Sunday 13 December 2015

பகிர்வு!

''அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்;
உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார்'' (மத்தேயு 3:10-11).


மக்கள் மனம் மாற வேண்டும் என்றும் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றும் போதித்தார் திருமுழுக்கு யோவான். அப்போதனையைக் கேட்ட மக்களில் சிலர் தங்கள் பழைய வாழ்க்கைமுறையை மாற்றிட முன்வந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்வி இன்று நமது கேள்வியாக மாற வேண்டும்: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' (மத் 3:10).

கடவுளின் அருள் நம் உள்ளத்தைத் தொடும்போது நாம் அதற்குப் பதில்மொழி வழங்குவது தேவை. அப்பதில் மொழிதான் ஒரு கேள்வியாக உருவெடுக்கிறது: ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' இக்கேள்விக்கு யோவான் அளித்த பதில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் நாம் பகிர்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாற வேண்டும் (மத் 3:11).

 இரண்டாவது, பேராசைக்கு நாம் இடம் கொடுத்தலாகாது (மத் 3:12). மூன்றாவது, நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலாகாது (மத் 3:14). யோவான் அறிவித்த புதிய வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் அது ''பிறர் நலனில் அக்கறைகொண்டு வாழ்தலில் அடங்கும்'' எனலாம். நம்மை அடுத்திருப்போருக்கு நாம் அன்புகாட்டும்போது உண்மையிலேயே நம்மில் ''மன மாற்றம்'' நிகழ்ந்துவிட்டது எனலாம்.

 மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் நிகழ்கின்ற மாற்றம். பழைய சிந்தனைப் பாணிகளைக் கைவிட்டுவிட்டு, நலமான புதிய சிந்தனை முறைகளை நாம் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அத்தகைய மாற்றம் உள்ளத்தோடு மட்டுமே நின்றுவிடாது.

மாறாக நம் வாழ்வில் செயல்முறையில் வெளிப்படும். எனவேதான் திருமுழுக்கு யோவான், ''மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்'' என்றார் (மத் 3:8). ''இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று திருமுழுக்கு யோவான் மக்களுக்கு அறிவுறுத்தினார்.


அந்த அறிவுரை நமக்கும் பொருந்தும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1925) இதை வலியுறுத்துகிறது: ''மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை என்பதை எல்லாரும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்நலன்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் முறையான வழியில் தாம் உடைமையாகக் கொண்டிருக்கும் பொருள்களைத் தமக்கே உரியனவாக மட்டுமன்றி, எல்லாருக்கும் பொதுவானவையாகவும் கருதவேண்டும்.

அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்'.'அதை நல்ல மனதுடன் பகிர வேண்டும்.

பகிர்தலில் உள்ள சந்தோசம் வேறு எதிலும் கிடையாது. 

No comments:

Post a Comment