்து வாழ அவர்களை அழைக்கிறார்.


ஒரு மனிதரின் நற்பண்புகளும், நல்லியல்புகளும் பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்தே அவருக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம். உள நலப் பண்புகள், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், அறிவுக் கூர்மை போன்றவை அனைத்துக்கும் நாம் மட்டுமல்ல பொறுப்பு.


நமது முன்னோரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதை இன்று அறிவியல் நன்கு எண்பித்துவிட்டது. எனவே, நல்ல முன்னோரிடமிருந்து உடல், உள்ள, சமூக நலனைப் பெற்றுக்கொள்கிறோம். நமது முன்னோர் ஆற்றலும், நன்மைத்தனமும் குறைந்தவர்களாக இருந்தால், நாமும் அப்படியேதான் இருப்போம், பெரிய முயற்சிகள் எடுக்காவிட்டால். எனவே, தலைமுறை அட்டவணை என்பது இன்றளவும் முக்கியமானதாக இருக்கிறது.


எனவே, வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப் பெரிய செல்வம் இன்றைய நல்ல தலைமுறைதான். எனவே, நாம் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு வாழ்ந்து, அடுத்த தலைமுறையும் அவ்வாறே வாழ வழிவகுப்போம்.


நாமும் நம் குடும்பப் பெருமை, பெற்றுள்ள அழைப்பு, இதற்கு ஏற்றார்போல வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது. ஆக, நம் குல பெருமை காப்போம்.

1 comment:

  1. dear kalai, u r good looking in the photo. very good message also. take care

    ReplyDelete